ஸ்டெர்லைட் ஆலை மாசற்றது நீதிமன்றத்தில் நிறுவனம் தகவல்
டெல்லி 2022 மார்ச் 16 ;தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்த குழுவினர் சுற்றுச் சூழலை மாசுபடுத்துவதாக கூறவில்லை என அதன் உரிமையாளரான வேதாந்தா குழுமம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தூத்துக்குடியில் செயல்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 2018ல் பல அமைப்புகள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளரான வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. பின் வேதாந்தா குழுமம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கலான மனு மீது நீதிபதிகள் டி ஒய் சந்திரசூட், சூரியகாந்த், விக்ரம் நாத் ஆகியோர் அமர்வு முன் 16ம் தேதி மார்ச் அன்று விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில் வேதாந்தா குழுமம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம் கூறியதாவது........... ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய இதுவரை பல குழுக்கள் அமைக்கப்பட்டன எந்த ஒரு குழுவினரும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தியாக அறிக்கை தாக்கல் செய்யவில்லை, துப்பாக்கிச் சூடு நடந்த பின் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது எனக் கூறப்படவில்லை, இவ்வாறு அவர் கூறினார். வழக்கின் விசாரணையை நீதிபதிகள் அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.