Onetamil News Logo

பா.சிவந்தி ஆதித்தனார்  மணிமண்டபத்தினை திறந்து வைத்து  தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு. பழனிசாமி ஆற்றிய விழாப் பேருரை 

Onetamil News
 

பா.சிவந்தி ஆதித்தனார்  மணிமண்டபத்தினை திறந்து வைத்து  தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு. பழனிசாமி ஆற்றிய விழாப் பேருரை     


திருச்செந்தூர் 2020 பிப்ரவரி 22 ;தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், வீரபாண்டியபட்டணத்தில் அமைக்கப்பட்டுள்ள  டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்  மணிமண்டபத்தினை திறந்து வைத்து  தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு. பழனிசாமி ஆற்றிய விழாப் பேருரை  ஆற்றினார்.
இந்த விழாவிற்கு வருகை புரிந்து சிறப்பான தலைமையுரை ஆற்றிய  துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் ,முன்னிலையுரை ஆற்றிய செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் சகோதரர் கடம்பூர் ராஜு , தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர்   க.பாண்டியராஜன் ,மற்றும் நிகழ்ச்சியிலே பங்குபெற்று சிறப்பித்தனர்.   தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், வீரபாண்டியபட்டணம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய   
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் மணிமண்டபத்தினை திறந்து வைத்து விழா பேருரையாற்றுகின்ற ஒரு நற்பாக்கியம் கிடைத்தமைக்கு முதலில் இறைவனுக்கு நன்றியை செலுத்தி, பத்திரிகை, விளையாட்டு, கல்வி, தொழில் முதலான பல்வேறு துறைகளிலும் இந்திய துணைக் கண்டத்தில் பெரும் சாதனையாளராகத் திகழ்ந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் அவரது வாழ்க்கையினை போற்றிடும் வகையில் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட மணி மண்டபத்தை திறந்து வைத்ததில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
நமது நாட்டின் வளர்ச்சிக்கு உரமாக இருப்பது பல விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகங்கள் மற்றும் சாதனையாளர்களின் தன்னலமற்ற தொண்டு தான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அப்படிப்பட்ட சாதனையாளர்களில் ஒருவர் தான் மதிப்பிற்கும், மரியாதைக்குமுரிய மறைந்த டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் அவர்கள்.    
மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள், நாட்டிற்காக பெரும் தொண்டாற்றி  பல்வேறு தியாகங்களைச் செய்த தலைவர்கள் மற்றும் சான்றோர்களை சிறப்பிக்கும் வகையிலும், அவர்களின் தியாகங்களை வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையிலும், நினைவிடங்கள், நினைவு இல்லங்கள், நினைவுச் சின்னங்கள் மற்றும் மணி மண்டபங்களை உருவாக்கி சிறப்பு செய்து தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களில் உயர்ந்து நிற்கிறார்கள். 
அவர்கள் காட்டிய வழியில், மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு, கடந்த 
9 ஆண்டுகளில் 20 நினைவகங்கள், 4 தலைவர்களுக்கு முழுதிருவுருவச் சிலை, ஒரு  நினைவுச் சின்னம், 2 நினைவு வளைவுகள் ஆகியவற்றை திறந்து வைத்துள்ளது.  இது மட்டுமல்லாமல், உன்னதத் தலைவர்களின் சிறப்பினை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில், 47 தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்களில் அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. மேலும், 11 தியாக சீலர்களுக்கு நினைவகங்கள் கட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ள மறைந்த மரியாதைக்குரிய டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்கள் மணி மண்டபத்தினை இன்று திறந்து வைத்ததில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
திரு. சி.பா.ஆதித்தனார் - கோவிந்தம்மாள் தம்பதியருக்கு இரண்டாவது புதல்வராக 1936ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி மரியாதைக்குரிய மறைந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தார். பள்ளிப்பருவத்தில் சென்னை, இராமகிருஷ்ணா உயர்நிலைப் பள்ளியில் படித்த டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் அவர்கள், பின்னர், மாநிலக் கல்லூரியில் தனது படிப்பைத் தொடர்ந்து, பி.ஏ. பட்டம் பெற்றார். கல்லூரியில் படிக்கும்போதே தேசிய மாணவர் படை (சூஊஊ) தளபதியாக இருந்ததுடன், சென்னை மாநகரில் உள்ள அனைத்துக் கல்லூரிகளின் சூஊஊ படைகளுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இவரது தந்தையார் திரு. சி.பா.ஆதித்தனார் அவர்கள், படிக்காத பாமர மக்கள் நாட்டு நடப்பை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உயரிய எண்ணத்தின் அடிப்படையில் 15.10.1942 அன்று, முதன் முதலாக மதுரையில் ‘அன்றைய செய்தியை அன்றே படியுங்கள்’ என்ற முழக்கத்துடன் ‘தந்தி’ என்ற பெயரில் நாளிதழ் ஒன்றினை தொடங்கினார். 
பின்னர் இதுவே சென்னையில் ‘தினத்தந்தி’ என்ற பெயரில் தொடங்கினார். இதன் மூலம் தமிழ்நாட்டில் பத்திரிகை வாசிக்கும் பழக்கம் அதிகரிக்க வழிவகுத்தார்.
‘விளையும் பயிர் முளையிலே தெரியும்’ என்ற பழமொழி போல், திரு. சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் படிக்கும் பொழுது ஒரு நாள் தினத்தந்தியில் வெளியிட ஒரு சிரிப்பு துணுக்கு ஒன்றினை தன் தந்தையிடம் கொடுத்தார்.  அந்த சிரிப்பு  துணுக்கு என்னவென்றால்,
ஆசிரியர் மாணவரிடம் கேட்கிறார் - பாம்பு என்று எழுதச் சொன்னால் ‘பம்பு’ என்று எழுதியிருக்கிறாயே?
அதற்கு மாணவன், பாம்புக்குத் தான் கால் கிடையாதே சார் என்று பதில் கூறுகிறார்.
தனது மகனின் பத்திரிகை ஆர்வத்தை உணர்ந்த 
திரு. சி.பா.ஆதித்தனார் அவர்கள் பத்திரிகைத் தொழிலில் தனது வாரிசாக அவரை உருவாக்கினார். 1958 ஆம் ஆண்டு திரு. சிவந்தி ஆதித்தன் தனது பட்டப்படிப்பை முடித்தவுடன், அவரை அழைத்து பத்திரிகைத் துறையில் பயிற்சி அளித்தார்.
""""பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்
அறிவூட்டும் தந்தை நல்வழி காட்டும் தலைவன்""
 
என்ற புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பாடலுக்கேற்ப,  அவரது தந்தையார், சிவந்தி ஆதித்தனுக்கு பயிற்சி அளித்தார்.  அச்சு  கோர்ப்பாளராக, அச்சிடுபவராக, பார்சல் கட்டி அனுப்புவராக,  நிருபராக, துணை ஆசிரியராக என்று பத்திரிகைத் துறையின் அத்தனை அம்சங்களிலும் அவருக்கு பயிற்சி கொடுத்தார்.  பின்னர் திரு. சிவந்தி ஆதித்தன் அவர்கள் நெல்லைக்கு சென்று ‘மாலை முரசு’ பத்திரிகையை தொடங்கினார்.  அவரது அயராத உழைப்பினால் ‘மாலை முரசு’ நாளிதழ் நெல்லை மக்களின் பேராதரiவைப் பெற்றது. இதன் எதிரொலியாக மற்ற மாவட்டங்களிலும் மாலை முரசுகள் தோன்றின.
பத்திரிகையின் அனைத்து துறைகளிலும் கற்றுத் தேர்ந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்கள் ஆற்றிய பணியினை கண்ட அவரது தந்தையார், ‘தினத்தந்தி’-யின் நிர்வாகப் பொறுப்பை 1959ஆம் ஆண்டு ஒப்படைத்தார்.  அச்சமயத்தில், சென்னை, மதுரை, திருச்சி ஆகிய மூன்று இடங்களில் இருந்து மட்டுமே தினத்தந்தி நாளிதழ் வெளிவந்து கொண்டிருந்தது. 
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் நிர்வாகத் திறமையால், தினத்தந்தி நாளுக்கு நாள் வளர்ந்து, இப்போது பெங்களூர், மும்பை, புதுச்சேரி உள்பட 15 நகரங்களில் பதிப்பாகி வெற்றிகரமாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த பெருமைக்குச் சொந்தக்காரர் மறைந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்கள் தான் என்றால் அது மிகையாகாது.
தினத்தந்தி வெள்ளி விழா நிகழ்ச்சியில் பங்கேற்று அன்று தலைமை உரையாற்றிய பேரறிஞர் அண்ணா  கீழ்கண்டவாறு குறிப்பிட்டார்.
""""ஓர் அமைப்பை தோற்றுவிப்பது என்பது கடினம். ஆனால் நல்ல முறையில் அமைந்த ஓர் அமைப்பினை யாரிடத்தில் ஒப்படைக்கிறோமோ, அவர்கள் அதில் ஒரு துளிகூட அக்கறை காட்டவில்லை என்றால், எவ்வளவு திறமையாக அந்த அமைப்பை அமைத்து இருந்தாலும், வெகு விரைவிலேயே அது கலைந்து விடக்கூடிய ஆபத்து உண்டு.
அந்த விதமான நிலையில்லாமல் திரு. ஆதித்தனார் அவர்கள் அமைத்துக் கொடுத்த ‘தினத்தந்தி’  நல்ல முறையில் இன்னும் நல்ல வளர்ச்சி அடையத்தக்க வகையில், மேலும்  பல்லாயிரக்கணக்கான மக்கள் விரும்பி படிக்கும் தன்மையிலேயே தினத்தந்தி நாளிதழ் இன்றைய தினம் நடக்கிறது என்றால், அதன் நிர்வாகப் பொறுப்பை ஏற்று நடத்திக் கொண்டிருக்கும் நம் மதிப்பிற்குரிய நண்பர் ஆதித்தினாரின் திருமகன் சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு உரிய பங்கு உண்டு என்று அப்பொழுது தெரிவித்தார்.  
ஆதித்தினார் ஒரு நல்ல அமைப்பை ஏற்படுத்திக் கொடுத்தது மட்டும் அல்லாமல், அந்த அமைப்பை தொடர்ந்து நடத்த  தக்க பிள்ளையையும் பெற்றெடுத்தார் என்பது அவரது தனிச் சிறப்புக்கு எடுத்துக் காட்டாகும்"" என்று, திரு சிவந்தி ஆதித்தன் அவர்களை பாராட்டிப் பேசினார்கள்.
இன்று தினத்தந்தி பத்திரிகை பல கோடி வாசகர்களுடன், நூற்றாண்டை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருப்பதை நினைத்துப் பார்த்தால் பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறியது நூற்றுக்கு நூறு சரியாக இருப்பதை உணர முடிகிறது.
திரு. ஆதித்தனார் அவர்கள் அமைத்த நிறுவனங்களை அவருடைய மகன் திரு.சிவந்தி ஆதித்தன் கட்டிக் காத்து வருவதுடன், மெச்சத் தகுந்த வழியில் வளர்த்து வருகிறார்"" என்றார் மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள்.
""""தினத்தந்தி நாளிதழ் மூலம் தமிழகத்தில் பாமரரும், பத்திரிகை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியவர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் அவர்கள். இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரரும் ஆவார்.  இவர் எனது முந்தைய ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவராக திறம்பட பணியாற்றியது மிகவும் குறிப்பிடத்தக்கது. இவர் எளிமையானவர் மற்றும் பழகுவதற்கு இனிமையானவர்"" என்றார் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.  
தினத்தந்தி பத்திரிகை மட்டுமின்றி, 1962ஆம் ஆண்டு ‘ராணி’ வார இதழ் தொடங்கப்பட்டது.  திரு. ஆதித்தனார் அவர்கள் பாமர மக்களையும், நாளிதழ் படிக்க வைத்தார் என்றால், பட்டி தொட்டி மக்களிடம் வார இதழ் படிக்கும் பழக்கத்தை உருவாக்கித் தந்தவர் மறைந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்கள். இதனைத் தொடர்ந்து ‘ராணி முத்து’, ‘ராணி காமிக்ஸ்’ ஆகிய  இதழ்களையும் தொடங்கினார்கள். இன்று தமிழ்நாடு  மக்களின் வீடுகளை அழகுபடுத்திக் கொண்டிருக்கும் ‘ராணி முத்து’ காலண்டர்களை வெளியிட்டவரும் திரு. பா.சிவந்தி ஆதித்தன்அவர்கள்தான்.
இவர் திருச்செந்தூர் பகுதியில் பல கல்வி நிறுவனங்களை நிறுவி, அப்பகுதியில் உள்ள ஏழை மக்கள் கல்வி கற்க வழிவகை செய்தார்.
""""இளைஞர்கள் படிக்க வேண்டும். அப்போதுதான் சமுதாயமும், நாடும் முன்னேற்றம் அடையும். படிக்க எந்த ஊரில் பள்ளிக்கூடம் இல்லையோ, அந்த ஊரில் பள்ளிக்கூடம் கட்டிக் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன்"" என்று  கூறியதோடு மட்டுமல்லாமல், அதை செயல்படுத்தவும் செய்தார் மரியாதைக்குரிய மறைந்த திரு. சிவந்தி ஆதித்தன் அவர்கள்.  தமிழ்நாடு முழுவதும் ஏராளமான இடங்களில் புதிய பள்ளிக்கூடங்கள் அமைக்கவும், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளுக்கு கட்டடங்கள் கட்டவும் தாராளமாக நிதி உதவி செய்தார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 15 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், சி.பா.ஆதித்தனார் நூற்றாண்டு மாளிகையை கட்டிக் கொடுத்தவரும் மரியாதைக்குரிய சிவந்தி ஆதித்தனார் அவர்கள். 
புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் டாக்டர். எம்.ஜி.ஆர். அவர்கள் ஏழை எளிய குழந்தைகளுக்காக சத்துணவுத் திட்டத்தை தொடங்கியபோது, முதலில் திருச்சி பாப்பாக்குறிச்சியில் தன் தந்தை அமரர் சி.பா.ஆதித்தனார் பெயரில் முதல் சத்துணவுக் கூடத்தை கட்டிக் கொடுத்தவர்  மரியாதைக்குரிய மறைந்த 
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் அவர்கள்.
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் கல்வி வளர்ச்சியில் காட்டிய அதே அக்கறையை, விளையாட்டுத் துறை வளர்ச்சியிலும் காட்டினார்.
தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத் தலைவராக இருந்த அவர், 1987ஆம் ஆண்டு இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆசிய ஒலிம்பிக் சங்க துணைத் தலைவர் பதவி வகித்த அவர், ஆசிய ஒலிம்பிக் சங்கம், சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் பல விருதுகளைப் பெற்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்தவர். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் வாழ்நாள் தலைவராக 2000-ஆவது ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். 
மாண்புமிகு பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் 1982 மற்றும் 1983 ஆகிய இரு வருடங்களிலே திரு.சிவந்தி ஆதித்தனார் அவர்களை சென்னை நகர ஷெரீப் ஆக நியமித்து கௌரவப்படுத்தினார். 
இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் சிறந்த சேவை புரிந்ததற்காக 2008ஆம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கி கௌரவித்தது.   இவருக்கு பல்வேறு பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தன.
இந்திய துணைக் கண்டத்தில், பத்திரிகை, விளையாட்டு, கல்வி, தொழில் முதலான பல்வேறு துறைகளிலும் பெரும் சாதனையாளராகத் திகழ்ந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் தொண்டினை வருங்கால சமுதாயத்தினரும் அறிந்து கொள்ளும் வகையிலும், அன்னாருக்கு வரலாற்றில் நீங்கா இடம் கிடைத்திடும் வகையிலும், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் பெருமைக்கும், புகழுக்கும் சிறப்பு சேர்க்கும் வகையில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், வீரபாண்டியன்பட்டணம் கிராமத்தில் அரசு சார்பாக மணி மண்டபம் அமைக்கப்படும் என்று, 22.11.2017 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழாவில்  நான் அறிவித்தேன்.
அதனை செயல்படுத்தும் விதமாக, ஒரு கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் செலவில் 60 சென்ட் நிலத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் மணி மண்டபம் அமைக்க 10.10.2018 அன்று நான் அடிக்கல் நாட்டினேன். இந்த மணி மண்டபத்தினை அமைக்கும் பணிகள் துரிதமாக முடிக்கப்பட்டு, இன்று நான் திறந்து வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.       
வாக்குறுதிக ளை கொடுப்பதோடு நிற்காமல், அதனை உடனடியாக நிறைவேற்றும் ஆட்சி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி என்பதை மாண்புமிகு அம்மா அவர்கள் பலமுறை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள்.  அவரிடம் பயிற்சி பெற்ற நாங்களும், """"சொன்னதைச் செய்வோம், சொல்லாததையும் செய்வோம்"" என்ற கொள்கையின் அடிப்படையில், செயல்பட்டு வருகிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 
மாண்புமிகு  புரட்சித் தலைவர் அவர்களும், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களும், எங்கள் அரசும் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் எண்ணற்ற திட்டங்களை வழங்கி, தமிழ்நாட்டை ஒரு முன்னோடி மாநிலமாக தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவும், மக்களின் நல வாழ்வுக்காகவும் பல்வேறு திட்டங்களை மாண்புமிகு அம்மாவின் அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் மாண்புமிகு அம்மாவின் அரசால் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் சிலவற்றை இங்கே கோடிட்டுக் காட்ட விரும்புகின்றேன்.
· ஏழை, எளிய குடும்பத்திலே பிறந்த பெண்கள் திருமண வயதை அடையும்பொழுது, பொருளாதார சூழ்நிலையின் காரணமாக, திருமணம் செய்ய முடியாத நிலை இருந்தது. அந்த நிலையை மாற்றி, ஏழை, எளிய குடும்பத்திலே பிறந்த பெண்கள் திருமண வயதை அடைகின்றபொழுது, திருமணம் செய்வதற்காக இதயதெயவம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தாலிக்குத் தங்கம் என்ற அற்புதமான திட்டத்தை தமிழ்நாட்டிலே  உருவாக்கி, இன்றைய தினம், தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 4,399 பயனாளிகளுக்கு ரூ. 25,000 வீதம் 23.31 கோடி ரூபாய் திருமண உதவித் திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.  
· அதேபோல,  5,378 பயனாளிகளுக்கு ரூ.50,000 வீதம் 1 பவுன் தங்கம் கொடுக்கப்பட்டு அதற்காக அம்மாவினுடைய அரசால் ஒதுக்கப்பட்ட நிதி  
42 கோடி ரூபாய். ஆகவே, ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த பெண்கள் திருமண வயதை அடைகின்றபொழுது, திருமணம் நடைபெறுவதற்காக உதவி செய்து கொண்டிருக்கும் அரசு அம்மாவினுடைய அரசு என்பதை மகிழ்ச்சியுடன் குறிப்பிட விரும்புகின்றேன்.  
·   பருவ காலங்களிலே பெய்கின்ற மழைநீர்  வீணாக கடலில் கலக்கின்றது. அப்படிப்பட்ட நீரை சேமித்து வைக்க வேண்டும் என்பதற்காக இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா எண்ணிய எண்ணத்தை, கண்ட கனவை  எங்களுடைய அரசு நிறைவேற்றுகின்ற விதமாக, குடிமராமத்து என்ற திட்டத்தைக் கொண்டுவந்து, இன்றைக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும்  குடிமராமத்து திட்டத்தின் கீழ் 39 பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, அதற்காக பத்தரை கோடி ரூபாய் செலவழித்து, குடிமராமத்துத் திட்டத்தின் மூலமாக ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிகின்ற காட்சியை நாம் பார்க்கின்றோம். அதேபோல, தற்போது 28 பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.  அதற்காக பதினொன்றரை கோடி ரூபாய் அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது. இப்படி கிராமத்தில் இருக்கின்ற ஏரிகள், குளங்கள் நிரம்புகின்றபொழுது, வேளாண் பெருமக்களுக்குத் தேவையான நீர் கிடைக்கும், வேளாண் பணிகளும் சிறக்கும். குடிநீர் பிரச்சினை முழுவதும் நிரந்தரமாக தீர்க்கப்படும் என்பதற்காகக் கொண்டு வரப்பட்ட திட்டம் குடிமராமத்துத் திட்டம் ஆகும். 
· இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா  2016 சட்டமன்றத் தேர்தலின்போது, கழக அரசு அமைந்தவுடன், உழைக்கும் மகளிருக்கு இருசக்கர வாகனம் வழங்கப்படும் என்று சொன்னார்கள். அந்த திட்டத்தை துவக்குவதற்கு முன் மாண்புமிகு அம்மா அவர்கள் மறைந்தார்கள். ஆனாலும், அம்மாவினுடைய அரசு அம்மாவினுடைய திட்டத்தை நிறைவேற்றுகின்ற விதமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 5,489 பயனாளிகளுக்கு 13.75 கோடி ரூபாய் மானியம் அளித்து அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்பட்டிருக்கின்றது. 
· இன்று வல்லரசு நாடுகளில் கூட விலையில்லா மடிக்கணினி வழங்குவது கிடையாது.  ஆனால், இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள், தமிழ் மண்ணிலே, ஏழை குடும்பத்தில் பிறந்த மாணவ, மாணவிகள் அறிவுபூர்மான கல்வி, உலகத் தரத்திற்கேற்ற கல்வி, சர்வதேச அளவிலே மாணவ, மாணவிகள் சிறந்த அறிவைப் பெற வேண்டும், பொது அறிவை பெருக்கிக் கொள்ளவேண்டும், வேலைவாய்ப்புக்கு செல்ல வேண்டும், தொழிற்கல்விக்குச் செல்ல வேண்டும், அப்படிப்பட்ட கல்வி கிடைக்க வேண்டுமென்று சொன்னால் அந்த மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி  வழங்க வேண்டும். ஆகவே, திறமையான மாணவர்களாக இருந்தாலும், குடும்பத்திலே வசதி இல்லாமல் பொருளாதார சூழலின் காரணமாக அவர்கள் அந்த கல்வி கற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடும் என்று கருதி,  அரசாங்கமே முழுச் செலவை ஏற்று, விலையில்லா மடிக்கணினிகளை வழங்கிய ஒரே அரசு இந்தியாவிலேயே அம்மாவின் அரசுதான். அதில் மட்டும், பத்தொன்பரை கோடி ரூபாய் செலவில், 16,162 மடிக்கணினிகள் நம்முடைய மாணவச் செல்வங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. 
· அதுபோல, கிராமப்புற பொருளாதாரம் முன்னுக்கு வரவேண்டும், ஏழை, எளிய குடும்பத்திலே பிறந்தவர்கள், விவசாயத் தொழிலாளிகள், பெண் தொழிலாளிகள்   சொந்தமாக பொருளாதாரத்தை ஈட்ட வேண்டும், அவர்களுடைய ஜீவாதாரத்தை அவர்களே நிர்ணயிக்கக்கூடிய அளவிற்கு அவர்களுடைய பொருளாதாரம் மேம்பாடு அடையவேண்டும் என்பதற்காக, மாண்புமிகு அம்மா அவர்கள் தொலைநோக்குச் சிந்தனையுடன் விலையில்லா வெள்ளாடுகள், செம்மறியாடுகள், கறவை பசுக்கள் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார்கள். இந்தத் திட்டத்தின் வாயிலாக 10,327 பயனாளிகளுக்கு பதிமூன்றரை கோடி ரூபாய் அளவிற்கு உதவி செய்யப்பட்டுள்ளது. 
· மேலும் விலையில்லா மிதிவண்டிகள், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம். கடந்த காலத்தில், மாண்புமிகு அம்மா அவர்கள் இருக்கின்றபொழுது, தனியார் மருத்துவமனையில், 2 லட்சம் ரூபாய் வரை மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். அதையே, அம்மாவினுடைய அரசு,  இது போதாது என்று மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்தவுடன்,  ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்தவர்கள் நோய்வாய்ப்பட்டால், அவர்கள் பூரண குணமடைவதற்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சிகிச்சை பெறுவதற்கு 
ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 
· டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ், தூத்துக்குடி மாவட்டத்தில், 49 ஆயிரத்து 811 கர்ப்பிணிப் பெண்களுக்கு 47 கோடிரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
· தை என்றாலே தமிழர் திருநாள். அனைவரும் தைப்பொங்கல் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக பொங்கல் தொகுப்புத் திட்டத்தை மாண்புமிகு அம்மா அறிவித்தார்கள். அதையே நாங்கள் கடைபிடித்து, அம்மாவின் அரசு பொங்கல் தொகுப்புத் திட்டத்தின் மூலமாக தைப்பொங்கலன்று விலையில்லா அரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்டை, ஏலக்காய் கொடுத்தோடு, 1000 ரூபாய் எல்லா குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கிய ஒரே அரசு அம்மாவினுடைய அரசுதான். 
· இன்றைக்கு சிறு, குறு விவசாயிகளுக்கு பயிர்கடன் 188 கோடி ரூபாய் இந்த மாவட்டத்தில் மட்டும் வழங்கியிருக்கிறோம். 
· மீன்பிடி தடை கால நிவாரணமாக 19 ஆயிரத்து 232 மீன குடும்பங்களுக்கு 22 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
· தமிழ்நாடு கடல் மீனவ மகளிர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தின் கீழ் 22 ஆயிரத்து 482 மீனவ மகளிருக்கு 25 கோடி ரூபாய் நிதயுதவி வழங்கிய அரசும் அம்மாவினுடைய அரசு.  
· பசுமை வீடுகள் வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
· நெடுஞ்சாலைகள் துறையின் மூலம் பல்வேறு சாலைகளை நாம் சீர்செய்திருக்கின்றோம். 
· திருச்செந்தூர், சாத்தான்குளம், விளாத்திகுளம் ஆகிய தீயணைப்பு நிலையங்களுக்கு 3 கோடியே 11 லட்சம் ரூபாய் செலவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
· பொதுப்பணித் துறையின் மூலமாக பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இங்கே கூட, நீர்வள ஆதாரத் துறையின் மூலமாக, தாமிரபரணி ஆற்றின் குறுக்கே முக்காணியில் 25 கோடியே 
75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
· வைப்பாறு ஆற்றின் குறுக்கே வேம்பாறு பகுதியில் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெறுகின்றன. இப்படி பல திட்டங்கள் தூதுக்குடி மாவட்டத்திலே அம்மாவினுடைய அரசு இன்றைக்கு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை இந்த ரேநத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன்.  
· தூத்துக்குடி மாநகராட்சியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.   
மேலும் இன்று நடைபெறும் இந்த விழாவில், தூத்துக்குடி மாநகராட்சி மூலம் நிறைவேற்றப்பட உள்ள 102 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணிகள் மற்றும் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் நிறைவேற்றப்பட உள்ள 72 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பணிகள், மின்சாரத் துறை  மூலமாக நிறைவேற்றப்பட்ட 34 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகள், உட்பட 
260 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான 47 திட்டங்களுக்கு நான் இந்த அற்புதமான  நிகழ்ச்சியின் வாயிலாக அடிக்கல் நாட்டியுள்ளேன்.
இன்றைக்கு அற்புதமான நாள். இந்த நன்நாளில், இத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் நிறைவேற்றப்பட்ட 
23 கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பணிகள், மருத்துவத் துறையின் மூலம் நிறைவேற்றப்பட்ட 18 கோடியே 63 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணிகள் உட்பட 71 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான 15 பணிகளை நான் இன்று தொடங்கி வைத்துள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல, இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.3.5 கோடி மதிப்பிலான இருதய ரத்த நாள ஆய்வகத்தை திறந்து வைக்க உள்ளேன் என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்நிகழ்ச்சியின் வாயிலாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். 
மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் 6,944 பயனாளிகளுக்கு சுமார் 
32 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பிலான  நலத் திட்ட உதவிகளை நான் இன்று வழங்கியுள்ளேன்.
 புரட்சித் தலைவர்  நூற்றாண்டு விழாவில் இம்மாவட்டத்தில் 35 அறிவிப்புகளை நான் அறிவித்தேன். அதில் 15 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.  மீதமுள்ள 20 அறிவிப்புகளின் பணிகள் பல்வேறு நிலைகளில் நடைபெற்று வருகின்றன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
 அம்மாவின் அரசு அனைத்துத் துறைகளிலும் தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகிறது.  ஒவ்வொரு துறையும் போட்டி போட்டுக் கொண்டு விருதுகளை குவித்து வருகிறது. இந்தியாவிலேயே சிறந்த ஆளுமைமிக்க மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றது என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த நேரத்திலே தெரிவித்து கொள்கிறேன்.  ஒரு சிலர் போல் நாங்கள் இல்லை. வாய்ச்சொல் வீரராக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளிக்காமல், சாத்தியமான திட்டங்களை மட்டும் அறிவித்து மாண்புமிகு அம்மாவின் அரசு செயல்படுத்தி வருகிறது.   இதைக் கூறும்போது எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது, மூன்று பேர் சேர்ந்து ஒரு லாட்டரி சீட்டு வாங்கினார்கள். பரிசு விழுந்தால் கடவுளுக்கு சம பங்கு தருவோம் என்று முடிவு செய்தார்கள்.  சில நாட்களில் அவர்கள் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்திருப்பதாக அறிவிக்கப்பட்டது.  பணத்தை வாங்குவதற்கு முன் மூன்று பேருக்கும் ஒரே சிந்தனை தோன்றியது.  கடவுளுக்கு ஒரு பங்கு தருவோம் என்று சொன்னோமே, அப்படி தரக்கூடாது என்று முடிவு செய்தார்கள். 
அவசரப்பட்டு கடவுளுக்கு ஒரு பங்கு தருவதாக சத்தியம் செய்து விட்டோமே, அதிலிருந்து எப்படி தப்புவது என்ற சிந்தனையே மூவரின் மனதிலும் ஓடிக் கொண்டிருந்தது.
சரி எவ்வளவு பங்கு? எவ்வளவுதான் கொடுக்கலாம்? என யோசித்த போது,
முதல் நபர், """"தரையில் ஒரு சிறிய வட்டம் வரைவோம், எல்லாப் பணத்தையும், நாணயங்களாக்கி மேல் நோக்கி எறிவோம்.  சின்ன வட்டத்துக்குள் விழுவது கடவுளுக்கு"", என்றான். 
இரண்டாவது நபரோ, """"கூடாது, கூடாது. மிகப் பெரிய வட்டம் வரைவோம். நடுவில் நின்று கொண்டு பணத்தை மேல் நோக்கி எறிவோம்.  அந்த வட்டத்துக்கு வெளியே எவ்வளவு பணம் விழுகிறதோ அது கடவுளுக்கு"", என்றான்.
இருவரும் சொன்னதைக் கேட்ட மூன்றாவது நபர், """"சிறிய வட்டமாவது, பெரிய வட்டமாவது - பணத்தை மேலே வீசி எறிவோம்.  மேலே நின்று விடுகின்ற பணம் கடவுளுக்கு, கீழே விழுகின்ற பணம் நமக்கு"", என்றான்.
இவர்களிடம் நற்குணம் இல்லாதது மட்டுமல்ல, கடவுளை விட தாங்களே கெட்டிக்காரர்கள் என்ற ஆணவமும் இருந்தது.  இவர்களைப் போன்ற சிலர், செய்ய முடியாதவற்றை எல்லாம் செய்வோம் என உண்மைக்கு மாறானவற்றை மக்களிடம் கூறி நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில்  வெற்றி பெற்று விட்டனர்.  ஆனால் அவர்கள் இந்த மூன்று நபர்களைப் போல் சொன்னதை செய்யவில்லை.  அதற்கு வேறு  விளக்கங்கள் கொடுத்து வருகின்றனர்.  ஆனால், அவர்களைப் பற்றி நன்கு அறிந்து கொண்ட மக்கள், அவர்களுக்கு தக்க தண்டனையை சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் வழங்கினார்கள்.  இனிமேலும் இதனை தொடர்ந்து வழங்கிக் கொண்டே இருப்பார்கள் என நான் உறுதியாக கூறுகிறேன். 
அதேபோல, தாய் 8 அடி பாய்ந்தால், குட்டி 16 அடி பாயும் என்பார்கள். ஆனால் சிவந்தி ஆதித்தன் அவர்கள் 8 அடி பாய்ந்தால், அவர் மகன் 
திரு. பாலசுப்பிரமணியன் ஆதித்தன் அவர்கள் 16 அடி அல்ல, 32 அடி பாய்ந்து டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் அவர்களின் நினைவை போற்றும் வகையில் மாண்புமிகு அம்மாவின் அரசு திருச்செந்தூரில் மணிமண்டபம் கட்டப்படும் என்ற அறிவிப்பை செய்தவுடன், அடிக்கல் நாட்டு விழாவிலிருந்து, மணிமண்டபம் திறப்பு விழாவான இன்று வரை முழு ஈடுபாட்டுடன் இதை வெற்றிகரமாக நடத்த மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பை நல்கிய  திரு. பாலசுப்பிரமணியன் ஆதித்தன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன். தன் தாத்தா சி.பா. ஆதித்தனார், தந்தை 
சிவந்தி ஆதித்தன் உருவாக்கிய `தினத்தந்தி’-யை மேலும் வளர்த்து இன்று துபாய், இலங்கை போன்ற வெளிநாடுகளிலும் தொடங்கப்பட்ட முதல் தமிழ் பதிப்பு என்ற பெருமையையும் `தினத்தந்தி’ குழுமத்துக்கு பெற்று தந்துள்ளார்.
நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். திரு. பாலசுப்பிரமணியன் தாத்தா `தமிழர் தந்தை’ சி.பா. ஆதித்தனார் அவர்கள் சிறந்த பத்திரிகையாளர் என்று. அவர் தந்தை சிவந்தி ஆதித்தன்  சிறந்த நிர்வாகி என்று.  ஆனால் 
பாலசுப்பிரமணிய ஆதித்தன் தன் தாத்தா, தகப்பனாரின் கலவையாக சிறந்த பத்திரிகையாளராகவும், சிறந்த நிர்வாகியாகவும் இருக்கிறார் என்பதற்கு அவரது நிர்வாகத்தில் இயங்கும் `தினத்தந்தி’, டி.டி. நெக்ஸ்ட் ஆங்கில பத்திரிகை, மாலை மலர், தந்தி டி.வி., ஹலோ எப்.எம்.,  மற்றும் சில வார, மாத இதழ்களே சாட்சி. இப்போது தன் மகன்களான சிவந்தி ஆதித்தன், ஆதவன் ஆதித்தன் ஆகியோருக்கும் பயிற்சி அளித்து வருகிறார். அந்த இளைஞர்களும் தன் பூட்டனார், தாத்தா, தந்தை போல பத்திரிகை துறையில் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்.
ஏற்கனவே ம துணை முதலமைச்சர்  சொன்னார்கள். இன்றைக்கு தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும்  பரந்து விரிந்து தொழில் செய்யக்கூடிய ஒரு சமுதாயம் என்று சொன்னால் அது நாடார் சமுதாயம் தான் என்று சொல்லலாம்.  எந்த மூலைக்கு சென்றாலும், உழைக்க பிறந்தவர்கள், உழைப்பில் வாழ்கின்ற அந்த சமுதாய மக்களுக்கு அதை போற்றுவதற்காக இன்றைக்கு அந்த சமுதாயத்திலே பிறந்து வளர்த்தாலும், ஒருவர் பிறக்கின்றார், வாழ்கின்றார், மறைகின்றார். ஆனால் இடைப்பட்ட காலத்திலே, தன் வாழ்க்கையிலே தன் சமுதாயத்திற்கு என்ன செய்தார், இந்த நாட்டிற்கு என்ன செய்தார் என்று பார்க்கின்றபோது தான் மறைந்த டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் அவர்கள் தான் சொன்னதை செய்தார். அவர் செய்த சாதனைகள் இன்றைக்கு மண்ணிலே நிலைத்து நிற்கின்றது. ஆகவே தான், இந்த விழாவிற்கு அரங்கமே நிரம்பி கடல் போல் மக்கள் வெள்ளம் காட்சியளிக்கின்றது. ஒருவர் மறைந்ததற்கு பிறகு, அவருக்கு செய்கின்ற புகழ் தான் அவர் செய்த சாதனைகளுக்கு கிடைத்த பரிசு. அந்த பரிசை இங்கே அமர்ந்திருக்கின்ற மக்கள் வழங்கி கொண்டு இருக்கின்றார்கள். அதுமட்டுமல்ல, இன்றைக்கு நல்லவர்கள் வாழ்ந்து மறைந்தாலும், அவர்கள் வாழ்ந்த காலத்திலே செய்த சாதனைகள், அந்த சாதனைகளுக்கு இன்றைக்கு இயற்கை அன்னையே மழை பொழிந்து வாழ்த்தி கொண்டு இருக்கின்ற காட்சியை  இன்றைக்கு பார்க்கின்றோம். அப்படிப்பட்ட ஒரு நல்ல வேளையில் எனக்கு முன்னாலே பேசியவர்கள் குறிப்பிட்டதைப் போல, என்னுடைய தொகுதிகளிலும் நாடார் சமுதாயத்தினர் அதிகமாக இருக்கின்றனர். என்னுடைய எடப்பாடி சட்டமன்றத் தொகுதியிலே என்னுடைய நண்பர் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த திரு. மாதேஷ் என்பவர் இரண்டுமுறை எடப்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் தலைவராக பதவி வகித்தார். இப்பொழுதும் அவரது மனைவி திருமதி எம். குப்பம்மாள் எடப்பாடி ஒன்றிய சேர்மனாக பதவி வகிக்கிறார். ஆகவே, இன்றைக்கு இந்த சமுதாய மக்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பேராதரவை அளித்துக் கொண்டு இருக்கின்றார்கள். பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் காலத்திலும் சரி, புரட்சித் தலைவி அம்மா அவர்களின் காலத்திலும் சரி, அவர்கள் மறைந்த பிறகு நாங்கள் இப்பொழுது இயக்கத்தில் இருக்கின்ற போதும் சரி, எங்களோடு துணை நின்றவர்கள், நிற்பவர்கள் இந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள். அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நிகழ்ச்சியில் பங்கு கொள்வதில் நாங்கள் பெருமையாக கருதுகிறோம் என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்டி, இந்த நிகழ்ச்சியிலே புதிய அறிவிப்புகளை வெளியிடுகின்றேன். 
அறிவிப்புகள்
1. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், ஆலந்தலையில் 
52  கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடல் அரிப்பு  தடுப்புச் சுவர் (தூண்டில் வளைவு) கட்டும் திட்டம்   செயல்படுத்தப்படும்.
2. தாமிரபரணி ஆற்றின் வெள்ள நீரை வறட்சிப் பகுதிகளுக்கு திருப்பி பாசன நிலங்கள் பயன் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள தாமிரபரணி, கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டத்தின் நிலை-ஐஏ -க்கான பணிகள் விரைவில் துவங்கி இந்த ஆண்டுக்குள் நிறைவு பெற்று இந்தப் பகுதி மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவிக்க விரும்புகின்றேன். 
3. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், அமராபுரம் கிராமத்தில் கருமேனியாற்றின் குறுக்கே 3 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு தடுப்பணை புதிதாக கட்டப்படும்.
4. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டத்திற்கு 3 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தாலுகா அலுவலகம் கட்டப்படும்.
5. தூத்துக்குடி மாவட்டம்,  சாத்தான்குளம் வட்டத்திற்கு 3 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தாலுகா அலுவலகம் கட்டப்படும்.
6. தூத்துக்குடி மாவட்டம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்திற்கு அணியாபரநல்லூரில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டப்படும்.  அங்கு பால் பண்ணை அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.
7. கடம்பூர் பேரூராட்சி, விளாத்திகுளம் பேரூராட்சி, புதூர் பேரூராட்சி மற்றும் 180 கிராமங்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்ட அபிவிருத்தி பணிகள் 
10 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். 
8. சாத்தான்குளம் மற்றும் திருவைகுண்டம் பேரூராட்சி சந்தைகள் தலா 
1 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், திருச்செந்தூர் பேரூராட்சி சந்தை 2 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், உடன்குடி பேரூராட்சி சந்தை 5 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மேம்படுத்தப்படும்.
9. ஆழ்வார்திருநகரி குடிநீர் மேம்பாட்டுப் பணிகள் 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், நாசரேத் குடிநீர் மேம்பாட்டுப் பணிகள் 
20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், பெருங்குளம் குடிநீர் மேம்பாட்டுப் பணிகள் 1 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் நிறைவேற்றப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக தெரிவித்துக் கொள்கின்றேன்.     
இந்நிகழ்ச்சியை நல்ல முறையில் சீரோடும் சிறப்போடும் நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்த மதிப்பிற்கும் மரியாதைக்குரிய இந்த மாவட்டத்தினுடைய மாண்புமிகு அமைச்சர் திரு. கடம்பூர் ராஜூ அவர்களுக்கும், இதற்கு துணையாக நின்ற சட்டப்பேரவை உறுப்பினர், முன்னாள் அமைச்சர் 
எஸ்.பி. சண்முகநாதன் , மாவட்ட ஆட்சித் தலைவர்  அதேபோல இந்த துறையினுடைய உயர் அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்து விடைபெறுகின்றேன் என்று பேசினார்.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் , அமைச்சர்  செல்லூர் ராஜு ,அமைச்சர்  எம்.சி.சம்பத் ,அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் , அமைச்சர்  கே.டி.ராஜேந்திரபாலாஜி ,
அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் . அமைச்சர்  ராஜலட்சுமி ,டெல்லி சிறப்பு பிரதிநிதி திரு.தளவாய் சுந்தரம் 
மற்றும் இந்த சிறப்பான நிகழ்ச்சியிலே பங்குபெற்று இந்த நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து சிறப்பித்துக் கொண்டிருக்கின்ற இந்த தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் ,
வரவேற்புரை வழங்கிய தலைமைச் செயலாளர் க.சண்முகம் ,தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் அரசு செயலாளர் மகேசன் காசிராஜன் ,செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் பொ.சங்கர் ,
நன்றியுரை ஆற்றவுள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும்  தினத்தந்தி நாளிதழின் இயக்குநர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் ,அவர்களின் புதல்வர்கள் ஆதவன் ஆதித்தன் ,சிவந்தி ஆதித்தன் ,மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்  ,இந்த நிகழ்ச்சியிலே பங்கு பெற்று சிறப்பித்தண்ர்.நாடாளுமன்ற உறுப்பினர் விஜிலா சத்யானந்த் ,விஜயகுமார் ,வசந்த குமார் ,
முன்னாள் மக்களவை துணைத் தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர் தம்பிதுரை ,கடையநல்லூர் சட்டப் பேரவை உறுப்பினர் முகமது அபுபக்கர் , தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் ,
முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் ,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன்,
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் சரத்குமார் ,புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் 
மக்கள் கட்சியினுடைய தலைவர் என்.ஆர்.தனபாலன்,விஜிபி குழுமத்தின் தலைவர் வி.ஜி.சந்தோஷம் ,
சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் , ஜான் பாண்டியன் , வைகுண்டராஜன் , கரிக்கோல் ராஜ் ,விக்கிரமராஜா , நிகழ்ச்சியிலே பங்குபெற்று சிறப்பித்துக் கொண்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டப் பேரவை உறுப்பினர்கள் ,நிகழ்ச்சியிலே பங்கு பெற்றிருக்கின்ற தொழில் அதிபர்கள் ,நிகழ்ச்சியிலே கலந்து கொண்டு சிறப்பித்துக் கொண்டிருக்கின்ற மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் பெ. மோகன் ,
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ரா.சுதாகர் ,ஆவின் தலைவர் சின்னத்துரை .,மாவட்ட கூட்டுறவு அச்சகத் தலைவர் அன்புராஜ் ,மாவட்ட ஊராட்சித் தலைவர் ரா.சத்யா ,திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர்  செல்வி வடமலைபாண்டியன் ,மாவட்ட ஊராட்சி உறுப்பினர் அ. பிரம்ம சக்தி ,
ஊராட்சி மன்றத் தலைவர் வீரபாண்டிப் பட்டணம் மூ. எல்லமுத்து ,ஒன்றியக்குழு துணைத் தலைவர் ரெஜிபர்ட் பர்னாந்து , மற்றும் இந்த நிகழ்ச்சியிலே பங்குபெற்றிருக்கின்ற நாடார் சமுதாயத்தின்பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளே, தலைவர்கள் இந்த நிகழ்ச்சியிலே பெருந்திரளாக கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo