2022ம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது: மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு விருதை பெற்றுக்கொண்டு,10 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு உடனே வழங்கினார்
தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் “தகைசால் தமிழர்” என்ற பெயரில் புதிய விருது 2021 – ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் 2022 ஆம் ஆண்டிற்கான தகைசால் தமிழர் விருதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுவுக்கு வழங்க தேர்வுக் குழுவினரால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விருதாளரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில், இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, விடுதலைப் போராட்ட வீரராக தன் இளம் வயதை சிறைச்சாலையிலும், தலைமறைவு வாழ்க்கையிலும், கழித்தவரும், ஏழை எளிய மக்களுக்காக குரல்கொடுத்து, சமூக நல்லிணக்கத்தினையும், சுற்றுச்சூழலையும் காத்திட தொடர்ந்து பாடுபட்டுவருவதுடன், சிறந்த தன்னலமற்ற அரசியல்வாதியாகவும் பணியாற்றி, தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்களிப்பை அளித்த தமிழருமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுவுக்கு 2022-ஆம் ஆண்டிற்கான “தகைசால் தமிழர் விருது" வழங்க தேர்வுக் குழுவினரால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.இதைதொடர்ந்து நல்லகண்ணுவுக்கு பத்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதலையும் இன்று ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்..விழா மேடையிலே எனக்கு எதுக்குப்பா, பத்து லட்சம் ரூவா பணம்?" -- என்று கேட்டுவிட்டு,சுதந்திர தின கொண்டாட்டத்தில் இன்று தகைசால் தமிழர் விருதுக்காக தமிழ்நாடு முதலமைச்சரால் தனக்குத் தரப்பட்ட 10 லட்சம் ரூபாயுடன்,தன் சேமிப்பான 5000 ரூபாயை சேர்த்து,மொத்தமாக 10 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயை,அந்த மேடையில் வைத்தே,தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக,முதலமைச்சரிடம் திருப்பித் தந்தார்,மாமனிதர் தகைசால் தமிழர் நல்லக்கண்ணு அவர்கள்....