சிராப்பள்ளி குன்றில் சிவ பண்டிதர் புடைப்புச் சிற்பம்,பொதுமக்களும் வரலாற்று மாணவர்களும் பார்க்க இந்து சமய அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி உச்சிப்பிள்ளையார் திருக்கோவில் மலைக்குன்றில் சிவ பண்டிதர் புடைப்புச் சிற்பம் உள்ளது. பொதுமக்களும் வரலாற்று மாணவர்களும் பார்க்க இந்து சமய அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து சமூக ஆர்வலர் விஜயகுமார் பேசுகையில்,
ஸ்ரீரங்கம் கோட்டம் 11வது வார்டு
வடக்கு மேட்டுத்தெரு குறுகிய தெருவில் குடியிருப்பு வீடுகள் உள்ளன. குறுகிய சந்து வழியாக சென்று ஒரு வீட்டின் பக்கவாடாடு வழியாக மலையேறலாம். மலையேறும் போது சிவபண்டிதர் சிலை மலையில் உள்ளதா என அங்கு குடியிருப்பவர்களிடம் கேட்க பலர் தெரியவில்லை என்றே பதில் அளிக்கின்றனர். ஒருவர் மட்டும் மேலே ஒரு சிலை உள்ளது. இன்னும் சற்று தொலைவு மலையேறுங்கள் என்றார். மலை குன்றின் மீது மரங்கள் அடர்ந்திருந்தன. மலைக்குன்று மீது படிகட்டுகளும் ஆங்காங்கே தென்பட்டன. கிழக்கு புறமாக மலைக்குன்றின் மீது ஏறுகையில் ஒரு பெரும் பாறையில் மேற்கு திசை நோக்கி ஆடவர் புடைப்பு சிற்பம் செதுக்கப் பட்டுள்ளது.
மழித்த தலையுடன் நீள்செவிகளுடன் முப்பரிநூல் அணிந்து
அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் இருகைகளும் கோர்த்த படி மடி மீது வைத்து தியான நிலையில் உள்ளவாறு சிலை வடிவமைக்கப் பட்டுள்ளது. முகம், வல, இட முழங்கை கீழும் வல, இடப் புற முழங்கால் சிதைக்கப்பட்ட நிலையிலும் உள்ளது. சிற்பத்தின் இருபுறமும் பக்கத்திற்கொருவராக அடியவர்கள் நின்ற கோலத்தில் உள்ளனர். வலப்புற அடியவர் கைகளைக் கூப்பியுள்ளார். இடுப்பிற்கு கீழ் கால்கள் சிதைக்கப் பட்டுள்ளன. இடப்புறம் கைகளைக் கூப்பியுள்ள அடியவர் இடக்கை சிதைக்கப் பட்டுள்ளது. இருபுறம் உள்ள அடியவர்கள் அணிகலன்களின்றி தலையையும் செவிகளையும் மறைக்குமாறு உள்ள தலைமுடி கொண்டை தலையணி உள்ளது.
சிவபண்டிதர் சிற்ப தகவலை கல்வெட்டுக் குறிப்போடு ராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய இயக்குனர் இரா.கலைக்கோவன் கல்வெட்டு சான்றின் அடிப்படையில் உறுதிபடுத்தியுள்ளார்.
இச்சிறப்பு மிக்க புடைப்பு சிற்பத்தினை பாதுகாத்து பொதுமக்களும் வரலாற்று மாணவர்களும் பார்க்க இந்து சமய அறநிலையத் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றார்.