ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட நபர்கள், அரசு வேலை வழங்க கோரி சென்னையில் முதலமைச்சருக்கு கோரிக்கை மனு
சென்னை 2022 : துாத்துக்குடி 'ஸ்டெர்லைட்' ஆலைக்கு எதிராக நடந்த துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட நபர்கள், அரசு வேலை வழங்க கோரி மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து, ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட நபர்கள் அளித்த பேட்டி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் காரணமாக, அந்த ஆலை நான்கு ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. இதனால், துாத்துக்குடியை சுற்றியுள்ள, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.மேலும், போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலருக்கு, அரசு வேலை வழங்கி உள்ளது; பலருக்கு வழங்கவில்லை. ஆலை மூடியதால், வருமானம் இல்லாமல் மிகுந்த சிரமப்படுகிறோம். மருத்துவச் செலவுக்கு கூட, எங்களிடம் பணம் இல்லை; குடும்பத்தை நடத்தவும் வழியில்லை.எனவே, பாதிக்கப்பட்ட எங்களுக்கு, அரசு வேலை வழங்க கோரிக்கை வைத்து, முதல்வர் தனிப் பிரிவில் மனு அளித்துள்ளோம். மேலும், ஸ்டெர்லைட் ஆலையை நம்பி இருந்த, 1 லட்சம் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இழந்த வாழ்வாதாரத்தை மீட்க, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும். இதற்கு, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.