Onetamil News Logo

திருவள்ளூர்  அருகே பெருமாள்பட்டில் இராஜசிம்ம பல்லவன் கட்டிய திருக்கோயில் மற்றும் பழைமையான சிற்பங்கள் கண்டுபிடிப்பு

Onetamil News
 

திருவள்ளூர்  அருகே பெருமாள்பட்டில் இராஜசிம்ம பல்லவன் கட்டிய திருக்கோயில் மற்றும் பழைமையான சிற்பங்கள் கண்டுபிடிப்பு


திருவள்ளூர்  2020 ஜூலை 5 ;திருவள்ளூர்  அருகே பெருமாள்பட்டில் இராஜசிம்ம பல்லவன் கட்டிய திருக்கோயில் மற்றும் பழைமையான சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டு  கிராமத்தில் கி.பி 7ம் நூற்றாண்டு கால பல்லவர்கள் எடுப்பித்த திருக்கோயிலும், பல்லவர் கால கடவுளர் சிற்பங்களும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெருமாள்பட்டு காளத்தீஸ்வரர் திருக்கோயில் நிர்வாகி  ஜெயராமன், கோயிலின் அர்ச்சகர்  ராஜா பட்டர்  ஆகியோர் இது குறித்து அளித்த தகவலின் பேரில் இப்பகுதியில் விரிவான கள ஆய்வுப்பணி மேற்கொள்ளப்பட்டது.இக்களஆய்வுப்பணியை மேற்கொண்ட திராவிட வரலாற்று ஆய்வுக்கழகத்தின் இயக்குநரும், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசு  கலைக்கல்லூரி வரலாற்றியல் துறை உதவிப் பேராசிரியருமான இல.கணபதிமுருகன்,இது பற்றிக்கூறுகையில்,
தற்போது  திருவள்ளூர் மாவட்டத்தில் சிறிய கிராமமாக காணப்படும் பெருமாள்பட்டு கிராமமானது பல்லவர் காலத்திலும் (கி.பி600 – 900 வரை), சோழர்கள் ஆட்சிக் காலத்திலும் (கி.பி900 -1300 வரை), பிற்கால பாண்டியர் ஆட்சியின்போதும்  (கி.பி13ஆம் நூற்றாண்டு) முக்கியத்துவம் பெற்ற நகரமாக விளங்கியது. காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு  ஆண்ட பல்லவர்கள், 24 கோட்டங்களாக தொண்டை மணடலத்தை பிரித்து ஆண்டபோது, ஈக்காட்டுக் கோட்டத்தின் ஒரு பகுதியாக பெருமாள்பட்டை உட்படுத்தியிருந்தனர். அப்போதே வணிக முக்கியத்துவம் பெற்ற நகரமாக பெருமாள்பட்டு விளங்கியுள்ளது.
பெருமாள்பட்டு– திருவூர்  பழம்பெருமை
பல்லவர், சோழர் கல்வெட்டுக்களில் பெருமாள்பட்டு என்ற பெயர் பெருமுளையூர் என்றே குறிக்கப்பட்டுள்ளது. கூவம் நதிக்கரை நகரங்களில் முக்கிய நகரமாக கருதப்பட்ட பெருமாள்பட்டு இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது “உலகளந்த சோழ சதுர்வேதிமங்களம்” என பெயர் மாற்றம் கண்டது. மேலும் கூவம் தென்கரையில் காணப்படும் திருவூர், பெருமாள்பட்டின் ஒரு பகுதியாகவே இருந்துள்ளதை திருவூர் சிங்காண்டீஸ்வரர் திருக்கோயில் கல்வெட்டு குறிப்பிடுகின்றது. தென்தமிழகம் முதல் திருவேங்கடம் (திருப்பதி) வரையிலும் பேரரசை விரிவாக்கிய பிற்கால பாண்டிய மன்னனான முதலாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் (கி,பி 1251 -1284), என்பானே திருவூர் கோயிலை கி.பி 1261ஆம் ஆண்டில்   கட்டியவனாவான். திருவூர் திருக்கோயிலில் காணப்படும் கல்வெட்டில் இறைவன் ரிஷ்யசிங்கீஷ்வரர் என்று குறிக்கப்படுகிறார்.ஜடாவர்மன் சுந்தர பாண்டியனின் ஆட்சிக்காலத்தின் போது ஒழுகரை என்ற பகுதியைச்  சேர்ந்த குலத்தறையன் ஆகிய பெரியாண்டவன்  என்னும் பெருவணிகன் இக்கோயிலுக்கு நிலதானம் அளித்த செய்தியும் இங்குள்ள கல்வெட்டில்  இடம்பெற்றுள்ளது. மேலும் திருவூரைக் குறிக்க  திருகூர் என்ற பெயரே கல்வெட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கி.பி 1519 ஆம் ஆண்டில் கிருஷ்ண தேவராயரின் பிரதானியான  திருமலைநாயக்கரும், திருகூர் பொதுமக்களும் இணைந்து திருவூரின் அருகாமையிலிருந்த வரதராஜப்பட்டு,மகமண்டல புருஷன்பட்டு ஆகிய  ஊர்களிலிருந்து வசூலிக்கப்பட்ட வரியை திருக்கோயிலுக்கு வழங்கியதை திருவூர் கோயில் கல்வெட்டு குறிக்கிறது. விஜயநகர ஆரவீடு வம்சத்தை சேர்ந்த வெங்கடாத்திரி மன்னரின் பிரதானியான சிவராம நரசப்ப நாயக்கர் திருவூர் மற்றும் பெருமுளைப்பட்டு பகுதிகளில் கிடைத்த வருவாயை திருவூர் கோயிலுக்கே வழங்கியதையும் கல்வெட்டு கூறுகிறது. விஜயநகர மன்னர்தம் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படும் பெருமுளைப்பட்டு தற்போதைய பெருமாள்பட்டேயாகும்.
பெருமாள்பட்டு காளத்தீஸ்வரர் திருக்கோயில்
பெருமாள்பட்டு ரயில் நிலையத்திலிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் ரயில்நகருக்கு செல்லும் வழியில்  சிவனுக்கு எடுக்கப்பட்ட காளத்தீஸ்வரர் சிவன் திருக்கோயில் உள்ளது. நவீன கால கட்டிடக்கலைப் பாணியில் குடமுழுக்கு செய்யப்பட்டும், புனரமைக்கப்பட்டும் மாற்றம் பெற்றுள்ள இத்திருக்கோயிலே, பல்லவர் கால பழமையான கோயில் என்பது களஆய்வின் வாயிலாக கண்டறியப்பட்டுள்ளது.  காலவெள்ளத்தில் அழிந்து பாழ்பட்டு தற்போது   நவீன கட்டிடக் கலைப்பாணியில் கோயிலின் விமானம் முதற்கொண்டு மாற்றம் பெற்ற போதிலும், பழைமையை பறைசாற்றும் வண்ணம் இத்திருக்கோயிலில் எண்ணற்ற தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
கோயிலின் தற்போதைய விமானம் நவீன சுதை வேலைப்பாடுடன் காணப்பட்டாலும், இதற்கு முன்னர் பன்னெடுங்காலமாக காணப்பட்ட கற்றளி விமானம் மாதிரியிலேயே தற்போதைய நவீன கருவறை விமானம் கட்டப்பட்டுள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். தற்போதுள்ள விமானம் வேசர  வகை விமானமாகும். இவ்வகை விமான வகையை பல்லவர் எடுப்பித்த பெரும்பாலான  கற்றளிகளில் (திருக்கோயில்கள்) காணலாம்.
 
சேதமடைந்த சோமாஸ்கந்தர் உருவச்சிற்பங்கள்
 திருக்கோயிலின் கருவறை வெளிப்புறம் வெட்டவெளியில்  சேதமடைந்த நிலையில் சோமாஸ்கந்த சிற்பமொன்று கிடப்பது கள ஆய்வில் தெரியவந்தது. சேதமடைந்துள்ள சோமாஸ்கந்த வடிவமைப்பில் சிவனும் பார்வதியும் சுகாசனத்தில் (ஒரு காலினை  மடக்கி மற்றொரு காலினை தரையில் ஊன்றிய நிலையில்) அமர்ந்துள்ளவாறுசிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. சிவ - பார்வதியின் இடுப்புவரை உள்ள பாகங்கள் சேதமடைந்து பின்னமாகி விட்டபடியால் எஞ்சிய பகுதிகளைக் கொண்டே சிலையின் முழு உருவம் பற்றிய முடிவுக்கு வரவேண்டியுள்ளது.சிவனின் ஆடை முழங்கால் வரை நீண்டு சற்று கனமாக இருப்பது போல காணப்படுவதால் பட்டாடையாகவே கருதவேண்டும். இடக்கையினை தொடையில் ஊன்றியவாறு காட்சியளிக்கும் சிவனின் கால்களில் கழலும், ஆடை மடிப்புகள் கூட தெளிவாகத் தெரியும் வண்ணம் அழகுற வடிக்கப்பட்டுள்ளது. பார்வதி தேவியின் சிற்பமும் எழிலுற கையில் வளையல் அணிந்து பட்டாடை அணியப்பெற்று காணப்படுகிறது. 
சிவபெருமானின் அறுபத்து நான்கு சிவ உருவத் திருமேனிகளில் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமே சோமாஸ்கந்தர் வடிவமாகும். தமிழ்நாட்டில்  கி.பி ஏழு மற்றும் எட்டாம் நூற்றாண்டுக்கு பின்னரே தமிழகத்தில் இவ்வகை சிற்பங்கள்  வடிக்கப்பட்டது, குறிப்பாக பல்லவர்கள் கட்டிய கற்கோயில்களில் கருவறையில் லிங்க மூர்த்தத்திற்கு பின்புறம் சோமாஸ்கந்தர் சிற்பத்தை  அமைக்கும் முறை உருவானது. அதிலும் இராஜ சிம்மன் எனப்பட்ட இரண்டாம் நரசிம்மவர்மன் (கிபி.680 – 700) கட்டிய அனைத்துக் கோயில்களிலும் சோமாஸ்கந்த மூர்த்தியின் உருவத்தை லிங்கத்திற்கு  பின்புறம்  உள்ள கருவறை சுவற்றில் புடைப்புச் சிற்பமாகவோ, தனிச்சிற்பமாகவோ வைக்கும் முறையை கையாண்டுள்ளான்.இராஜசிம்மன் மிகப்பெரும் சிவபக்தனாவான், தன்னை சிவசூடாமணி என்றே கல்வெட்டுக்களில் அடையாளப்படுத்திக் கொண்டான். சமண பெளத்த சமயங்கள் பரவி சமூகத்தில் துறவு நிலையை ஆதரித்தபோது இல்லறத்தில் ஒழுகி இறைவழிபாட்டில் ஈடுபடலே முக்திக்கான பிரதான வழி என்பதை உலகிற்கு உணர்த்தும் நோக்கில்தான் சிவ,பார்வதியுடன் கந்தன் வீற்றிருக்கும் சோமாஸ்கந்தர் உருவத்தை உருவாக்கினர். அறுபத்து மூவரில் சிறுத்தொண்ட நாயனாருக்கு மட்டும் இறைவன் சோமாஸ்கந்த வடிவில் காட்சியளித்தார் என்பது சைவர் வாக்கு.
சிங்க உருவச் சிற்பங்கள் 
திருக்கோயிலின்  சேதமடைந்த சோமாஸ்கந்தர் புடைப்புச் சிற்பத்திற்கு அருகிலேயே 3 அடி உயரம் கொண்ட இரண்டு சிங்க உருவ சிற்பங்கள் கருங்கல்லில்  காணப்படுகின்றன. இவற்றினை உற்று நோக்குகையில், தூண்களைத் தாங்கும் வண்ணம்  தூண்களின் அடிப்பகுதியில் இச்சிங்க உருவங்கள் இடம்பெற்றிருக்கலாம்  என்ற ஐயம் ஏற்பட்டாலும், இவை கருவறையின் வெளிப்புறதாங்குதளத்தில் கருவறை விமானத்தை   தலையில் சுமந்தவாறு இருக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டிருக்கவேண்டும் என்பதை உற்று நோக்கும்பொது அறியமுடிகிறது. பின்னங்கால்களை மடக்கி, முன்னங்  கால்களை தரையில் ஊன்றி, சுருண்ட வாலுடன் கர்ஜித்த நிலையில் கோரைப்பற்களுடன் கம்பீரமாக காட்சி தரும் இச்சிங்க உருவச் சிற்பங்கள்  பல்லவர் படைப்பாகும். கருவறை வாயில் வெளிப்புறத்தில் சிங்கங்களை வைத்து கட்டும் முறையை ஆரம்பித்து வைத்தவனும் இராஜசிம்மனே ஆவான்.  இராஜசிம்மன் கட்டிய பனைமலை தாளகிரீஸ்வரர் திருக்கோயிலில் இதே பாணியை பின்பற்றித்தான் கருவறை உருவாக்கப்பட்டுள்ளது.
செல்லியம்மனா, மூத்ததேவியா?
காளத்தீஸ்வரர்  திருக்கோயில் சுற்றுக்கு வெளியேஉள்ளூர் மக்களால் செல்லியம்மன் என அழைக்கப்படும் ஆலயம் உள்ளது. ஆனால் இது பல்லவர்கள் கால மூத்த தேவி சிற்பமாகும்.  கிழக்கு நோக்கிய  நிலையில் 3.5 அடி உயரத்துடன் 2.75 அடி பருமனுடன் காணப்படும் மூத்ததேவியின் சிற்பம்பெருத்த உடம்பும், பருத்த வயிறுமாக காட்சி அளிக்கிறது.  மூத்ததேவியின்  வலப்பக்கம் நந்தி வடிவத்தில் காணப்படும் உருவம், தேவியின் மைந்தன் மாந்தன்  என்பவனின் சிற்பமாகும். இடப்பக்கம் காணப்படும் அழகிய  பெண் உருவம், தேவியின்  புதல்வியான  மாந்தியை  குறிக்கிறது. மூத்ததேவியின் ஆயுதமான  துடைப்பம் இடப்புறமும்,  ஊர் தோட்டியான  காக்கை இவளது கொடியாக வலப்புறமும் வடிக்கப்பட்டுள்ளது.தேவி தனதுநீள் காதுச்செவிகளில் மகர குண்டலங்களை அணிந்து , வலக்கை கடக முத்திரையிலும் இடக்கைமாந்தியின் தொடை மீது கை வைத்தவாரும் அமர்ந்த நிலையில் அழகுறஅமர்ந்துள்ளார்.   வெந்த சாம்பல், வேகா கரிப்புழுதி, ஆட்டுத்தூசு, ஆடை துவைத்த நீர், விளக்குமாற்றின் புழுதி, உண்ட எச்சில், விளக்கின் நிழல் போன்றவை மூத்ததேவியின் வாழிடங்களாகும். கழுதை இவரது வாகனமாகும்.
பல்லவர், பாண்டியர்,  முற்கால சோழர்கள் என வேந்தர்கள் பலரும் போற்றிய மூத்ததேவியின் வழிபாடு  தமிழகத்தில் காலபோக்கில் கவனிப்பாரின்றி போனது.மூத்த தேவியை செல்வ வளம் தரும் தேவி ஆகவே மக்களும், மன்னரும் வழிபட்டு வந்திருக்கின்றனர்.திருமகளை வழிபடும் மக்களே மூத்ததேவியையும் வழிபட்டு வந்தனர். மூத்த தேவியே, எங்களுக்கு தீமை, சோம்பல், வறுமை, நோய் இவைகளை வழங்காதே! என்றுவேண்டிக் கொள்வதற்கே இவ்வழிபாடு பின்பற்றப்பட்டு வந்தது.
இத்தெய்வ வழிபாடு  சிவாலயங்களில் பரிவார தேவதையாக எங்கு அமைக்க வேண்டும்,  ஊரில் தனியாக மூத்ததேவி கோயில் எங்கு அமைக்க வேண்டும் எனத்தனியாக சிற்ப சாத்திர நூல்கள் விரிவாகக் கூறுகின்ற அளவுக்கு இத்தெய்வ வழிபாடானது  கி.பி.10-11ஆம் நூற்றாண்டு வரை தமிழ்நாடெங்கும்பரவலாக இருந்தது. அதன் பின்னர் இத்தெய்வத்தின் நேரடி வழிபாடு பெருமளவு மறைந்தது.இத்தெய்வ வழிபாடானது  துரதிருஷ்டத்திற்கும், தீட்டுக்கும், திருஷ்டிக்கும், சோம்பலுக்கும், அழகின்மைக்கும் குறியீடாக காலப்போக்கில்  கற்பிக்கப்பட்டது. வைணவ சமயத்தில் திருமகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பெற்றதால் இவ்வழிபாடு ஆழ்வார்களாலேயே  வெறுக்கப்பட்டு புறம் தள்ளப்பட்டது. மூத்ததேவியை  மூதேவி என இழிவுபடுத்தும் அளவுக்கு இத்தெய்வ வழிபாடு மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டது. இராஜசிம்மன் கட்டிய திருக்கோயில்களில் திருச்சுற்றில் மூத்ததேவிக்கும் தனிச் சன்னதி அமைத்து சிறப்பித்தான். காளத்தீஸ்வரர் திருக்கோயிலில் காணப்படும் மூத்ததேவி சிற்பம் இராஜசிம்மன் பாணியில் அமைக்கப்பட்டதேயாகும்.
காளத்தீஸ்வரர் திருக்கோயிலை கட்டியவன் இராஜசிம்மனே!            இரண்டாம் நரசிம்ம வர்மனுக்கு இராஜசிம்மன் என்ற பட்டப்பெயரும் உண்டு. இராஜ சிம்மன் தொண்டை மண்டலத்தை காஞ்சிபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு கிபி. 680 – 670 வரை ஆட்சிபுரிந்த பல்லவ மன்னன் ஆவான். சைவத்தில் ஈடுபாடு கொண்ட இராஜசிம்மன் காஞ்சி கைலாசநாதர் கோயிலை கட்டியவன். இவனது ஆட்சிக்காலத்தில்தான் மண் கோயிலாக இருந்த எண்ணற்ற திருக்கோயில்கள் கற்கோயில்களாக மாற்றப்பட்டன.
திருநின்றவூர் திருக்கோயிலை கட்டிய இராஜசிம்மன் எனப்படும்  இரண்டாம் நரசிம்மவர்மன், கி.பி.7 ஆம் நூற்றாண்டில்  பெருமாள்பட்டு காளத்தீஸ்வரர் திருக்கோயிலையும் சிவனுக்காக  கட்டியயுள்ளான், இதனை உறுதிப்படுத்தும் வண்ணம் எண்ணற்ற சான்றுகள் ஆய்வில் கிடைக்கப்பட்டன. கருவறை வெளிப்புற மடிப்புப் பகுதியில் அமர்ந்த நிலையிலான சிங்க உருவங்களை வைப்பது, கருவறை மூல லிங்கத்திற்கு பின்புறம் சோமாஸ்கந்தர் வடிவத்தை கல்லில் வடிப்பது, கோயிலின் திருச்சுற்றில் மூத்ததேவிக்கு தனி சன்னதியுடன் கோயில் அமைப்பது, சப்தமாதருக்கும் வீரபத்திரருக்கும் சன்னதியை உருவாக்குவது போன்றவை இராஜ சிம்மனின் தனி கலைப்ப்பாணியே. இவையனைத்துமே பெருமாள்பட்டு காளத்தீஸ்வரர் திருக்கோயிலுக்கும் பொருந்துகிறது.எனவே கடவுளின் குரல் கேட்டு பூசலார் நாயனாரின் கனவை நிறைவேற்றும் வண்ணம் திருநின்றவூரில் இருதயாலீஸ்வரர் ஆலயத்தை எடுத்த இராஜசிம்மனே பெருமாள்பட்டில் காளத்தீஸ்வரருக்கும் ஆலயம் எடுத்துள்ளான். காலப்போக்கில் காலவெள்ளத்தில் இத்திருக்கோயில் அழிந்து பாழ்பட்டு தற்போது மீண்டும் நன்முறையில் புனரமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. புனரமைக்கப்பட்டு தற்போது  குடமுழுக்கு செய்யப்பட்ட நிலையில் நவக்கிரக சிற்பங்கள், அம்பிகை, பைரவர் முதலிய சிற்பங்கள்  புதிதாக செய்விக்கப்பட்டு வழிபாட்டில் உள்ளன.
பெருமாள்பட்டில் தாங்கள் மேற்கொண்டு வரும் கள ஆய்வுகள் குறித்து பேரா.இல.கணபதிமுருகன்  மேலும் தெரிவிக்கையில்,“பெருமுளையூர் என்றும் பின்னர் பெருமுளைப்பட்டு எனவும் மாற்றம் பெற்ற  இத்தகைய வரலாற்றுச் சிறப்பு மிக்க பெருமாள்பட்டில் பல்லவர் கால அரண்மனை இருந்த தடயங்களும்  கிடைக்கப்பெற்றுள்ளது, அது பற்றி விரிவாக ஆராய்ந்து வருகிறோம், மேலும்  இவ்ஆய்வில் எங்களது திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக் கல்லூரி மாணவர்களையும் ஈடுபடுத்தவுள்ளோம்” என்று தெரிவித்தார்.                                                                      இல கணபதி முருகன்
இயக்குநர் ,திராவிடவரலாற்றுஆய்வுக்கழகம் ,உதவிப்பேராசிரியர்
வரலாற்றியல் & முதுகலை ஆராய்ச்சித்துறை
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக்கல்லூரி
திருத்தணி –631209. திருவள்ளூர் மாவட்டம்
அலைபேசி - 9677156345, Email – testphd@gmail.com
 

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo