தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் பணியிட மாற்றம் ரத்து..
கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட்டுறவு துறை பதிவாளராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் அது ரத்து செய்யப்பட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக செந்தில்ராஜ் தொடர்ந்து பணியாற்றுவார் என்று தலைமை செயலாளர் இறையன்பு அறிவித்துள்ளார்!!
அண்மையில் முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் உட்பட மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப் பட்டனர். பல்வேறு துறைகளுக்கான செயலாளர்களும் மாற்றப் பட்டனர். அதனைத் தொடர்ந்து கடந்த மே 16 ஆம் தேதி, 16 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 48 ஐஏஎஸ் அதிகாரிகளை ஒரே நாளில் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
கடந்த மே 19 ஆம் தேதி, 27 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 39 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டதும் குறிப்பிடத் தக்கது.
இன்று 7 ஐஏஎஸ் அதிகாரிகளை மீண்டும் பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தர விட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியராக உள்ள வினீத் ஐஏஎஸ், ஆவின் மேலாண் இயக்குனராக நியமிக்கப் பட்டுள்ளார். அவர் மாற்றுத் திறனாளிகள் நல இயக்குனராக நியமிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப் பட்டுள்ளது.
நிதித்துறை முதன்மை செயலாளராக உள்ள உதயசந்திரன் ஐஏஎஸ்-க்கு, தொல்லியல் துறை ஆணையராக கூடுதல் பொறுப்பு வழங்கப் பட்டுள்ளது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளராக உள்ள ககன்தீப்சிங் பேடி ஐஏஎஸ்-க்கு, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை முதன்மைச் செயலாளராக கூடுதல் பொறுப்பு வழங்கப் பட்டுள்ளது.
தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்பரேஷனின் மேலாண் இயக்குனராக இருக்கும் கமல் கிஷோர் ஐஏஎஸ், மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநராக நியமிக்கப் பட்டுள்ளார். இதன்மூலம் முன்னதாக அவர் செங்கல்பட்டு ஆட்சியராக நியமிக்கப் பட்ட உத்தரவு ரத்து செய்யப் பட்டுள்ளது.
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் மேலாண் இயக்குனராக இருக்கும் சுப்பையன் ஐஏஎஸ், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக நியமனம் செய்யப் பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக ராகுல் நாத் ஐஏஎஸ் தொடருவார் என்றும், அவரை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்ட உத்தரவு ரத்து செய்யப் படுவதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.
அதேபோல், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக செந்தில்ராஜ் ஐஏஎஸ் தொடருவார் என்றும், அவர் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக நியமனம் செய்யப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.