தூத்துக்குடியில் காவல் ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன் உட்பட 4 இன்ஸ்பெக்டர்கள் 19 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டு
தூத்துக்குடி 2021 ஜனவரி 11; தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 4 காவல் ஆய்வாளர்கள் உட்பட 19 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள்; எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
வேலை வாய்ப்பில்லாமல் சிரமப்பட்டுக்கொண்டிருந்த ஸ்ரீவைகுண்டம் துரைச்சாமிபுரத்தைச் சேர்ந்த இளைஞர் அசோக் சாம்ராஜ் என்பவர் தனக்கு வேலை வாய்ப்பு பெற்றுத்தர வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் முறையிட்டதன்பேரில் அவருக்கு சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மெஷின் ஆபரேட்டர் பணி வாங்கிக் கொடுத்த சிப்காட் காவல் நிலைய காவல் ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன் அவர்களின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதயில் கொலை முயற்சி மற்றும் கொலை மிரட்டல் வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகள் மணிகண்டன் மற்றும் மாரியப்பன் ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்ட கோவில்பட்டி மேற்கு காவல் ஆய்வாளர் அய்யப்பன் அவர்களின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
கடந்த 01.12.2020 அன்று சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கூட்டுக்கொள்ளையில் சிறந்த முறையில் துப்பறிந்து முக்கிய குற்றவாளியை கைது செய்த சாத்தான்குளம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பெர்னாட் சேவியர், தலைமை காவலர் அமிர்த எபனேசர், முதல் நிலைக் காவலர்; செல்லையா பாண்டியன், காவலர் மணிகண்டன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
கடந்த 05.01.2021 தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து அலுவலில் இருந்த காவலரை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் படுக்கப்பத்து கிராமத்தைச் சேர்ந்த பொன்னம்பலநாதன் (43) மற்றும் சக்திகுமார் (44) ஆகிய இருவரையும் ஈரோட்டில் வைத்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிய தட்டார்மடம் காவல் ஆய்வாளர் சாம்சன் ஜெபதாஸ், முதல் நிலைக் காவலர் ஷாஜன், காவலர்கள் ராஜேஷ், கெர்சோன் சுரேஷ் மற்றும் சுதேசன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
கடந்த 07.11.2020 அனறு திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாதன்கிணறைச் சேர்ந்த காயத்திரி சத்யா என்பவா தனது காரில் மதுரையிலிருந்து நாதன்கிணறு வரும் வழியில் 103 பவுன் தங்க நகைகள் தொலைந்து போனதாக கொடுத்த புகாரின்பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் எதிரி தங்க நயினார் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து நகைகளை மீட்டுக்கொடுத்த திருச்செந்தூர் உதவி ஆய்வாளர் சுந்தரம், திருச்செந்தூர் போக்குவரத்துப்பிரிவு தலைமைக் காவலர் ராஜ்குமார், ஆத்தூர் காவல் நிலைய தலைமைக் காவலர் இசக்கியப்பன், திருச்செந்தூர் காவல் நிலைய முதல் நிலைக் காவலர் சொர்ணராஜ் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்ஸோ வழக்கில் எதிரிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூபாய் 5000/- அபராதம் கிடைக்க உதவியாக இருந்த முதல்நிலைக் காவலர் ஹெப்சி அவர்களின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
சிப்காட் காவல் நிலைய கொள்ளை மற்றும் கொலை மிரட்டல் வழக்கில் எதிரிகள் இருவரை கசவன்குன்று கிராமத்தில் வைத்து கைது செய்து கொடுத்த கொப்பம்பட்டி காவல் நிலைய முதல்நிலைக் காவலர் செல்லப்பாண்டியன் மற்றும் தனிப்பிரிவு முதல்நிலைக் காவலர் ராஜ்குமார் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
4 காவல் ஆய்வாளாகள் உட்பட 19 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இப்பாராட்டு நிகழ்ச்சியின்போது தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் கோபி, தூத்துக்குடி தலைமையிட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் செல்வன் மற்றும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.