Onetamil News Logo

மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு புலி இறந்தால் தஞ்சை டெல்டாவில் பத்தாயிரம் ஏக்கர் நிலம் தரிசாகப் போய் விடும்” எப்படி? இதென்ன கயாஸ் தியரி? அறியாதவர்கள் கவனமாகப் படித்து உயிர்ச் சங்கிலியின் சாராம்சத்தை மனசுலே ஏத்திக்கோங்க.   

Onetamil News
 

மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு புலி இறந்தால் தஞ்சை டெல்டாவில் பத்தாயிரம் ஏக்கர் நிலம் தரிசாகப் போய் விடும்” எப்படி? இதென்ன கயாஸ் தியரி? அறியாதவர்கள் கவனமாகப் படித்து உயிர்ச் சங்கிலியின் சாராம்சத்தை மனசுலே ஏத்திக்கோங்க.   


தூத்துக்குடி2020 ஆகஸ்ட் 7; மனிதன் வேட்டைச் சமூகமாக இருந்த காலத்தில் பிற உயிரினங்களைப் போலவே அவனது நீர்த்தேவையும் குறைவாகவே இருந்தது. குடிக்க, சமைக்க அரிதாகக் குளிக்க! அவன் வேளாண் சமூகமாக மாறிய பிறகு தான்,பிற உயிரினங்களுக்கான நீரையும் அபகரிக்கும் அளவு அவனது நீர்த்தேவை அதிகமாக உயர்ந்தது.
தமிழகத்துக்கான மொத்த நீர்த்தேவையில் 70% நீரைத் தருவது தென்மேற்குப் பருவக் காற்று கொண்டு வந்து சேர்க்கும் மழை மேகங்கள் தாம். அந்த மேகங்களைத் தடுத்து நிறுத்தி, குளிர்வித்து மழையாகப் பெற்று, அதைத் தன்னுள் சேமித்து ஊற்றாக மாறி ஆறாக நமக்கு அனுப்பி வைப்பது மேற்குமலைத்தொடர் மலையும்,காடும்.
பிரபஞ்சவெடிப்பில் உருவான மலைத்தொடர்கள் உடல் எனில் அதிலுள்ள காடுகள் அதன் உயிர். நித்தமும் ஒவ்வொரு நொடியும் அவை தன்னைப் புதிதாக உருவாக்கி உயிர்ப்பித்துக் கொண்டே இருக்கின்றன. 
அது எப்படி?
முதன்முறை உருவான காடுகள் தேனீக்களாலும், பறவைகளாலும் பரந்து உருவாகியிருக்கும். சரியா?
அப்படி உருவான காடுகள் அடர்ந்து வளர்ந்த பிறகு, சூரியஒளி உட்புக வழியில்லாமல், புதிய செடிகள் முளைத்திருக்காது தானே! எனில், முதன்முறை உருவான காடு மீண்டும் உருவாக எத்தனை நூறாண்டுகள் தேவைப்படும்? இதற்குத் தான் மான், பன்றி, முயல் போன்ற தாவரப் பட்சிணிகளை இயற்கை உருவாக்கிக் கொண்டது.
இவைகள் மரங்களின் ஊடாகப் புகுந்து சிறு செடி, கொடி, கிழங்களைப் பிய்த்துத் தின்ன, அதனால் உருவாகும் இடைவெளியில் சூரியஒளி புகுந்து தக்க ஈரப்பதத்தை உருவாக்கி, பூஞ்சைக்காளான், சிறுசெடி, கொடிகளுக்கு உயிர் அளிக்க அந்த அடர்ந்த வனம் மீண்டுமொரு முறை உயிர்ப்பிக்கப்படுகிறது.

சரி! இப்போது காட்டுக்கு புலியின் தேவை எங்கிருந்து வந்தது? சைவ பட்சிணிகளின் வரம் / சாபம் எந்நேரமும் தின்று கொண்டேயிருப்பது.. எப்போதும் இனப்பெருக்கம் செய்து கொண்டே இருப்பது. அப்படி அளவுக்கு அதிகமான மான், பன்றி, முயல்கள் உருவானால் சிறுசெடியைக் கூட தப்ப விடாமல் மேய்ந்து விடுமே!

இவற்றைக் கட்டுப்படுத்தத் தான் காடு தனது காப்பாளனாக புலியை உருவாக்கிக் கொண்டது. கிரிக்கெட்டில் தோனி போல காட்டில் புலி! அப்படியொரு ஜென்டில்மேன் அது. பசித்தால் தான் வேட்டையாடும். பசித்தாலும் சூள் கொண்ட மானைக் கொல்லாது. சில நேரங்களில் இளம் மான் குட்டிகளோடு விளையாடுமளவு பெருந்தன்மையானது.காட்டிலுள்ள சிறுத்தை, நரி போன்ற இதர மாமிசப்பட்சிணிகளைக்கூட சிறுவிலங்கு வேட்டைக்காக உடன் வசிக்க பெருந்தன்மையாகப் புலி அனுமதித்திருக்கிறது. ஆனால், மனிதனோ வெறும் அரைபாட்டில் பிராந்திக்காக புலியையும் கொல்வான்! மானையும் கொல்வான். எனவே தான் மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல் ஆகிறான்.ஒரு புலி உயிர் வாழ ஆயிரம் சதுரகிலோமீட்டர் காடு தேவை. அத்தனைப் பெரிய பரப்பளவை பராமரித்து ஆண்டு ஆட்சி செய்கிறது ஒற்றைப் புலி! ஒரு காட்டின் ஆரோக்கியம் அதில் எத்தனைப் புலிகள் வசிக்கின்றன எனும் எண்ணிக்கையில் தான் கணக்கிடப்படும். எனவே தான் ஒரு புலி இறந்தாலும் நாம் பதற வேண்டியிருக்கிறது..
ஆக, புலிகள் இல்லையெனில் மேற்குமலைக்காடுகள் இல்லை! காவிரி இருந்திருக்காது. கரிகாலன் கல்லணை கட்டியிருக்க முடியாது. ராஜராஜன் பெரும் சாம்ராஜ்யம் அமைத்திருக்க முடியாது.ராஜேந்திரன் கடல்கடந்து வென்றிருக்க முடியாது. இயல்,இசை,நாடகம் இல்லை. எனவே தான், சோழர் கொடியில் புலி வீற்றிருந்தது.
எனவே தான் மாடு கட்டி போரடித்தால் மாளாது என யானை கட்டி போரடித்த தஞ்சை நெற்களஞ்சியத்தின் தொல்குடி மக்கள் தமது கடவுளாக புலிகளை வணங்கினர். கோவில்களில் முதல் சிற்பம் புலி. திருவிழாக்களில் முதல் ஆட்டம் புலியாட்டம். காட்டுக்கே போகாமல், புலியையே காணாமல் புலியின் அருமையை அறிந்திருந்தனர்.
புலிகள் இல்லாவிடின் காவிரி, தென்பெண்ணை, வைகை நமக்கு இல்லை. இவைகள் இல்லாமல் தமிழகம் வெறும் பாலைவனம். ஓடங்களில் சென்றிருக்க முடியாது. ஒட்டகங்களில் தான் பயணித்திருக்கணும்.
நண்பர்களே! மனித வாழ்வின் ஆதாரம் நீர். அந்த உயிர்நீரை அளிப்பது காடுகள். அந்தக் காடுகள் நமக்குக் கோவில் எனில் அதில் வாழும் கடவுள் புலிகள். காடுகளுக்குச் செல்லும் போது ஜாலியாக பியர்பாட்டிலை உடைத்து வீசும் போது, அவை நமக்களித்த உணவை, மொழியை, பண்பாட்டை  இழிவு செய்கிறோம் என்பதை உணருங்கள்.
து.வெங்கடேஷ்
மாவட்ட வன அலுவலர்
கோயம்புத்தூர்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo