5 மாநில தேர்தலில் ஒரு ஓட்டுக்கு ரூ. 20 ஆயிரம் பணம் பாஜக கொடுத்துள்ளது; மதிமுக பொதுசெயலாளர் வைகோ குற்றச்சாட்டு
தூத்துக்குடி 2018 டிசம்பர் 8 ;5 மாநில தேர்தலில் ஒரு ஓட்டுக்கு ரூ. 20 ஆயிரம் பணம் பாஜக கொடுத்துள்ளது; என புதுக்கோட்டையில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ கூறினார்.
வைகோ மேடைக்கு வந்தவுடன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட மதிமுக சார்பில் தெற்கு மாவட்ட செயலாளர் புதுக்கோட்டை செல்வம் தேர்தல் நிதியாக முதல் கட்டமாக ரூ. 5 லட்சத்து 100 ரூபாயை வைகோவிடம் சூட்கேசில் வழங்கினார்.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற வாக்குச்சாவடி மற்றும் முகவர்களுக்கான சந்திப்பு நிர்வாகிகள் கூட்டம் தூத்துக்குடி தெற்கு மாவட்ட மதிமுக சார்பில் புதுக்கோட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் மாவட்ட செயலாளர் புதுக்கோட்டை செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதற்க்கு மாவட்ட துணை செயலாளர் வீரபாண்டி செல்லச்சாமி முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞரணி செயலாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்புரையாற்றினார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மதிமுக பொது செயலாளர் வைகோ சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில் மாநில மீனவரணி செயலாளர் நக்கீரன், மாநில நிர்வாகி மல்லைசத்யா, மாநகர செயலாளர் முருகபூபதி, ஒன்றிய செயலாளர்கள் சுந்தர்ராஜ், சரவணன், முனியசாமி உள்ளிட்ட ஏராளமான மதிமுகவினர் கலந்து கொண்டனர்
கூட்டம் நடைபெறும் முன்னதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஸ்டெர்லைட் ஆலை வழக்கு சம்பந்தமாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் விசாரணையின் போது,நீதிபதி எனக்கு பேச அனுமதி மறுத்தார். நான் அமைதியாக இருந்தேன். அப்பொழுது ஸ்டெர்லைட் வழக்கறிஞர் அரிமாசுந்தரம், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக 22 ஆண்டுகளாக தமிழகத்தில் பாேராட்டம் நடத்தி வருபவர் வைகோ என்று கூறிய பின்பு தான் நீதிபதிக்கு என்னை பற்றி தெரிந்தது.
வரும் திங்கள்கிழமை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது 20 நிமிடம் பேச வாய்ப்பு கேட்பேன். என்னையும் ஒரு மனுதாரராக சேர்க்க வேண்டு மென குரல் கொடுப்பேன். அப்படியும் பேச அனுமதி மறுத்தால் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வேன்.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாமென பசுமை தீர்ப்பாயம் கூறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அப்படி பசுமை தீர்ப்பாயம் கூறினால் அவற்றை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன். ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் போராட்டம் தான் நடந்தது. அரசியல் போராட்டம் அல்ல. மே 22ம் தேதி 13 பேரை சுட்டுக்கொன்றது தமிழக போலீஸ். அதில் ஒருவர் கூட அரசியல்வாதி அல்ல. போராடிய மக்கள் தான். மேகதாது அணையை கட்டுவதற்கு மத்தியஅரசு, அணைப்பாதுகாப்பு மசோதா நிறைவேற்ற துடித்து கொண்டிருக்கிறது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் தமிழ்நாடு சுத்தமாக அழிந்து விடும். நாம் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டியது தான். ஏனெனில் கேரளா, கர்நாடகா மாநிலங்களிலிருந்து ஒரு சொட்டு தண்ணீர் கிடைக்காது .அவர்களது மாநிலத்திலேயே புதிய அணைகளை கட்டி நீரை திருப்பி விட்டு விடுவார்கள். தமிழகஅமைச்சரவை கூட்டத்தில் கூட மேகதாது அணைக்கு எதிராக தீர்மானம் சரியாக இயற்றவில்லை. மத்தியஅரசை கண்டிக்கவில்லை. இதை தான் திமுக தலைவர் ஸ்டாலின் சுட்டி காட்டினார். தற்போது நடைபெற்று வரும் 5 மாநில தேர்தலில் ராஜஸ்தான், மத்தியபிரதேசத்தில் ஒரு ஓட்டுக்கு ரூ. 20 ஆயிரம் பணம் பாஜக கொடுத்துள்ளது. எனவே அங்கு பாஜக வெற்றி பெற வாய்ப்புண்டு. 20 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் வருமென கூறுகிறார்கள். ஆனால் நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து தான் 20 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் வருமென எனக்கு தோன்றுகிறது. திமுக தலைமை முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்போம். தற்போது 234 தொகுதிகளிலும் மதிமுக சார்பில் தேர்தல் முகவர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு அடையாளஅட்டை வழங்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.