பாளையங்கோட்டை முதன்மை சாலை தமிழ் சாலை என பெயர் சூட்டப்பட்டு பெயர் பலகையை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ திறந்து வைத்தார்.
தூத்துக்குடி 2021 பிப்ரவரி 22 ;தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள பாளையங்கோட்டை முதன்மை சாலை தமிழ் சாலை என பெயர் சூட்டப்பட்டு பெயர் பலகையை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ அவர்கள் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் அருகில் தூத்துக்குடி மாநகராட்சியின் பாளையங்கோட்டை முதன்மை சாலைக்கு தமிழ் சாலை பெயர் பலகை திறப்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், தலைமையில் இன்று (22.02.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு பெயர் பலகையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன், மாநகராட்சி ஆணையர் சரண்யாஅரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசியதாவது:
தமிழ்நாடு அரசு தமிழ் ஆட்சிமொழி பண்பாடு மற்றும் தொல்லியல் துறையின் உயர்மட்ட கூட்டத்தில் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தின்படி மாவட்ட தலைநகரங்களில் அமைந்துள்ள முதன்மை சாலையினை “தமிழ் சாலை” என பெயர் சூட்ட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாக அனுமதியுடன் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை மாநகராட்சி சாலையினை “தமிழ் சாலை” என பெயரிடப்பட்டு இன்று “தமிழ் சாலை” பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் “தமிழ் சாலை” என பெயர் வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாநகராட்சி செயற்பொறியாளர்கள் ரெங்கநாதன், சேர்மக்கனி, நகர்நல அலுவலர் நித்யா, உதவி செயற்பொறியாளர் சரவணன், முக்கிய பிரமுகர் ஆறுமுகநயினார் மற்றும் பல்வேறு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.