Onetamil News Logo

டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் ;வீரபாண்டியன்பட்டணம் கிராமத்தில் 1 கோடியே 34 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் செலவில் 60 சென்ட் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார்

Onetamil News
 

டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் ;வீரபாண்டியன்பட்டணம் கிராமத்தில் 1 கோடியே 34 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் செலவில் 60 சென்ட் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார்


தூத்துக்குடி 2020 பிப்.20:தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி  செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், வீரபாண்டியன்பட்டணம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் அவர்களின் மணிமண்டபத்தினை நாளை (22.2.2020) காலை 10.00 மணியளவில் திறந்து வைக்கவுள்ளார்கள்.
 புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் செயல்படும் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் தலைமையிலான அரசு, நாட்டிற்காக பெரும் தொண்டாற்றி பல்வேறு தியாகங்களைச் செய்த தலைவர்கள் மற்றும் சான்றோர்களை சிறப்பிக்கும் வகையிலும், அவர்களின் தியாகங்களை வருங்கால சந்ததியினர் அறிந்துகொள்ளும் வகையிலும், நினைவிடங்கள், நினைவு இல்லங்கள், நினைவுச் சின்னங்கள் மற்றும் மணிமண்டபங்களை உருவாக்கியுள்ளது. அதன்படி, தற்போது தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் 1 கோடியே 34 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் செலவில் 60 சென்ட் நிலத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் அவர்கள் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. 
டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் , ஆதித்தனார்-கோவிந்தம்மாள் இணையருக்கு இரண்டாவது மகனாக 1936ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24ஆம் நாள் பிறந்தார். இராமகிருஷ்ணா உயர்நிலைப்பள்ளியில் படித்த பின் மாநிலக் கல்லூரியில் படிப்பைத் தொடர்ந்து, பி.ஏ பட்டம் பெற்றார். கல்லூரியில் படிக்கும்போதே தேசிய மாணவர் படை (சூஊஊ) தளபதியாக இருந்ததுடன் சென்னை மாநகரில் உள்ள அனைத்துக் கல்லூரிகளின் சூஊஊ படைகளுக்கு தலைவராக நியமிக்கப்பட்டார். இந்திய துணைக்கண்டத்தில், பத்திரிகை, விளையாட்டு, கல்வி, தொழில் முதலான பல்வேறு துறைகளிலும் பெரும் சாதனையாளராகத் திகழ்ந்தவர் டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் அவர்கள்.
சி. பா. ஆதித்தனார் 1942ஆம் ஆண்டு தினத்தந்தி நாளிதழைத் தொடங்கினார். தந்தையை பின்பற்றி பத்திரிகைத் துறையில் சிவந்தி ஆதித்தன் அவர்கள் ஈடுபட்டார். அச்சுக் கோர்ப்பவர், அச்சிடுபவர், பார்சல் கட்டி அனுப்புகிறவர், பிழை திருத்துபவர், நிருபர், துணை ஆசிரியர் என பத்திரிகையின் அனைத்து துறைகளிலும் பயிற்சி பெற்றார். 
பா. சிவந்தி ஆதித்தன் அவர்கள் 1959ஆம் ஆண்டு, ‘தினத்தந்தி’யின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார். அச்சமயத்தில், சென்னை, மதுரை, திருச்சி ஆகிய மூன்று இடங்களில் இருந்து மட்டுமே தினத்தந்தி வெளிவந்து கொண்டிருந்தது. டாக்டர். பா.சிவந்தி ஆதித்தனாரின் நிர்வாகத் திறமையில், தினத்தந்தி நாளுக்கு நாள் வளர்ந்து, இப்போது பெங்களூர், மும்பை, புதுச்சேரி உள்பட 15 நகரங்களில் இருந்து வெளிவருகிறது.

திருச்செந்தூரில் சி.பா.ஆதித்தனார் நிறுவிய கல்லூரியை பல்கலைக்கழகம் அளவுக்கு டாக்டர். பா. சிவந்தி ஆதித்தனார் அவர்கள் உயர்த்தினார். டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி, கோவிந்தம்மாள் ஆதித்தனார் பெண்கள் கல்லூரி, ஆதித்தனார் கல்லூரி ஆகியவற்றின் தலைவராகவும், டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி, டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் கல்வியில் கல்லூரி ஆகியவற்றின் நிறுவனத் தலைவராகவும் இருந்து வந்த டாக்டர் பா. சிவந்தி ஆதித்தன் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் செனட் உறுப்பினராகவும், சென்னை பல்கலைக் கழக சிண்டிகேட் உறுப்பினராகவும்  இருந்துள்ளார்.
பத்திரிகை விளையாட்டு, கல்வி ஆகிய துறைகளில் செய்த சேவையைப் பாராட்டி இவருக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 1994 நவம்பர் 23ஆம் தேதி டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது. அண்ணாமலை பல்கலைக்கழகம் 1995ஆம் ஆண்டிலும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 2004ஆம் ஆண்டிலும், சென்னை பல்கலைக்கழகம் 2007ஆம் ஆண்டிலும் டாக்டர் பட்டம் வழங்கின. 1982ஆம் ஆண்டும், 1983ஆம் ஆண்டும் தொடர்ந்து இரண்டு முறை சென்னை மாநகர ஷெரீப் ஆக நியமிக்கப்பட்டார். 
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் ,கைப்பந்தாட்டத்தில் மிகுந்த முனைப்பு உடையவர். இந்திய கைப்பந்து விளையாட்டு சங்கத் தலைவராகவும், இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராகவும் பணியாற்றியவர். இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் சிறந்த சேவை புரிந்ததற்காக டாக்டர் பா. சிவந்தி ஆதித்தன் அவர்களுக்கு கடந்த 2008 ஆம் ஆண்டில் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் 2013ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் நாள் இயற்கை எய்தினார். 

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி , செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், வீரபாண்டியன்பட்டணம் கிராமத்தில் 1 கோடியே 34 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் செலவில் 60 சென்ட் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் அவர்கள் மணிமண்டபத்தினை நாளை(22.2.2020) திறந்து வைக்கவுள்ளார்கள். இவ்விழாவில்,  துணை முதலமைச்சர்,  அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், வாரியத்தலைவர்கள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் சீர்மிகு பெருமக்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள். 

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo