தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, கொரோனா தடுப்பு பணிகள் குறித்து செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி
தூத்துக்குடி 2020 மே 21; தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, கொரோனா தடுப்பு பணிகள் குறித்து செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது.....தூத்துக்குடி மாவட்டத்தில் 20.05.2020 அன்று வரை 113 நபர்களுக்கு கொரோனா தொற்று நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 34 நபர்கள் பூரண நலம் பெற்று வீடு திரும்பி உள்ளார்கள். சிகிச்சை பலன் இன்றி 2 நபர்கள் உயிரிழந்துள்ளார்கள். எஞ்சியுள்ள 77 நபர்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மும்பை உட்பட மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து 71 நபர்களும், குஜராத் மாநிலத்திலிருந்து 3 நபர்களும் மற்றும் சென்னை மாவட்டத்தில் இருந்தும் 8 நபர்களும், நமது மாவட்டத்திற்கு வருகை தந்தவர்கள். தினம்தோறும் சுமார் 120 முதல் 150 நபர்கள் வரை வெளி மாநிலத்தில் இருந்து தொழிலாளர்கள் வருகை தந்து கொண்டு இருக்கிறார்கள். நமது மாவட்டத்தில் உள்ள பிரதான சாலைகளில் 15 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் நமது மாவட்டத்தில் 9 பிரி கொரான்டைன் முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் 700 நபர்கள் தங்குவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு உணவு, மருத்துவ வசதி ஆகியவற்றை அளித்திட பொது சுகாதாரத்துறை அலுவலர்கள், வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள் ஈடுபடுத்தபட்டுள்ளனர். குறிப்பாக வெளி மாநிலத்தில் இருந்து நமது மாவட்டத்திற்கு வருகை தரும் நபர்களை சோதனை சாவடிகளில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தப்பட்டு, அவர்களை பிரி கொரான்டைன் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு கொரோனா தொற்று நோய் பரிசோதனைகள் செய்யப்படுகிறது. கொரோனா தொற்று நோய் உறுதி செய்த நபர்களை தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படும். கொரோனா தொற்று நோய் இல்லாத நபர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்து தனிமைபடுத்தப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 13 நோய் கட்டுபாட்டு தனிமைபடுத்தப்பட்ட பகுதிகள் உள்ளது. இந்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்படும். மேலும் சுகாதாரத்துறை அலுவலர்கள் வீடு வீடுகளாக சென்று சளி, காய்ச்சல், இரும்பல் போன்ற அறிகுறிகள் உள்ள நபர்களின் விபரங்களை சேகரிக்கப்படும். மேலும் கொரோனா தொற்று நோய் உள்ள நபர்களின் தொடர்புகள் கண்டறிந்து அவர்களுக்கும் கொரோனா தொற்று நோய் பரிசோதனை மேற்கொள்ளப்படும். நமது மாவட்டத்திற்கு மே 4ம் தேதிக்கு பிறகு மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து 1,000 நபர்களும், கர்நாடகா மாநிலத்தில் இருந்து 176 நபர்களும், குஜராத் மாநிலத்தில் இருந்து 75 நபர்களும் மற்றும் பிற மாநிலத்தில் இருந்து பல்வேறு தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் என 1,494 நபர்கள் வருகை தந்துள்ளார்கள்.
நமது மாவட்டத்தில் வெளி மாநிலத்தை சேர்ந்த 8,700 நபர்கள் பணியாற்றி கொண்டு இருக்கிறார்கள். இதுவரை 1,919 நபர்கள் உத்திரபிதேசம், பீகார், ஜார்கண்ட் ஆகிய மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் தங்களது ஊர்களுக்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ள தொழிலாளர்களின் பட்டியல் தயார் செய்து மண்டல அலுவலர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த வாரத்தில் 3 ரயில் மூலம் பஞ்சாப், உத்திரபிதேசம் மற்றும் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதுவரை அவர்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதிகள் அந்தந்த நிறுவனத்தின் மூலம் ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி, ஊரக பகுதியில் தொழிற்சாலைகள் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுப்பணித்துறை சார்ந்த பணிகள், சாலை பணிகள், பேரூராட்சியில் ஒப்பந்த அடிப்படையிலான பணிகள் மேற்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் உத்தரவுப்படி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் 100 சதவிதம் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் சுமார் 20,000 பணியாளர்கள் தினம்தோறும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி, நமது மாவட்டத்தில் இந்த வருடத்தில் 14 கண்மாய்கள் குடிமராமத்து திட்டத்தில் தூர்வார ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் தூர்வாறும் பணிகள் துவக்கி வைக்கப்படும். வருகிற மழை காலத்திற்கு முன்பாக இந்த பணிகள் முடித்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பில் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஆர்சனிக் ஆல்பம் 30 மற்றும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சுகாதாரத்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ள திருத்தப்பட்ட அரசாணையில் ஒரு பகுதியில் ஒரு நபருக்கு மட்டும் கொரோனா தொற்று ஏற்பட்டால் அவர் வீட்டிலே தனிமைப்படுத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பகுதியில் 5 நபர்களுக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் மட்டும்தான் அந்த பகுதி முழுவதும் தனிமைபடுத்தபட்ட பகுதியாக மாற்றப்படுகிறது.
நமது மாவட்டத்தில் ஏற்கனவே 27 நபர்கள் மட்டும்தான் கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தார்கள். பின்னர் 20 நாட்களாக நமது மாவட்டத்தில் எந்த ஒரு நபருக்கும் தொற்று இல்லாத நிலை இருந்தது. வெளி மாநிலம் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலத்தில் இருந்து நமது மாவட்டத்திற்கு வருகை தரும் நபர்களுக்கு கொரோனா தொற்று நோய் இருக்கிறது. அதேபோல் கோயம்பேடு மார்கெட் மற்றும் சென்னை பகுதியில் இருந்து வருகை தரும் நபர்களும் அறிகுறிகள் இருக்கிறது. திருச்செந்தூர் பகுதியில் 1 நபருக்கும், கோவில்பட்டி வட்டத்தில் 2 நபர்களுக்கும் கொரோனா தொற்று நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு யார்மூலம் தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.