ஒருங்கிணைந்த சாலை விபத்து குறித்த தகவல் சேகரிக்கும் இணைய தளம் (IRAD – Integrated Road Accident Database) பற்றிய காவல்துறையினருக்கான பயிற்சி வகுப்பு ;எஸ்.பி.ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி 2021 பிப்ரவரி 26 ;தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சாலை விபத்து குறித்த தகவல் சேகரிக்கும் இணைய தளம் (IRAD – Integrated Road Accident Database) பற்றிய காவல்துறையினருக்கான பயிற்சி வகுப்பை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.
மத்திய, மாநில அரசுகள் சாலை விபத்துக்களை குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் சாலை பாதுகாப்பு குறித்த விழப்புணர்வு ஏற்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளித்து ஜனவரி மாதத்தில் சாலை பாதுகாப்பு வாரம் என ஒரு விழாவாக கொண்டாடப்பட்டு வந்தது. இந்த ஆண்டு கடந்த 18.01.2021 முதல் 17.02.20201 வரை ஒரு மாத சாலை பாதுகாப்பு விழாவாக கொண்டாடப்பட்டு, கலை நிகழ்ச்சிகள் உட்பட பொதுமக்களின் கவனத்தை ஈர்;க்கும் வகையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் விழப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்திக் கொண்டு வருகின்றனர்.
இந்தியாவில் மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ஒருங்கிணைந்த சாலை விபத்து குறித்த தகவல் சேகரிக்கும் இணைய தள (IRAD – Integrated Road Accident Database) செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம் சாலை விபத்து குறித்த அனைத்து தகவல்களும் சேகரிக்கப்பட்டு, அவை என்னென்ன காரணங்களால் ஏற்படுகின்றன, அவற்றை குறைப்பதற்கு என்னென்ன வழிமுறைகளை கையாளலாம் என்பதை ஆராய்வதற்கு இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செயலிகளை காவல்துறையினர் எவ்வாறு தங்களது செல்போன்களில் பதிவிறக்கம் செய்வது, பதவிறக்கம் செய்த செயலியில் சாலை விபத்து குறித்து என்னென்ன தகவல்களை எவ்வாறு பதிவிடுவது என்பது குறித்த பயிற்சி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த செயலி மூலம் காவல்துறையினர் சாலை விபத்து நடந்த இடத்திற்கு சென்று, விபத்து நடந்த இடத்தில் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை (Latitude & Longtitude) குறித்த தகவல் பதிவு செய்யப்படும். மேலும் விபத்து குறித்து அந்த செயலியில் கேட்கப்படும் தகவல்களை பதிவு செய்யவேண்டும். இந்த தகவல்களின் அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் ஆராய்ந்து, சாலை விபத்துக்களை குறைப்பதற்கான வழிமுறைகள் கண்டறியப்படும். காவல்துறை போன்று நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை, மருத்துவத்துறை உட்பட பல்வேறு துறைகள், சாலை விபத்து குறித்து தங்கள் துறை சார்ந்த தகவல்களையும் இதில் பதிவு செய்வார்கள். இந்த செயலி குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு இணையதள அமைப்புடன் (Crime and Criminal Tracking Network and Systems) இணைக்கப்பட்டுள்ளது.
இதற்கான முதற்கட்ட பயிற்சியில் காவல்துறை உதவி ஆய்வாளர்கள் உட்பட ஒவ்வொரு காவல் நிலையங்களிலிருந்தும் இரண்டு காவலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்து இப்பயிற்சியை பற்றியும், இப்பயிற்சியின் நோக்கம் பற்றியும் எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி தலைமையிட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. செல்வன் முன்னிலை வகித்தார். தேசிய தகவல் மையத்தின் மாவட்ட மேலாளர் சங்கர் மற்றும் அவரது குழுவினர் இப்பயிற்சி வகுப்புகளை நடத்தி, ஆலோசனை வழங்கினர்.