Onetamil News Logo

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு ;தூத்துக்குடியில் போராட்டம் ;5000 பங்கேற்பு 

Onetamil News
 

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு ;தூத்துக்குடியில் போராட்டம் ;5000 பங்கேற்பு 


தூத்துக்குடி 2020 ஜனவரி 25 ;குடியுரிமை மசோதாவில் இஸ்லாமியர்களையும் இலங்கை தமிழர்களையும் புறக்கணித்ததை கண்டித்தும், இந்திய இறையாண்மைக்கு எதிராக கொண்டுவரப்பட்டிருக்கும் அச்சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் தூத்துக்குடி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கமிட்டனர்.
குடியுரிமை சட்டத்தை வாபஸ் பெறக்கோரி தூத்துக்குடியில்
 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் மாபெரும் பேரணி-ஆர்ப்பாட்டம்
மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனுவும் கொடுத்தனர்.
குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி தூத்துக்குடியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் பேரணியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரியும், தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்.), தேசிய குடியுரிமை பதிவேடு (என்.ஆர்.சி.) ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரியும், இச்சட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்றக்கூடாது என்று தமிழக அரசை வலியுறுத்தியும் நேற்று மாநிலம் முழுவதும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன்படி, தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தூத்துக்குடியில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் மாவட்டத்தலைவர் சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அஸாருதீன், துணைத்தலைவர் தமீம் அன்சாரி, பொருளாளர் நாசர், துணைச்செயலாளர்கள் சிக்கந்தர், இமாம்பரீது, ஹஸன் சைபுதீன், மருத்துவ அணி செயலாளர் ரஷீத்காமில், தொண்டரணி செயலாளர் வசிமுல்லாஹ், மாணவரணி செயலாளர் அப்ரிடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தூத்துக்குடி பிரையண்ட் நகர் சந்திப்பிலிருந்து துவங்கிய பேரணி, வி.வி.டி.சிக்னல் சந்திப்பை வந்தபோது போலீசார் பேரணியை தடுத்து நிறுத்தியதால் அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், மாநில பேச்சாளரும், மாநில மேலாண்மைக்குழு உறுப்பினருமான அப்துந்நாசர் கலந்துகொண்டு பேசியதாவது,  மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்த சட்டம் நாட்டு மக்களை அவதிக்குள்ளாக்கும் சட்டமாகும்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் சமூக அக்கறை கொண்டவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்திய விடுதலைக்குப் பிறகு நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருவது தற்போது தான் என்று குறிப்பிடும் அளவுக்கு இந்தச் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் வீரியமடைந்துள்ளன.
குடியுரிமை திருத்தச் சட்டத்திலிருந்து ஒரு அங்குலம் கூடப் பின்வாங்கப் போவதில்லை என்று உள்துறை அமைச்சர் அமீத்ஷா தெரிவித்துள்ளார். நாங்களும் எங்கள் போராட்டத்திலிருந்து ஒரு அங்குலம் கூடப் பின்வாங்க மாட்டோம் என்பதை உணர்த்தும் விதமாகத் தான் இந்தப் போராட்டம் நடைபெறுகின்றது.
மத்தியில் ஆளும் பாஜக அரசு, தங்களுக்குப் பெரும்பான்மை இருப்பதால் இந்தச் சட்டங்களை நாங்கள் அமல்படுத்துறோம் என்று கூறுகின்றது.  ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தான்  பாஜக பெரும்பான்மையாகப் பெற்றுள்ளதே தவிர இந்திய மக்களில் பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெறவில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அது பெற்ற வாக்குகள் வெறும் 37 சதவிகிதம் தான். மீதமுள்ள 63 சதவிகித மக்கள் பாஜகவை எதிர்த்தே வாக்களித்திருக்கின்றனர். நாட்டிலுள்ள மூன்றில் இரண்டு பங்கு மக்கள் பாஜகவையும், அதன் மதவெறிப் பிரச்சாரத்தையும் எதிர்க்கின்றர். அதுதான் இப்போது எரிமலையாக வெடித்துள்ளது என்பது தன்னெழுச்சியான  குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் மூலம் நிரூபணமாகியிருக்கன்றன. மக்கள் ஆதரவு தனக்கு உள்ளது என்ற தனது வாதத்தில் பாஜக உறுதியாக இருக்குமேயானால் இப்போது நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்தத் தயாரா?
நரேந்திர மோடி, அமீத்ஷா, ராஜ்நாத் சிங் போன்றோர்,  இது முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல என்று கூறி வருகின்றனர். ஆனால், வங்கதேச அகதிகள் வந்து விட்டார்கள் என்று ஒரு பாஜக எம்.எல்.ஏ.வின் பொய்யான வாட்சப் செய்தியை நம்பி முஸ்லிம்களுக்குச் சொந்தமான நூற்றுக்கணக்கான வீடுகளை கர்நாடக போலீசார் இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளனர். என்.ஆர்.சி.யைக் கொண்டு வருவதற்கு முன்பே இப்படிச் செய்பவர்கள் என்.ஆர்.சி. நடைமுறைக்கு வந்தால் என்ன செய்வார்கள் என்பதைக் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை.
குடியுரிமை திருத்தச் சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல என்ற மோடியின் வாதம் பொய் என்பதை நேற்று வெளியான ஹிந்து தமிழ் நாளிதழ் தோலுரித்துக் காட்டியிருக்கின்றது.  
1950-ம் ஆண்டின் பாஸ்போர்ட் விதிகளையும், 1946-ம் ஆண்டின் வெளிநாட்டினர் சட்டத்தையும் திருத்தம் செய்து, பாஜக அரசு 2018-ம் ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி அன்று ஓர் அரசாணையைப் பிறப்பித்துள்ளது. அதில், இந்தியாவில் தங்குவதற்கான நீண்டகால விசாவை (எல்.டி.வி.)பெறுவதிலிருந்து முஸ்லிம்களுக்கும், கடவுள் மறுப்பாளர்களுக்கும் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது.
அதாவது, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சியர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோர் மட்டுமே நீண்டகால விசாவுக்கு (எல்.டி.வி.) விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம்  சிஏஏ முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல என்ற பிஜேபியின் போலி வாதத்தின் முகத்திரை கிழித்தெறியப்பட்டுள்ளது.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இந்துக்கள் மதரீதியாகத்  துன்புறுத்தப்படுகிறார்கள், எனவே தான் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தோம் என்று மோடி கூறுகிறார். ஆனால் வங்கதேசப்  பிரதமர் ஷைக் ஹசீனா, எங்கள் நாட்டில் இந்துக்கள், கிறிஸ்துவர் உள்ளிட்ட முஸ்லிம் அல்லாதோர் யாரும் துன்புறுத்தப்படவில்லை என்று தெரிவித்து மோடியின் முகமூடியை கிழித்தெறிந்திருக்கின்றார்

பாகிஸ்தானைச் சார்ந்த இந்துக்களும், நாங்கள் பாகிஸ்தானில் எந்தப் பாதிப்புக்கும் உள்ளாகவில்லை என்று கூறி, பாஜகவின் பகல் வேஷத்தைக் கலைத்திருக்கின்றர்.  ஆப்கானிஸ்தான் முன்னாள் குடியரசுத் தலைவர், ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரை இங்கு இந்துக்கள் மட்டுமல்ல! முஸ்லிம்கள் உட்பட எல்லா மதத்தினரும் துன்புறுத்தலுக்கு உள்ளானவர்கள் என்று கூறியுள்ளனார். எனவே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு மத்திய அரசு கூறும் காரணம் அனைத்துமே போலியானவை என்பது இதன் மூலம் அம்பலமாகியிருக்கின்றது.
நாடெங்கிலும் மக்கள் சி.ஏ.ஏ. மற்றும்  என்.ஆர்.சி.யை எதிர்த்துக் கொண்டிருக்கும் வேளையில் மத்திய பாசிச அரசு எரிகின்ற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போல் என்பிஆரை செயல் படுத்தத் துடிக்கின்றது.
அரசின் நல்வாழ்வு திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்குத் தான் இந்தக் கணக்கெடுப்பு என்று பாஜக அரசு பாசாங்கு செய்கின்றது. இன்னொரு பக்கம்  இதுவும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தான் என்றும் பொய்யை பரப்பி வருகின்றனர். இந்த  இரண்டுமே ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்பது ஊர்ஜிதமாகின்றது.   காரணம் மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களைக் கொண்டு போய் சேர்ப்பதற்கு ஆதார் ஐடி உள்ளது. இதன் மூலம் சுமார் 125 கோடி மக்களின் தகவல் சேகரிக்கப்பட்டிருக்கின்றன.  மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு  சென்சஸ் உள்ளது. இந்த இரண்டும் இருக்கும்போது என்.பி.ஆர். என்பது எதற்காக? அப்படியானால் என்பிஆர் என்பது என் ஆர்சி என்பதற்குரிய நுழைவாயில் என்பதைத் தவிர வேறெதுவும் கிடையாது என்பது ஊர்ஜிதமாகின்றது.
இது அமல்படுத்தப்படுத்தப்பட்டால் முஸ்லிம்கள் மட்டும் பாதிக்கப்படுவார்கள் என்ற வாதம் அழுத்தமாக வைக்கப்படுகின்றது ஆனால் இதன் மூலம் மொழிவாரியான சிறுபான்மையினர் மற்றும் நாடோடி இன மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
கர்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும், வழக்கறிஞருமான சி.எஸ். துவாரகநாத் அவர்கள் கூறும்போது, என்.ஆர்.சி. என்பது நாட்டை இரண்டு கூறாகப் பிரித்துவிடும். ஒன்று, தங்களது குடியுரிமையை நிரூபிக்க ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் சிறுபான்மையினர், மற்றொன்று, எந்த ஆவணங்களும் இல்லாமல் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க முடியாத நாடோடி பழங்குடி இனத்தவர். கர்நாடகாவில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடோடி பழங்குடியினர் உள்ளனர்.  2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியா முழுவதும் அவர்களின் மொத்த மக்கள் தொகை 15 கோடி ஆகும். இந்த நாடோடிகளுக்கென நிரந்தரக் குடியிருப்புகள் எதுவும் இல்லை. மற்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த 8 கோடி மக்கள் உள்ளனர். அவர்களுக்கு எந்தச் சொத்தும் இல்லை. வீடே இல்லாமல் நாடோடியாய் திரியும்  இரண்டு கோடி மக்கள் உள்ளனர். இந்த மக்கள் அனைவரும் என்.ஆர்.சி.நடைமுறையில் தங்கள் குடியுரிமையை எவ்வாறு நிரூபிக்க முடியும்? இது சாத்தியமற்றது”எனக் கூறினார்.
இப்படி கோடிக்கணக்கான மக்களை அகதிகளாக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழகத்தை ஆளுகின்ற அதிமுக அரசு ஆதரித்தது வேதனை அளிக்கிறது. எனவே, தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு(என்.பி.ஆர்.), தேசிய குடியுரிமை பதிவேடு(என்.ஆர்.சி.) ஆகிய சட்டங்களை தமிழகத்தில் நடைமுறைபடுத்தமாட்டோம் என்ற தீர்மானத்தை நிறைவேற்றவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து பெண்கள், ஆண்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர். மதியநேரத்தில் வெயில் சுள்ளென்று அடித்தபோதும் குழந்தைகளும், பெண்களும் வெயிலை பொருட்படுத்தாதபடி கொளுத்தும் வெயிலில் நின்று கண்டன கோஷங்களை எழுப்பினர். பேரணியில் வந்தவர்கள் சி.ஏ.ஏ., என்.ஆர்.சி, என்.பி.ஆர். சட்டங்களுக்கு தொப்பிகளை அணிந்தும் வந்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில், மாநில பேச்சாளர் அப்துந்நாசர் தலைமையில், மாவட்ட நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட கூடுதல் கலெக்டர் விஷ்ணுசந்திரனை நேரில்சென்று சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினரின் பேரணி, ஆர்ப்பாட்டம் காரணமாக ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo