Onetamil News Logo

தேற்றாங்கொட்டை என்பது சேறுடன் கலங்கிய நீரைத் தெளிய வைக்க தமிழ்நாட்டின் சில பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது ;உடல் இளைக்கவும், தேறாத உடம்பைத் தேற்றவும் தேத்தாங்கொட்டை லேகியம்

Onetamil News
 

தேற்றாங்கொட்டை என்பது சேறுடன் கலங்கிய நீரைத் தெளிய வைக்க தமிழ்நாட்டின் சில பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது ;உடல் இளைக்கவும், தேறாத உடம்பைத் தேற்றவும் தேத்தாங்கொட்டை லேகியம்


தூத்துக்குடி 2018 ஜூலை 01 ; தேற்றா அல்லது தேத்தா (Strychnos potatorum) என்பது ஒருவகை மரம். இது தமிழிலக்கியத்தில் இல்லம் என்றும் தேத்தாங்கொட்டை, தேறு போன்ற வேறு பெயர்களும் உள்ளன. இதன் இலைகள் பளபளப்பான சற்று நீண்ட கரும்பச்சை இலைகளையும், உருண்டையான விதையினையும் உடைய குறுமரம். தமிழகத்தின் மலைக்காடுகளிலும், சமவெளிகளில் ஒவ்வோர் இடத்தில் காணப்படுகிறது. இதன் பழம்,விதை, ஆகியவை மருத்துவப் பயன் உள்ளவை..திருக்குவளை என்னும் திருக்கோளிலி தலத்தின் தலமரமாக விளங்குவது தேற்றா மரமாகும். தேற்றாங்கொட்டை என்பது சேறுடன் கலங்கிய நீரைத் தெளிய வைக்க தமிழ்நாட்டின் சில பகுதிகளில் பயன்படுத்தப்படும் தேற்றா மரத்தின் விதை ஆகும்.
குளம், ஊருணிகளின் இருந்து பெறப்படும் நீர் கலங்கலாக இருக்கும். இந்நீரை அப்படியே குடிக்க இயலாது. எனவே சிவகங்கை, தஞ்சை மாவட்டங்களில் நீரைத் தெளிய வைக்க தேத்தாங்கொட்டையை கலங்கிய நீருள்ள பானையின் உட்புறம் தேய்ப்பர். சில மணி நேரங்களுக்கப் பிறகு பானை நீர் தெளிந்து காணப்படும்.
தேற்றா மரத்தின் கொட்டை, தேற்றாங்கொட்டை என அழைக்கப்படுகிறது. இந்த கொட்டையை கலங்கிய நீரில் சிறிதே உரைப்பதால் நீர் தெளிந்துவிடும். நீரைத் தெளிவிப்பதாலும் உடலை தேற்றுவதாலும் இது தேற்றான் கொட்டை எனப் பெயர் பெற்றுள்ளது. தேற்றாங் கொட்டை நீரைத் தெளிய வைக்கும் விதை என்ற பொருளைத் தருகிறது                                                                                                                                                          
  நல்ல தண்ணீருக்காக நம் மக்கள் படும் அல்லல் என்பது பல இடங்களில் அன்றாட நிகழ்வாகிவிட்டது. இருக்கின்ற நீரும் மாசுடன் திகழ்வதால் அந்நீரினைத் தூய்மைப் படுத்துவதற்குப் பல ஆயிரங்கள் செலவிட்டுக் கருவிகளை வாங்கி வைத்துக்கொள்கிறோம். மேலும் பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரினை விலைகொடுத்து வாங்கி அருந்தவேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளோம். இன்று பரவும் பல நோய்கள் நீரின் மூலமே பரவுவதால் இத்தகு நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் அன்றைய மக்கள் ஆறுகள், குளங்கள், பொதுக் கிணறுகள் இவற்றிலிருந்தே குடிப்பதற்கு நீரை எடுத்துப் பயன்படுத்தி வந்தனர். அப்பொழுது நீர் அனைத்து இடத்திலுமே தூய்மையாகத்தான் இருந்தது. அன்றும் சில நீர்நிலைகளில் மாசுகள் இருக்கத்தான் செய்தன. அவற்றைப் போக்கியே மக்கள் குடிநீராகப் பயன்படுத்தினர். அந்த வகையில் கலங்கல் நீரினைத்தூய்மைப்படுத்திய பழந்தமிழர்களின் நுட்பத்தை இங்கு காண்போம்.
ஆற்று நீர் இயல்பாக தூய்மையாகவேதான் இருக்கும். ஓடுகின்ற நீர் மணல்களுக்கு இடையே உருண்டு, திரண்டு ஓடும்பொழுது நீரிலுள்ள கசடுகள் மணலால் உறிஞ்சப்பட்டு ஆறுகளில் கலக்கின்ற மாசுகள் நீக்கப்பட்டு நீரானது தூய்மை யடைகின்றது. சில ஆண்டுகளுக்கு முன் டெல்லியில் நடைபெற்ற உலக அளவில் நீர்வளங்களைக் காப்பது, நீர் மாசுபடுவதை களைவது, குறித்து உலக நீரியல் வல்லுநர்கள் கலந்துகொண்ட மாநாட்டில் தமிழகத்தின் தொன்மைத்திறன் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பெற்றது. அது என்ன வெனில் கலங்கல் நீரினைத் தூய்மைப்படுத்தும் திறன் தேற்றா எனப்படும் தேற்றாங்கொட்டைக்கு உண்டு என்பதே ஆகும் அகரமுதலியில் இல்லம் என்பதற்கு வீடு, மனைவி, இல்வாழ்க்கை என்பதோடு தேற்றா மரம் என்ற பொருளும் கொள்ளப்பெறுகின்றது. தேற்றான் கொட்டை உடலை தேற்றும் குணம் கொண்டதாலும்,நீரைத் தெளிய வைப்பதாலும் தேற்றான் என்று சொல்லப் படுகிறது. பத்து லிட்டர் தண்ணீரில் இரண்டு தேற்றாங்கொட்டைகளைப்போட்டு வைத்தால் 2 மணி நேரத்தில் நீர் சுத்தமானதாகி விடும். இது தவிர இது மருந்தாகவும் பயன்படுகிறது. இதில் இருந்து தயாரிக்கப்படும் லேகியம் பசியைத்தூண்டி விடுகிறது.இதை சாப்பிட்டால் உடல் மெலிந்தவர்கள் தேறி விடுவார்கள்.                            
                                                                                                                                                  தேற்றா மரத்தின் அனைத்து உறுப்புகளும் பாரம்பரிய மருத்துவத்தில் முக்கியத்துவம் கொண்டவை. உடல் இளைக்கவும், தேறாத உடம்பைத் தேற்றவும் தேத்தாங்கொட்டை லேகியம் பயன்படுகிறது. இதன் பழம், விதை இரண்டுமே சளியை நீக்கும், கபத்தைப் போக்கும், சீதபேதி - வயிற்றுப்போக்கைக் குணமாக்கும், புண்கள் - காயங்களை ஆற்றும், கண் நோய் போக்கும், சிறுநீரகக் கோளாறுகளைக் குணமாக்கும், பெண் இனப்பெருக்க உறுப்புக் கோளாறுகளை அகற்றும்; இதன் கொட்டை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும்
                                                                                                                                                                                                    
 தேற்றா மரத்தின் காய்களை இடித்து கொட்டையை எடுத்த பின் கிடைக்கும் சக்கையைக் கரைத்து மீன்கள் உள்ள குட்டைகளில் இடுவர். இச்சக்கையின் சாறு மீன்களை ஒரு வித மயக்க நிலைக்கு இட்டுச் சென்று கரையில் ஒதுங்கச் செய்யும். இவ்வாறு மீன் பிடிப்புக்கும் தேற்றா மரம் பயன்படுகிறது
                
‘தேற்றாங்கொட்டையிட்டுத் தேற்று மைந்தரை’ எனத் தமிழ் மருத்துவர்கள் இதன் அருமையான மருத்துவப் பயன்களுக்குச் சான்றளித்துள்ளனர். வீட்டிலுள்ள கலங்கிய நீரானாலும் சரி, நிலக்கரிச் சுரங்கத்தில் கரிப்பொடி கலந்த நீரானாலும் சரி, நீரினைத்தெளியவைக்கும் பண்புடைய கொட்டை இதுவாகும். கண்மாய்களில் தேக்கிய நீரைக் குடிநீராகப் பயன்படுத்தும் இடங்களில், தொன்றுதொட்டு நீரைத் தெளியவைக்க, சட்டியிலேயே தேற்றான்கொட்டையைத் தேய்ப்பது வழக்கம். சில நிமிடங்களில் நீர் தெளிந்துவிடும். நீரில் மிதக்கும் கரித்துகள்கள் படிந்துவிடும். நிலக்கரிச் சுரங்கங்களில் நீரில் கலந்த நிலக்கரித் துகள்களைத் தனித்துப் பிரித்திட படிகாரத்துடன் சிறிது தேற்றாங் கொட்டைப் பொடியினையும் சேர்த்திடுவர். உடனடியாக துகள்களெல்லாம் படிந்திடும். நீரைத் தெளியவைக்கும் பண்பு இக்கொட்டையில் நச்சில்லா பொருட்கள் இருப்பதால் ஏற்படுகிறது.இன்று அறிவியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இதன் சிறப்பு சங்க நூலான கலித்தொகையின் 142ஆம் பாடலில் உவமையாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. அப்பாடல்,
இனைந்து நொந்து அழுதனள்: நினைந்து நீடு உயிர்த்தனள் எல்லையும் இரவும் கழிந்தன என்று எண்ணி : எல் இரா நல்கிய கேள்வன் இவன் மன்ற! மெல்ல மணியுள் பரந்த நீர் போலத் துணிவாம் கலம்சிதை இல்லத்துக் காழ்கொண்டு தேற்றக் கலங்கிய நீர்போல் தெளிந்து நலம் பெற்றாள் நல்லெழில் மார்பனைச் சார்ந்து.
என்பதாகும். இதன்பொருள் “என்னைத் துன்புறுத்தும் காமமும் ஊராரின் பழிச்சொல்லும் என் உயிரைக் காவடியாகக் கொண்டு இருபுறமும் பாரமாகத் தொங்கி என்னை நலிவுறச் செய்கின்றன. என் உயிரும் உடலும் மெலிகின்றன. யான் இறப்பதற்கு முன் என் துன்பத்தை நீக்குவீராக” என்று கூறினாள். வருந்தி அழுதாள் பகலும் இரவும் பயனின்றிக் கழிகின்றன என்று நெடிது நினைத்து, நொந்து பெருமூச்சுவிட்டாள். அந்நிலையில் ஓர் இரவில் அவள் அருகில் அன்போடு அமர்ந்திருக்கும் ஒருவனைக் கண்டோம். அவன்தான் அவளுக்கு அன்பு செய்யும் தலைவன் போலும்! அவள் இவனது மிக்க அழகிய மார்பைத் தழுவி, தேற்றாங்கொட்டையினால் தெளிவிக்கப்பட்ட தண்ணீரைப் போலத் துன்பம் நீங்கி, நலம் பெற்றாள். யாமும் ரத்தினமும், அதன் ஒளியும் போல் இவர்கள் ஒருவரின் ஒருவர் வேறல்லர் என்று மெல்லத் தெளிந்து கொண்டோம் என்று கண்டோர்கள் கூறினர்.
இத்தேற்றான் கொட்டையின் மருத்துவ குணமாக சரசுவதி மகால் நூலகம் வெளியிட்டுள்ள பதார்த்த குணபாடம் எனும் சித்த மருத்துவ நூலில் பிரமேகம், வெட்டை, உட்சூடு, வயிற்றுக்கடுப்பு, மூத்திர எரிச்சல் போன்ற நோய்களைக் குணமாக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo