Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு 100 சதவீதம் வெற்றி 

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு 100 சதவீதம் வெற்றி 


தூத்துக்குடி, 2020 மார்ச் 22 ;சுய ஊரடங்கையொட்டி பஸ், ரெயில்கள் ஓடவில்லை. கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடியது.
உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்கு மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நாட்டில் 300-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மேலும் பரவாமல் தடுக்கும் வகையில்  மாா்ச் 22  ஞாயிற்றுக்கிழமை அன்று மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வராமல் சுய ஊரடங்கில் ஈடுபட வேண்டும் என பிரதமா் மோடி கேட்டுக் கொண்டாா்.
இதன் தொடா்ச்சியாக, தமிழகத்தில் பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படாது என்றும் கடைகள் திறக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை மாலையில் இருந்தே கடைகள் மூடப்பட்டன. சனிக்கிழமை இரவில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.
சுய ஊரடங்கு அறிவிப்பை ஏற்று தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மக்கள் தங்களின் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கினா். வழக்கமாக பரபரப்புடன் காணப்படும் பிரதானச் சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டமில்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.
தூத்துக்குடி- திருநெல்வேலி, தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலைகளில் எந்த வித வாகனங்களும் இயக்கப்படாமல் காட்சியளித்தன. மாவட்டத்தின் அனைத்து முக்கிய பகுதிகளிலும் காய்கனி சந்தைகள், கடைகள், உணவகங்கள், சந்தைகள், வாடகை காா் நிறுவனங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டிருந்தன.
தூத்துக்குடி மாநகரில் மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மட்டும் ஆங்காங்கே திறக்கப்பட்டிருந்தன. முக்கிய சந்திப்புகளில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். அத்தியாவசிய தேவையை தவிர பிற காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியே வந்த சிலரை போலீஸாா் எச்சரித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனா். தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தில் சுழற்சி முறை பணிகளும் ரத்து செய்யப்பட்டன.
தூத்துக்குடி தற்காலிக பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் ஆகியவை எந்த வித ஆள் நடமாட்டமும் இல்லாமல் வெறிச்சோடிய நிலையில் காட்சியளித்தது. புதிய பேருந்து நிலையம் பகுதியில் கொட்டகை அமைத்து வசித்து வரும் நரிக்குறவா் சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் வெளியே வரமால் கொட்டகைக்குள்ளேயே இருந்தனா். 
 கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பல்வேறு மாநிலங்களிலும் பரவி உள்ளது. இதனால் வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதன்படி நோய் தொற்றை தடுப்பதற்காக நாடு முழுவதும் நேற்று மக்கள் பொது ஊரடங்கு பிறப்பிக்கப்பிக்கப்பட்டு இருந்தது. காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இதனால் நேற்று மக்கள் பொது ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில், கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து வெறிச்சோடி காணப்பட்டது.
கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகளில் சிறப்பு பிரார்த்தனைகள் நேற்று நடத்தப்படவில்லை. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரை பகுதி, நாழிக்கிணறு கார் நிறுத்தம், கோவில் முகப்பு பகுதி, திருச்செந்தூர் பஸ் நிலையம், திருச்செந்தூர் வடக்கு ரத வீதி உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
ஆறுமுகநேரி மெயின் ரோடு, குலசேகரன்பட்டினம் மெயின் ரோடு, காயல்பட்டினம் பஸ் நிலையம், ஏரல் பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் ஆட்கள் நடமாட்டம் இல்லை.
காயல்பட்டினம் பஸ்நிலையத்தில் நகராட்சி ஆணையாளர் பு‌‌ஷ்பலதா அறிவுரையின் படி சுகாதார ஆய்வாளர் பொன்வேல் ராஜன் தலைமையில் தூய்மை பணியாளர்கள் கிருமி நாசினி தெளிப்பில் ஈடுபட்டனர். தொடர்ந்து தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.
ஸ்ரீவைகுண்டம் மெயின் பஜார், முக்கிய வீதிகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பஸ்கள் இயக்கப்படாததால் ஸ்ரீவைகுண்டம் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. அங்குள்ள பணிமனையில் அரசு பஸ்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
கோவில்பட்டி மெயின் ரோடு, பஸ்நிலையம், எட்டயபுரம் சாலை, மார்க்கெட் பகுதி உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டன.கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் வெளிநோயாளிகள் யாரும் வரவில்லை. கோவில்பட்டி ரெயில் நிலையம் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.கோவில்பட்டி புனித வளனார் ஆலயம், சூசையப்பர் ஆலயத்தில் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பிரார்த்தனைக்கு வருவார்கள். ஆனால் நேற்று யாரும் வரவில்லை.
எட்டயபுரத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் எட்டயபுரம் பஜார் பகுதி உள்ளிட்ட அனைத்து இடங்களும் வெறிச்சோடி காணப்பட்டது. பொதுமக்கள் யாரும் வெளியே வரவில்லை.அதே போல் கோவில்பட்டி பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் மணமகன் வீட்டார், மணமகள் வீட்டார் மட்டும் அனுமதிக்கப்பட்டு திருமண நிகழ்ச்சி நடத்தப்பட்டது.கடலையூர் சாலையில் ஒரு சில இறைச்சி கடைகள் திறந்து இருந்தன. இதனை அறிந்த போலீசார் அந்த கடைகளை மூட உத்தரவிட்டனர்.கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேசன், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன், அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பத்மாவதி ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo