Onetamil News Logo

பிடிவாதம் பிடிக்கிறவர்கள், தொழிலில் மட்டுமல்ல.. திருமண வாழ்க்கையிலும் தோல்வியையே அடைகிறார்கள்

Onetamil News
 

பிடிவாதம் பிடிக்கிறவர்கள், தொழிலில் மட்டுமல்ல.. திருமண வாழ்க்கையிலும் தோல்வியையே அடைகிறார்கள்.


தூத்துக்குடி பிப்ரவரி 11 ; பிடிவாதம் பிடிக்கிறவர்கள், தொழிலில் மட்டுமல்ல.. திருமண வாழ்க்கையிலும் தோல்வியையே அடைகிறார்கள்.
குழந்தைக்கு சாப்பிட, நடக்க கற்றுத் தருவதைப் போலவே, தோல்விகளை சந்திக்கவும் கற்றுக் கொடுங்கள்.
உதாரணமாக, குழந்தை சாக்லெட் கேட்டால், அன்பாக, ‘நாளைக்கு வாங்கித் தர்றேன்..’ என்று சொல்லுங்கள். குழந்தை ‘இப்பவே வேணும்..’ என்று அழுதாலும், ‘நாளைதான்’ என்று தெளிவாகச் சொல்லுங்கள். உங்களிடம் உறுதி இல்லாவிட்டால், அதன் பிடிவாதம் அதிகரிக்கவே செய்யும்.
குழந்தை கேட்பதற்கு, வீட்டில் உள்ள அனைவருமே ஒரே பதிலை சொல்ல வேண்டும்.
"அப்பா தர மாட்டேங்கறாரா? நான் வாங்கித் தர்றேன்டீ என் செல்லம்" என்று சொன்னால், குழந்தைக்குக் குளிர் விட்டுவிடும்.
குழந்தை அழுது, புரண்டு, ஆர்ப்பாட்டம் செய்தால், எரிச்சலோ கோபமோ கொள்ளக் கூடாது. பரிதாபப்படவும் கூடாது. அதை கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும். தன்னை யாரும் கவனிக்க வில்லை என்பது தெரிந்ததும், குழந்தை அழுகையை நிறுத்திவிட்டு, இயல்பாகி விடும்.
குழந்தை உங்களிடம் கேட்கிற பொருள் அதற்குத் தேவையா.. இல்லையா.. என்பதை முடிவு செய்யவேண்டியது குழந்தை அல்ல.. நீங்கள்தான்!
சேட்டை செய்கிற உங்கள் குழந்தையை, இதே விஷமத்தை பக்கத்து வீட்டுக் குழந்தை செய்தால், எப்படி உணர்வீர்களோ, அதே கண்ணோட்டத்தோடு பாருங்கள். அப்போதுதான் உங்களால் சரியான முடிவை எடுக்க முடியும் !
‘இந்தக் காலத்து குழந்தைகள் ‘சென்ஸிடிவ்’ ஆக இருக்கிறார்களா? அல்லது பெற்றவர்களுக்கு பிள்ளைகளை வளர்க்கத் தெரியவில்லையா?’ என்கிற  கேள்விக்கு  பிரபல குழந் தைகள் மனநல நிபுணர் ஜெயந்தினியின் பதில் !
‘‘குழந்தைகள் பிடிவாதம் பிடிக்கிற விஷயத்தில், பெற்றவர்கள்தான் முதல் குற்றவாளிகள்!’’ என்றவர், பெற்றோர் செய்கிற தவறுகளை சுட்டிக் காட்டினார்.
‘‘நான் சில அம்மாக்களை சந்தித்திருக்கிறேன்.
‘இவன் ஒரு விஷயத்தை நினைச் சுட்டான்னா, அழுது, அடம் பிடிச்சாவது சாதிச்சிடுவான்.. அப்பிடியே எங்கப்பா மாதிரி..’ என்றும்,
‘நான் பசங்களுக்கு எதையுமே இல்லைனு சொல்றதில்லை.
அந்தக் காலத்துல நாமதான் கஷ்டப்பட்டு வளர்ந்தோம். பசங்களுக்குக் கஷ்டம் தெரியக் கூடாது..’ என்றும் பெருமையுடன் சொல்வார்கள். இப்படி.. வெற்றுத் தாள் போல எதையும் ஏற்கத் தயாராக இருக்கிற குழந்தையின் மனதில், தான் நினைத்தது எல்லாம் நடக்கும் என்கிற எண்ணத்தை விதைத்து, அவர்கள் மனம் முழுக்க பிடிவாதத்தை இறைக்கிற தவறைச் செய்கிறவர்கள் பெற்றவர்கள்தான் !
" பெற்றோர் தங்கள் குழந்தையின் மீது உள்ள பாசத்தை வெளிப்படுத்தத்தான், இப்படி அவர்கள் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுக்கிறார்கள். உண்மையில், குழந்தையின் மீது பாசமும் அக்கறையும் இருக்கிறவர்கள், இப்படி நடந்து கொள்ளக் கூடாது..’’ என்றவர், அது ஏன் என்பதையும் விவரித்தார்.
‘‘குழந்தைக்கு ‘நோ’ என்கிற வார்த்தையை அழுத்தம் திருத்தமாகச் சொல்லாத வரையில், பெற்றோரின் எந்தக் கஷ்டமுமே குழந்தைக்குத் தெரியாது. அதோடு, ‘நமக்குச் செய்யவேண்டியது பெற்றவர்களான இவர்களின் கடமை.. செய்கிறார்கள்’ என்று ‘டேக் இட் ஃபார் கிரான்டட்’ ஆக.. அதாவது.. தனக்கு சாதகமாகத்தான் குழந்தை எடுத்துக் கொள்ளுமே தவிர, ‘நம் மேல் எத்தனை பிரியம் இவர்களுக்கு’ என்றெல்லாம் நினைக்கவே நினைக்காது.
மாறாக, ‘இந்தப் பொருளோட விலை ரொம்ப ஜாஸ்தி. அம்மா கிட்ட அவ்வளவு பணம் இல்ல..’ என்பது போன்ற உண்மையான காரணங்களை எடுத்துச் சொல்லவேண்டும். அப்போதுதான், குழந்தைக்கு பணத்தின் அருமையும், பெற்றோரின் அருமையும் தெரியும்.
எந்தக் குழந்தைக்கு கேட்டதெல்லாம் மிக எளிதாகக் கிடைத்து விடுகிறதோ.. அந்தக் குழந்தை, மனதைரியம் குறைந்ததாகவும், தோல்வியை தாங்கிக் கொள்கிற சக்தி இல்லாததாகவும்தான் வளருகிறது. இப்படிப்பட்ட குழந்தைகள்தான், தான் நினைத்த ஏதோ சிறு ஒரு விஷயத்தை அடைய முடியாவிட்டால்கூட மனம் உடைந்துபோய் வாழ்வில் நிம்மதியையும் சந்தோஷத்தையும் இழக்கத் தொடங்கி விடுகிறது’’
‘‘பொதுவாக, பிடிவாதம் பிடிப்பது குழந்தையின் இயல்புதான். ஏதோ ஒரு பொருளுக் காகவோ, என்றைக்கோ ஒருநாளோ பிடிவாதம் பிடிக்கிற குழந்தையை நினைத்து, பெற்றோர் பயப்படத் தேவையில்லை. அந்தப் பழக்கம் குழந்தை வளர வளர சரியாகிவிடும். ஆனால், குழந்தை எதற்கெடுத்தாலும் பிடிவாதம் பிடிக்கும்போதுதான் அது திருத்தப்பட வேண்டிய பிரச்னையாகிறது.
‘‘பொதுவாகவே, வாழ்வில் தவறான முடிவு எடுக்கும் பெரும்பான்மையானவர்கள், அதிக பிடிவாத குணமுடையவர்கள்தான்.
அனுசரித்துப் போகாமல், தான் நினைத்ததுதான் நடக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறவர்கள், தொழிலில் மட்டுமல்ல.. திருமண வாழ்க்கையிலும் தோல்வியையே அடைகிறார்கள்.
தானும் வாழாமல், தன்னைச் சார்ந்தவர்களையும் வாழவிடாமல், பிரச்னைக்குரிய நபர்களாகவே மாறிப் போகிறார்கள்’’.
எனதருமை பெற்றோர்களே உங்கள் குழந்தை உங்கள் உயிர் அதற்கு ஏதாவது ஒன்றென்றால் அதை உங்களால் தாங்க முடியாது உங்களால் எப்படி உங்களுடைய பெற்றோர் தலை நிமிர்ந்து வாழ்கிறார்களோ அது போல் நீங்களும் வாழ உங்கள் குழந்தையை அன்போடும் பாசத்தோடும் கண்டிப்போடும் வளர்க்க வேண்டும்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo