Onetamil News Logo

சீவலப்பேரியில் 3000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால நினைவுச்சின்னம் கண்டுபிடிப்பு

Onetamil News
 

சீவலப்பேரியில் 3000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால நினைவுச்சின்னம் கண்டுபிடிப்பு


திருநெல்வேலி 2020 ஜூலை 11 ; திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தாலுகாவில் சீவலப்பேரி என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்தின் எல்லையானது உழக்குடிக்கு வடபுறம் அமைந்துள்ள குன்று வரை நீண்டுள்ளது. இந்தக் குன்றானது திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய இரண்டு மாவட்டத்தின் எல்லைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.இந்த இரண்டு மாவட்ட எல்லைகளையும் அடையாளம் காண்பதற்கு  ரா.அபிநயா, 2ம் ஆண்டு முதுநிலை புவி அறிவியல் துறை, அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம், மிகப்பெரிய பங்களிப்பை  ஆற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடியில் உள்ள வ.உ. சிதம்பரம் கல்லூரியில் வரலாற்றுத் துறையில் முனைவர் கி.சசிகலா அவர்களின் வழிகாட்டுதலில் மா.ஆறுமுக மாசான சுடலை என்பவர் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு வருகிறார். இவர் இந்தக் குன்றுப் பகுதியில் உள்ள உழக்குடி கிராம எல்லையில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த மிகவும் பழமையான 13 அடி குத்துக்கல் ஒன்றையும், இரண்டு கற்குவைகளையும் , சீவலப்பேரி கிராம எல்லையில் பல இடங்களில் மேற்பட்ட கற்குவைகள் இருப்பதையும் ஒரு குத்துக்கல் இருப்பதையும் முன்பு கண்டுபிடித்தார். 
தற்போது மீண்டும் தன்னுடைய களஆய்வில் சீவலப்பேரி எல்லையில் பல இடங்களில் சிறிய அளவிலான 12 குத்துக்கலும் மற்றும் 20 க்கும் மேற்பட்ட கற்குவைகளும், கல்வட்டம் இருப்பதையும், உழக்குடி கிராம எல்லையில் ஒரு கல்வட்டமும் கண்டுபிடித்துள்ளார். மேலும், இத்தகைய நினைவுச் சின்னங்கள் இந்த இரண்டு மாவட்டங்களுக்கும் ஒரு மிகப்பெரிய பொக்கிஷங்களாகும்.
 கற்குவை: கற்குவை என்பது பெருங்கற்கால நினைவுச் சின்னங்களில் முக்கியமான ஒன்றாகும். பழங்காலத்தில் வாழ்ந்த மக்கள் இறந்தவர்களின் உடல்களை முழுமையாக அடக்கம் செய்யாமல் ஆட்கள் செல்லாத காட்டுப்பகுதியில் சில நாட்கள் வைத்து விடுவார்கள். பல நாட்கள் அவ்வாறு வைத்திருந்து உண்ணத்தக்க பகுதிகளை பறவைகள் மற்றும் விலங்குகள் உண்டு பின்னர் எஞ்சியுள்ள பகுதிகளை எடுத்து முதுமக்கள் தாழியில் வைத்து, இறந்தவர்கள் பயன்படுத்திய ஆடை மற்றும் இதர பொருட்களையும் அதோடு சேர்த்து வைத்துப் புதைத்துவிட்டு அதன் மேல் தட்டையான கல்லை வைத்து விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.  அடுத்து வரக்கூடிய காலங்களில் தங்களுடைய சந்ததியினர் இறந்தோர் நினைவிடங்களை அடையாளம் காணவேண்டும் என்பதற்காக அவர்களுடைய வசதிக்கு ஏற்ப உருவாக்கப்பட்டதே இத்தகைய ஈமச்சின்னங்கள் ஆகும்.
கல்வட்டம்: தூத்துக்குடி மாவட்டம் உழக்குடி கிராம எல்லையில் கல்வட்டம் உள்ளது. இந்த கல்வட்டம் என்பது பெருங்கற்கால நினைவுச் சின்னங்களில் ஒன்றாகும். இது இறந்தோரின் நினைவாக அமைக்கப்படுகின்ற கல்லறை ஆகும். கல்வட்டங்களில் முதுமக்கள் தாழிகள் ஈமச்சடங்குக்குரிய பொருட்களோடு தொடர்புடைய மட்பாண்டங்களுடன் மண், கற்களைக்கொண்டு இக்குழியைச் சுற்றிலும் உருண்டையான அல்லது சீரற்ற பெரிய கற்களை வட்டமான வடிவத்தில் வைத்து அந்த இடத்தை அடையாளப்படுத்திக் கொண்டனர். இந்தக் கல்வட்டங்கள் இறந்தவர்களின் உடல்கள் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளப்படுத்தவும், பாதுகாக்கவும் உருவாக்கப்பட்டதாகும். கல்வட்டங்கள் இருப்பதால் மிகவும் தொன்மையான மக்கள் இங்கு வாழ்ந்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது. இங்கு அகழாய்வு மேற்கொள்ளும் பட்சத்தில் உழக்குடி, கலியாவூர், சீவலப்பேரி ஆகிய கிராமங்களில் புதைந்து கிடக்கும் தமிழனின் நாகரிகமானது வெளிப்படும். என்னைப் பெற்றெடுத்த தாய்க்கும், தத்தெடுத்த வழிகாட்டிக்கும், என்னுடைய தொல்லியல் ஆய்வை இதுவரை ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர்.கா. பிச்சுமணி அவர்களுக்கும் என்னுடைய ஆய்வுக்கு அங்கீகாரத்தை கொடுத்த திருநெல்வேலி, மணொன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி, வ.உ.சிதம்பரம் கல்லூரிக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo