தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க அமைச்சர் கீதாஜீவன் கலியாவூர் நீர்தேக்கத்தில் ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சியில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்ப்பதற்கு அமைச்சர் கீதாஜீவன் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கடந்தாண்டு பருவமழை கை கொடுக்காததால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் போதிய தண்ணீர் இருப்பு இல்லை. இதனால் தாமிரபரணி ஆற்றிலும் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக சீராக குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு தாமிரபரணி ஆற்றில் கலியாவூர் நீரேற்று நிலையத்தில் இருந்து கிடைக்க கூடிய தண்ணீரின் அளவு குறைந்துள்ளது. எனவே பரவலாக தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் கலியாவூர் நீரேற்று நிலையத்திற்கு தண்ணீர் வரும் பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு அதிகாரிகளுடன் கருத்துக்களை கேட்டறிந்தார்.
இதுகுறித்து அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில், கலியாவூர் நீரேற்று நிலையத்திற்கு மணிமுத்தாறு அணையில் இருந்து உடனடியாக கூடுதல் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் அதிகளவில் தண்ணீர் வர வாய்ப்புள்ளது. சீரான குடிதண்ணீர் வழங்கப்படும் பொதுமக்கள், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
ஆய்வின் போது கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் செந்தூர்பாண்டி, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாநகராட்சி உதவிபொறியாளர் சரவணன், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், கருணா, மணி, அல்பட் உள்பட பலர் உடனிருந்தனர்.