Onetamil News Logo

உடன்குடி பகுதி செய்திகள் ; குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா ஆலோசனைக்கூட்டம்       

Onetamil News
 

உடன்குடி பகுதி செய்திகள் ; குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா ஆலோசனைக்கூட்டம்       


                                                                                                            
நங்கைமொழி காளத்தீஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா
உடன்குடி செப்.11உடன்குடி ஒன்றியம் மெஞ்ஞானபுரத்தை அடுத்த  நங்கைமொழி ஞானபிரசன்னாம்பிகை சமேத ஸ்ரீகாளத்தீஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா நடந்தது. விழாவில் சுவாமிக்கும், நந்தியம்பெருமானுக்கும் மஞ்சள், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அலங்கார தீபாராதனைக்குப் பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் சுற்றுவட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை பிரதோஷ அறக்கட்டளை சார்பில் பொருளாளர் சிவமுருகன் மற்றும் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.
……………………………
பரமன்குறிச்சியில்
மின்வாரிய அலுவலக சீர்கேடுகளைக் களைய கோரி ஆர்ப்பாட்டம்
உடன்குடி செப்.11
உடன்குடி ஒன்றியம் பரமன்குறிச்சி பஜாரில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பரமன்குறிச்சி மின்வாரிய அலுவலகத்தில் மின்இணைப்பு மற்றும் இதர பணிகளுக்கு வருவோரிடம் கட்டாய வசூல் செய்யும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், உதவி இளநிலை மின்பொறியாளரை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு முருகன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் விளக்கவுரையளித்தார். இதில் ஒன்றிய குழுஉறுப்பினர்கள் ஆதிநாராயணன், மகாராஜன், இசக்கியம்மாள், பாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
……………………………………
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா ஆலோசனைக்கூட்டம் 
உடன்குடி செப்.11
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா தொடர்பான தசரா குழுக்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. 
உலகிலேயே மைசூருக்கு அடுத்தப்படியாக வெகுவிமரிசையாக கொண்டாடப்படும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா வருகிற அக்டோபர் 10ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி அக்டோபர் 19ம்தேதி நள்ளிரவு சிகர நிகழ்ச்சியான மகிசா சூரசம்ஹாரம் நடக்கிறது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் குலசேகரன்பட்டினத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு திருச்செந்தூர் டிஎஸ்பி திபு தலைமை வகித்தார். குலசேகரன்பட்டினம் இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை, கோயில் நிர்வாக அதிகாரி இராமசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கலந்த கொண்ட தசராகுழுக்களின் நிர்வாகிகள் பேசும் போது பக்தர் அதிகளவில் கூடுகின்றனர் ஆனால் மருத்துவமுகாம்கள் மூன்று மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது கூடுதலாக அமைக்கப்பட வேண்டும். பக்தர்களின் வசதிக்கென கழிப்பிட, குடிநீர் வசதிகள் கூடுதலாக ஏற்படுத்தி தர வேண்டும் என்றனர்.
தொடர்ந்து பேசிய கோயில் நிர்வாக அதிகாரி இராமசுப்பிரமணியன் பேசும் போது தசரா திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் ஜாதி ரீதியான கோஷங்கள் எழுப்பவோ, ரிப்பன், சாதி தலைவர்கள் படம் போட்ட ஆடைகளோ அணிந்து வரக்கூடாது. கோவிலின் சார்பில் வழங்கப்படும் அறிவிப்புகள் சரியாக பக்தர்களுக்கு கேட்காமல் இருப்பதால் கோவில் பகுதியில் அதிக ஒலி எழுப்பக்கூடிய டிரம்செட்கள் அடிக்க தடை விதிக்கப்படுகிறது. தங்கம், வெள்ளி, பட்டுப்புடவைகள் நேர்ச்சையாக  செலுத்தும் பக்தர்களுக்கு சரியான முறையில் ரசீது வழங்கப்படவில்லை என்ற புகாருக்கு இனி வரும் காலங்களில் சிறப்பு பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
திருச்செந்தூர் டிஎஸ்பி திபு பேசும்போது, தசரா திருவிழாவில் போலீஸ் வேடமணியும் பக்தர்களால் ஒரிஜினல் போலீஸ்யார்? வேடமணிந்தவர்யார்? என்று அடையாளம் காணுவது சிரமமாக உள்ளது. இதனை தவிர்க்க கண்டிப்பாக முகத்தில் பவுடர் பூச வேண்டும். தசரா திருவிழாவின் போது ஒழுக்கத்துடனும், கட்டுபாட்டுடனும், கண்ணியத்துடனும் வரவேண்டும். பயங்கரமான ஆயுதங்கள் கோவில் வளாகத்துக்குள் எடுத்து வரக்கூடாது. தசரா குழுவினர் கனரக வாகனங்களை தவிர்க்க  வேண்டும்.தசரா குழுக்கள் நடனத்தின்போது மதுபானம் அருந்தி விட்டு நடனமாடக் கூடாது. ஆபாசமாக நடனம் ஆடக்கூடாது, ஆடைகள் அணிவதில் கவனம் வேண்டும், தசராக்குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரையின்படி நடக்க வேண்டும்.என்றார் அவர். இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அருள்ராஜ், ஆய்வாளர்கள் சுப்பையா, விஜயா, ஆர்எஸ் எஸ் மாவட்டதலைவர் ராமகிருஷ்ணன், இந்துமுன்னணிமாநிலதுணைத்தலைவர் ஜெயக்குமார், இந்துமக்கள் கட்சி மாவட்ட இளைஞரணி செயலாளர் பாலன், பாஜக மாவட்ட இளைஞரணி செயலாளர் செந்தூர்பாண்டியன், அனுமன்சேனா தனலிங்கம், துரைப்பாண்டியன், கனகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
………………………
பாஜக சார்பில்
குலசேகரன்பட்டினம் பள்ளிக்கு மின்மோட்டார் அளிப்பு
உடன்குடி செப்.11
உடன்குடி ஓன்றிய பாஜக சார்பில் குலசேகரன்பட்டினம் திருஅருள்மேனிலைப்பள்ளிக்கு மின் மோட்டார் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
உடன்குடி ஒன்றியம் குலசேகரன்பட்டினம் திருஅருள் மேல்நிலைப்பள்ளியில் குடிநீர் வசதியை மேம்படுத்தும் பொருட்டு உடன்குடி ஒன்றிய பாஜக சார்பில் மின்மோட்டார் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய பாஜக தலைவர் திருநாகரன் தலைமை வகித்தார். ஒன்றியஅமைப்பு செயலர் அழகேசன் பொதுச் செயலர் சிவந்திவேல், சக்திகேந்திர தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட விவசாய பிரிவு செயலர் செந்தூர்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாஜக மாவட்ட செயலர் சிவமுருகன்ஆதித்தன் பள்ளிக்கு மின் மோட்டாரை வழங்கினார். இதில் பள்ளி ஆசிரியர்கள் பொன்னுச்சாமி, அழகுதுரை, பழனிச்சாமி, சின்னத்துரை, ஒன்றிய பாஜக இளைஞரணித்தலைவர் சதீஷ், ஒன்றியத் துணைத்தலைவர் பசுபதி சிவசிங், மகாசக்தி கேந்திர தலைவர்கள் சங்கரகுமார், சின்னத்துரை,நிர்வாகிகள் விசம்பரம், பழனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
…………………….
இலவச சீருடை வழங்கல்
உடன்குடி செப்.11     உடன்குடி அருகேயுள்ள சீர்காட்சி செந்தில்ஆண்டவர் இந்து நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளித்தாளாளர் ஜெயசிங் தலைமை வகித்தார். பள்ளித்தலைமை ஆசிரியர் வரவேற்றார். இதில் தாளாளர் ஜெயசிங், பாண்டியன்கல்வி சங்க உறுப்பினர்கள் இளங்கோவன், கோசல்ராம் ஆகியோர் இலவச சீருடைகளை வழங்கினர். இதில் பள்ளி ஆசிரிய,ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
…………………………………..
வட்டன்விளையில் இடும்பன் சுவாமி வழிபாடு
உடன்குடி செப்.11
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழாவையொட்டி பரமன்குறிச்சி அருகேயுள்ள வட்டன்விளை ஊர்பொதுமக்கள் சார்பில் இடும்பன் சுவாமிக்கு சிறப்பு  வழிபாடு நடந்தது. இதையொட்டி ஊர்மக்கள் சார்பில் வட்டன்விளையில் இருந்து திருச்செந்தூருக்கு பாத யாத்திரை சென்று கூட்டு வழிபாடு நடத்தினர். இதைத்தொடர்ந்து மூன்று நாட்கள் வட்டன்விளையில் அன்னதானம் நடந்தது. இதில் தொழிலதிபர்கள் முருகேசன், சக்திவேல், ஊர்நலக்குழுஉறுப்பினர்கள் வெற்றிவேல், ஆறுமுகநயினார், வள்ளிசெல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திருச்செந்தூர் முருகன் வழிபாட்டு மன்றத்தினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.
…………………………………..
தேரியூர் ராமகிருஷ்ணா பள்ளி மாணவ,மாணவிகள்
மண்டல அளவிலான பூப்பந்தாட்ட போட்டிக்கு தேர்வு
உடன்குடி செப்.11
தூத்துக்குடி கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் நடந்தது. இதில் 32பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். உடன்குடி தேரியூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பூப்பந்தாட்ட போட்டியில் ஆண்கள் பிரிவில் சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் பிரிவிலும், பெண்கள் பிரிவில் சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் பிரிவிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். இந்த 4அணிகளும் மண்டல அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
சாதனை படைத்த மாணவ, மாணவிகளை முன்னாள் பள்ளி மாணவர்சங்க தலைவர் ஜீவானந்தம், சங்க ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின், சங்கஆலோசகர் மருத்துவர் சுந்தர், பள்ளி செயலர் சுவாமி பக்தானந்தா, தலைமை ஆசிரியர் லிங்கேஷ்வரன், உடற்கல்வி ஆசிரியர்கள் ஐயங்கண்ணு மற்றும் ஐய்யப்பவேல் ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினார்.
………………….
உடன்குடியில் உற்பத்தியாகும்
கருப்பட்டி, கற்கண்டுக்கு புவி சார் குறியீடு வழங்க கோரிக்கை
உடன்குடி செப்.11        உடன்குடியில் உற்பத்தியாகும் கருப்பட்டி, கற்கண்டுக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.
தூத்துக்குடி மாவட்ட கருப்பட்டி, கற்கண்டு உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் நலச்சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் உடன்குடி சங்க கட்டடத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை  வகித்தார். துணைத்தலைவர் ஆறுமுகராஜா, துணைச் செயலாளர்கள் பாண்டியராஜன், மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கௌரவ ஆலோசகர் சந்திரசேகர் வரவேற்றார். பொருளாளர் சிவக்குமார் சங்க, வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்தார். கூட்டத்தில் கருப்பட்டிக்கு சேவை வரியை ரத்து செய்தது போல பனங்கற்கண்டுக்கும் சேவை வரியை ரத்து செய்ய வேண்டும், உடன்குடியில் உற்பத்தியாகும் கருப்பட்டி பனங்கற்கண்டுக்கு புவிசார் குறியீடு வழங்க மத்திய அரசை கேட்டுக்கொள்வது, உடன்குடி வட்டார பகுதியில் உள்ள தாங்கைகுளம், சடையநேரிகுளம், தருவைகுளம் ஆகியவற்றை முழுமையாக நிரப்பி நிலத்தடி நீரை உயர்த்த வேண்டும், இத்தொழிலில் ஈடுபட்டவர்களை புதிய உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினர். இதில் மாவட்ட நிர்வாகிகள் சிவசுப்பிரமணியன், சந்தையடியூர் ரவிராஜா, சித்திரைபாண்டி, ராஜ்குமார், சுந்தர், பிருதிவிராஜ், அழகுவேல், தங்கராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
……………………….
உடன்குடி அனல் மின் நிலையத்திற்கு
கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு நிவாரணம் உடனடியாக வழங்க 
ஐவர் கூட்டமைப்பு தீர்மானம்
உடன்குடி செப்.11:         
உடன்குடி அனல் மின்நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்தப்பட்ட 72விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என ஐவர் கூட்டமைப்பினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
உடன்குடி அனல் மின்நிலைய திட்டப்பணிகளுக்கு நிலங்களை வழங்கியவர்களின் கூட்டமைப்பு கூட்டம் உடன்குடி கொத்துவாபள்ளி தெரு மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஆசாத் தலைமை வகித்தார். நாகராஜன், ஆறுமுகப்பாண்டி, கந்தப்பன், பிர்தவ்ஸ்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் உடன்குடி அனல் மின்நிலைய பணிக்கு 72தென்னை விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்களை அரசு கையகப்படுத்தியுள்ளது. இதற்க்கான தொகையை 4தவணையாக தருவதாக அரசு வாக்கு கொடுத்தது. ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் முதற்கட்டமாக 1ஹெக்டேருக்கு ரூ6.75லட்சம் அந்தந்த விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. 4வருடமாகியும் மீதி பணம் வரவில்லை. 72விவசாயிகளுக்கும் மீதி பணத்தை உடனே வழங்கக் கோரி உடன்குடியைச் சார்ந்த ஆசாத் என்பவர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்து வற்புறுத்துவது என முடிவு செய்யப் பட்டுள்ளது. மேலும் தற்போது நிலங்களின் மதிப்பு கூடுதலாகியுள்ளதால் கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினர். கூட்டத்தில் டாக்டர் சுப்பிரமணியன், லூக்காஸ், பெரியசாமி, ஜெயஜோதி, ஜெகதீஷ்வரன், சிவசங்கரன், சாகுல் உட்பட பாதிக்கப்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo