Onetamil News Logo

மெஞ்ஞானபுரம் பத்தாங்கரை பகுதியின் மறைக்கப்பட்ட அறிவியல் ரகசியங்கள் ! 1850 ம் ஆண்டைய டேவிட் ஹோவர் ஆராய்ச்சி குறிப்புகள் !

Onetamil News
 

மெஞ்ஞானபுரம் பத்தாங்கரை பகுதியின் மறைக்கப்பட்ட அறிவியல் ரகசியங்கள் ! 1850 ம் ஆண்டைய டேவிட் ஹோவர் ஆராய்ச்சி குறிப்புகள் !


தூத்துக்குடி  2019 டிசம்பர்  6 ;மெஞ்ஞானபுரம் பத்தாங்கரை பகுதியின் மறைக்கப்பட்ட அறிவியல் ரகசியங்கள் ! 1850 ம் ஆண்டைய டேவிட் ஹோவர் ஆராய்ச்சி குறிப்புகள் ! குறித்து  ஆத்மி கட்சி இனி ஒருங்கிணைப்பாளர்  உடன்குடி .வே. குணசீலன்  கூறியதாவது....உடன்குடி , பரமன் குறிச்சி ,செட்டியாபத்து , தண்டுபத்து , அத்தியடி தட்டு , வெள்ளாளன் விளை ,செட்டிவிளை ,மானாடு, குதிரை மொழி ,வாத்தியார் குடியிருப்பு, தைக்காவூர் ,கூழையன் குண்டு   , நைனா பத்து ,சீர் காட்சி , அம்மன்புரம் , பிச்சி விளை பகுதியில் வசிக்கும் ஒவ்வொருவரும் தெரிந்து இருக்க வேண்டிய அவசியமான பதிவு !
தண்டுபத்து அருகில் உள்ள செட்டிவிளையில்  இருந்து படகு போக்குவரத்து செட்டியாப் பத்துக்கும் ,தண்டுபத்துக்கும் நடந்து உள்ளது என்றால் நீங்கள்  நம்புவீர்களா???  ஆனால் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் உண்மையில் அப்படி ஒரு படகு போக்குவரத்து நம் பகுதி கூலையாறு என்னும் வழித்தடத்தில் நடந்து உள்ளது  .
அதே போல நம் பகுதியில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது  மழை பெய்து நம் பகுதி மெஞ்ஞானபுரம் படுகை ,சடையநேரி குளம் ,கல்லா நேரி குளம் ,புல்லா நேரி ,தாங்கை குளம் போன்றவை நிரம்பி கருமேனி ஆற்றில்  வெள்ளம் வந்து சிறுநாடார் குடியிருப்பு தாண்டி தண்ணிர் மணப்பாடு கடலில் கலக்கும் சூழ்நிலை உள்ளது . மேலும் நம் பகுதி கிழக்கில் உள்ள எல்லப்ப நாயக்கன் குளம் , குலசை தருவை குளம் போன்றவைகளும் முற்றிலும் நிரம்பி விடுகின்றன . அதே போல சாத்தான் குளம் பகுதி குளங்கள் ,புத்தன் தருவை பகுதி , திசையன்விளை பகுதி குளங்களும் நிரம்பி வழிகின்றன .ஆனாலும் நம் பகுதி நிலத்தடி நீர் மட்டம் மாறாமல் உப்பு நீராக உள்ளதே என்கிற எண்ணம் நம் எல்லாருடைய மனதிலும் தோன்றுவது உண்டு .
அதற்கான விடையை தேடி நான் அலைந்த போது தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு சொல்லும் வகையில் தற்செயலாக  நான் டேவிட் ஹோவர் என்பவரை பற்றி வாசிக்க நேர்ந்தது. யார் இந்த டேவிட் ஹோவர் அவருக்கும் நம் பகுதிக்கும் என்ன தொடர்பு, இவரை படித்தால் நம் பகுதி நிலத்தடி நீரை நாம் எப்படி மாற்றலாம் என்பதே எனது பதிவின் நோக்கம் .
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் நான் டெல்லி சென்று இருந்த போது உயர் படிப்பு ஆராய்ச்சி மாணவரான எனது  நண்பர் என்னை அங்குள்ள புது டெல்லி பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்துக்கு அழைத்து சென்று இருந்தார் .எனது நண்பர் அவரது படிப்புக்காக சில நூல்களை தேடி எடுத்து வாசித்து கொண்டு இருந்தவர் ,திடிரென என்னிடம் ஒரு புத்தகத்தை என்னிடம் கொடுத்து இது உங்கள் பகுதியை பற்றிய புத்தகம் இதை படியுங்கள் என தந்தார் .  1850 கால கட்டத்தில் நம் பகுதி திருநெல்வேலி மாவட்டமாக இருந்த போது அப்போது நம் பகுதியில் நீரியல் துறை நிபுணராகவும் , இயற்கை வழி தண்ணிர் மேலாண்மை ஆராய்ச்சியாளராக  இருந்த பிரிட்டிஷ் அதிகாரி டேவிட் ஹேவர் என்பவர் எழுதிய சர்வே குறிப்புகள் அது .அந்த குறிப்புகளை நான் வாசிக்க வாசிக்க டேவிட் ஹோவர் நம் பகுதியை பற்றி குறிப்பிடப்பட்ட விஷயங்கள் எனக்கு மெல்ல மெல்ல புரிய ஆரம்பித்தது .
நம் பகுதியை சர்வே செய்த டேவிட் ஹோவர் தனது குறிப்புகளில் அப்போதைய கால கட்டத்தில் இப்போது உள்ளது போல் மெஞ்ஞானபுரம் படுகை பகுதி நிரம்பி சடையநேரி நிரம்பி அதன் பின்னர் பத்தாங்கரை பகுதி நிரம்பாது .அந்த காலகட்டத்தில் மெஞ்ஞானபுரம் படுவை பகுதி முதலில் தண்ணீரால் நிரம்புமாம் அதன் பின்னர் தண்ணிர் நேராக பத்தாங்கரை பகுதிக்கு வந்து விடுமாம் ,பத்தாங்கரை நிரம்பிய பிறகு தான் இந்த தண்ணிர் மெல்ல மெல்ல சடையநேரிக்கு வருமாம் ,அதன் பின்னர் சடையநேரி குளம் நிரம்பிய பிறகு அந்த தண்ணிர் உடன்குடி அருகில் உள்ள தாங்கை குளத்துக்கு வருமாம் .
இவ்வாறு நம் பகுதி முழுக்க வெள்ளநீர் சூழ்ந்து இருக்கும் நிலையில் செட்டி விளை பகுதி மக்கள் படகு ( பரிசல் போல சிறிய படகு ) மூலம் செட்டியப் பத்து , வாத்தியார் குடியிருப்பு , தண்டுபத்து மற்றும் மானாடு பகுதிகளுக்கு சென்று வந்து உள்ளனர் .அந்த படகு பயணிக்கும் வழித்தடத்தை கூலையாறு வழி தடம் என டேவிட் ஹோவர் தன் குறிப்புகளில் குறிப்பிடுகிறார் .
இதே போல நம் பகுதியில் உள்ள ஒவ்வொரு ஊருக்கும் உள்ள பெயர்கள் கண்டிப்பாக காரண பெயர்களாக தான் இருக்கும் ,குறிப்பாக பத்து என்று ஊர் பெயர் அமைய காரணம் உயரமான பகுதி ஆகும் .அதாவது மேட்டு பகுதியை தான் நம் முன்னோர் பத்து என அழைத்தனர் . பத்தாங்கரை என்றால் உயரமான இடத்தில் உள்ள கரை என்றும் தண்டுபத்து ,செட்டியா பத்து , போன்றவை இது போன்ற காரண பெயர்கள் அமைய காரணம் என நினைக்கிறேன்.கூலையாறு இருந்தததால் கூழையன் குண்டு என பெயர் வந்து இருக்கும் என்றும்  வெள்ளாளன் விளை என்பது வெள்ளம் ஆளும் விளை என்பது ஆகும் .நம் பகுதியை இந்த வெள்ள நீர் சூழ்ந்து இருந்ததால் தான் நம் பகுதியின் பெரும்பான்மை ஊர்களுக்கு இப்படி காரண பெயர்கள் வந்து இருக்கலாம்  என நான் நினைக்கிறேன்.
டேவிட் ஹோவர் தனது குறிப்புகளில் நரிக்குளம் , இடக்குளம் ,சிறு குளம் ,மானாட்சி குளம்  , அர தோட்டம் ,  குண்டாங்கரை போன்ற குளங்கள் இங்கு இருப்பதாக குறிப்பிடுகிறார் .நரிக்குளம் என்பது இப்போது தண்டுபத்து அய்யன் கோவிலுக்கும் அத்தியடி தட்டு பகுதிக்கு மேற்கே உள்ள குளம் , இடக்குளம் என்பது இப்போதுள்ள வட்ட விளை பகுதிக்கு மேற்கே , சிறு குளம் என்பது குதிரை மொழி தேரி அருகில்  உள்ள சுந்தர புரம் தாண்டி உள்ள பகுதி .அதே போல மானாட்சி என்பது வெள்ளாளன் விளைக்கும் ,மானாடு பகுதிக்கும் இடைபட்ட இடத்தில் உள்ளது .இவை அனைத்தும் நிரம்பிய பிறகு தான் தண்ணிர் சடைய நெரி  குளத்துக்கு தண்ணிர் நிரம்பும் என்று குறிப்பிடுகிறார். சில சமயங்களில் கருமேனி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு வரும் போது அந்த வெள்ளம் சடையநேரி வழியாக வந்து பத்தாங்கரை பகுதியை மூழ்கடித்து அதன் பின்னர் வெள்ளாளன் விளை வரை வெள்ளம் சூழ்ந்து விடும் என்றும் வெள்ளாளன் விளை மக்கள் சீயோன் நகருக்கு தங்கள் குடியேற்றங்களை இதனால் தான் மாற்றி அமைத்து உள்ளனர்  டேவிட் ஹோவேர் தனது குறிப்புகளில் குறிப்பிடுகிறார்.
மேலும் டேவிட் ஹோவர் நம் மெஞ்ஞானபுரம் பத்தாங்கரை பகுதியை பற்றி குறிப்பிடும் போது இந்த பகுதி தான்  நம் பகுதியின் நிலத்தடி தண்ணிரை மாற்றும் இடம் என தெளிவாக குறிபிடுகிறார் . மெஞ்ஞானபுரம் பத்தாங்கரை பகுதி தான்  நம் உடன்குடி வட்டாரத்தின் நிலத்தடியில்  நீர் வழி தடம் செல்லும் பாதை என குறிபிடுகிறார் .இந்த பகுதியில் நீர் நிறைந்து இருந்தால் தான் அது உடன்குடி வட்டார பகுதிகள் முழுக்க செல்லும் என்றும் அதன் நிலத்துக்கு கீழ் தண்ணிர் செல்லும் வழி என்றும் அதன் நீரோட்டம் மணல் பகுதியான ஆதியாக் குறிச்சி ,மாதவன் குறிச்சி , சிறுநாடர் குடியிருப்பு மற்றும் பரமன் குறிச்சி , பிச்சி விளை ,சீர் காட்சி , உடன்குடி வட்டார பகுதிகள் வரை பரவி உள்ளது என்றும் குறிப்பிடுகிறார் .மேலும் இங்குள்ள நிலத்தடி நீரோட்டம் ஒரு புனல் போல அமைப்பாக உள்ளதாகவும் அது கிழக்கு நோக்கி செல்ல செல்ல விரிந்து செல்வதாகவும் கூறுகிறார் .
ஒரு முறை மெஞ்ஞானபுரம் பத்தாங்கரை பகுதி தண்ணீரால் நிரம்பினால் அது 10 ஆண்டுகள் வரை நம் உடன்குடி வட்டார பகுதிக்கு நல்ல தண்ணிரை சேமித்து கொடுக்கும் எனவும் சொல்கிறார் .இந்த நிலத்தடி நீர் வழி தடத்தில் நீர் நிரம்பி இருந்தால் இயற்கையாக நம் பகுதியில் பெய்யும் மழை பொழிவு அதிகமாகும் என ஒரு மிக பெரிய உண்மையை தனது சர்வே அறிக்கையில் டேவிட் ஹோவேர் குறிப்பிடுகிறார் .இவர் சொல்வதை பார்க்கும் போது அந்த காலங்களில்  நம் பகுதியில் அதிகமாக மழை பெய்யும் என நம் பெரியவர்கள் சொல்வதை ஒப்பிடு செய்து பார்த்தால் டேவிட் ஹோவேர் ஆராய்ச்சி உண்மை என்பது நமக்கு நன்கு புலப்படும் .
நம் பகுதி உவர்ப்பு நீரை நாம் மாற்ற வேண்டும் என நாமும் ,அரசும் பல கட்ட முயற்சிகள் செய்யும் இந்த நேரத்தில் இதற்கான முக்கிய தீர்வு இந்த மெஞ்ஞானபுரம் பத்தாங்கரை பகுதிக்கு தண்ணிர் கொண்டு வந்து நிரப்ப வேண்டும் என்ற   டேவிட் ஹோவேர் சர்வே குறிப்பு நமக்கு உதவும் என நான் நினைக்கிறேன்.
அதே போல பத்தாங்கரை  பகுதியின் மணல் அமைப்பு தண்ணிரை பஞ்சு போல் சேமித்து வைக்க கூடிய அமைப்பாக உள்ளது என்றும் நம் தாங்கை குளம் கீழ் பகுதியில் கல் பாறையாக உள்ளது என்றும் அதில் நீர் சேமிக்க முடியாது என்றும் அது குளத்தை சுற்றி 1 கிலோ மீட்டர் தூரம் அளவுக்கே தண்ணிரை மாற்றும் என்றும் குறிப்பிடுகிறார் . மேலும் மெஞ்ஞானபுரம் படுகை பகுதி நிரம்பினால் அது வீரப்ப நாடார் குடியிருப்பு ,எள்ளு விளை , காயாமொழி போன்ற இடங்களுக்கு தண்ணிரை சேமித்து கொடுக்கும் என்றும் நாசரேத் மூக்குபீறி அருகில் உள்ள ரயில் நிலையம் பக்கம்  ஒரு மணல்பாங்கான குளத்தில்(தற்போது அப்படி ஒரு குளம் அங்கு இல்லை என நினைக்கிறேன் ,ஏற்கனவே ஊளை விட்டான் குளம் என்ற ஒரு குளம் அங்கு இருந்ததாக நண்பர்கள் சொல்கிறார்கள் ) நீர் நிறைந்து இருந்தால் அதன் மணல் முழுக்க தண்ணிரை உறிஞ்சி வைத்து மெஞ்ஞானபுரம் படுகை வரை நிலத்தடி நீரை சேமிக்க உதவும் எனவும் குறிப்பிடுகிறார் .
மேலும் டேவிட் ஹோவர் மெஞ்ஞானபுரம் பத்தாங்கரை பகுதி 6 மாத காலம் நீரால் நிரம்பி போய் இருக்கும் என்றும் மீதம் உள்ள 6 மாத காலத்தில் இந்த பகுதி விவசாயிகள் நெல் விளைவித்து அமோக  விளைச்சலை பெற்று உள்ளதாகவும் குறிப்பிடுகிறார் .
இப்போது உள்ள நிலைமை !!!
இவ்வாறு பல ஆண்டுகளாக உடன்குடி வட்டார பகுதியின் நிலத்தடி நீரை சேமித்து கொடுக்கும் பத்தாங்கரை பகுதியின் நிலை இன்று முற்றிலும் மாறி விட்டது .உடன்குடியில் இருந்து மெஞ்ஞானபுரம் செல்லும் சாலையில் மருதூர் கரை தாண்டி மெஞ்ஞானபுரம் வரை நஞ்சை நெல் விளைந்த பூமி இன்று மழை பொழிவு குறைவாலும் , நீர் வரத்து இல்லாததாலும் தென்னை விவசாயமே பிரதானமாக உள்ளது . அந்த காலத்தில் செட்டிவிளை ஊரில் இருந்து மேற்கே பார்த்தால் மெஞ்ஞானபுரம் ஊர் தெளிவாக தெரியுமாம் .  இந்த பகுதி 1980 ல் நம் பகுதியில் வந்த பெரும் வெள்ளத்துக்கு பிறகு நிரம்பாமல் உள்ளது .அதே போல அந்த கால கட்டத்தில் இந்த பகுதியில் தண்ணிர் பாசன பங்கிடு தொடர்பாக விவசாயிகளிடையே ஒரு மிக பெரிய பிரச்சனை நடந்ததாகவும்  சொல்கிறார்கள் .
நேற்று உடன்குடியில் உள்ள பெரியவர் ஒருவரிடம் நான் பேசி கொண்டு இருந்த போது அவர் கூறிய ஒரு விடயம் என்னவெனில் நம் உடன்குடி வட்டாரத்தின் நிலத்தடி நீர் உவர்ப்பாக மாறியது 1994 ம் ஆண்டைய கால கட்டம் என சொன்னார் , இதை ஏன் சொல்கிறேன் என்றால் 1980ல் நிரம்பிய பத்தாங்கரை கிட்ட தட்ட 14 ஆண்டுகள் மழை பொழிவு குறைந்து வறட்சி நிலவினாலும் நம் பகுதி நிலத்தடி நீரை காத்து உள்ளது .ஆனால் அதன் பிறகும் இந்த பகுதிக்கு தண்ணிர் வராததால் தான் நம் நிலத்தடி நீர் உவர்ப்பாக மாறி உள்ளது .
மேலும் இப்போது சடையநேரி குளத்தில் இருந்து பத்தாங்கரை பகுதிக்கு இரு பாசன மடைகள் உள்ளது .இந்த மடைகளில் குளத்தின் தெற்கு பகுதியில் உள்ள மடை மருதூர் கரை ,சித்தவிளை வழியாகவும் , மற்றொரு மடை மாணிக்க புரம் வழியாகவும் செல்கிறது . இரு பாசன மடைகளும் மிகவும் சிறிய அளவில் உள்ளதுடன் ,பாசன மடைகளில் இருந்து தண்ணிர் செல்லும் வாய்க்கால்கள் மிகவும் குறுகலாகவும் ,அதில் முறையாக பராமரிக்க படாததால் ஓலைகள் ,செடிகள் விழுந்தும் கிடக்கிறது . இந்த பாசன மடைகள் மூலம் தண்ணிர் செல்லும் போது அது பத்தாங்கரை மேல் பகுதி விவசாயிகளின் விளை நிலங்களுக்குள் சென்று சேதம் ஏற்படுத்துகிறது.மேலும் கால்வாய் குறிப்பிட்ட சில இடங்களில் இல்லாமலும் உள்ளது . .மேலும் அரசின் வருவாய் துறை ஆவணங்கள் அடிப்படையில் சுமார் 250 ஏக்கர் மட்டுமே பாசன நிலமாக காட்ட பட்டு உள்ளது ஆனால் உண்மையில் இந்த பகுதியில் சுமார் 900 ஏக்கர் பாசன நிலம் உள்ளது .
இனி என்ன செய்யலாம் !!!
பிரிட்டிஷ் அதிகாரி டேவிட் ஹோவர்  சர்வே அறிக்கையின் படியும் கால காலமாக நம் முன்னோர்கள் நமக்கு சொன்ன செவிவழி செய்திகள் அடிப்படையிலும் மெஞ்ஞானபுரம் பத்தாங்கரை பகுதிக்கு தண்ணிர் வந்தால் தான் நம் உடன்குடி பகுதி நிலத்தடி நீர் வளம் பெறும் என்பது உண்மை என நாம் அறிந்துள்ள நிலையில் இப்போதுள்ள நிலையில் நம் உடன்குடி வட்டார பகுதி நிலத்தடி நீரை மாற்ற உடனடியாக நாம் சில ஆக்கபூர்வமான விஷயங்களை செய்தாக வேண்டும் .
உடனடியாக மெஞ்ஞானபுரம் பத்தாங்கரை பகுதி பாசன விவசாயிகளை ஒருங்கிணைப்பு செய்ய வேண்டும் , பாசன பரப்பு சுமார் 900 ஏக்கர் இருக்கும் நிலையில் அரசு ஆவணங்களில் அது 250 ஏக்கர் என உள்ளதை மாற்ற மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு செய்து பாசன பரப்பு அதிகம் உள்ளதை முறையாக  பதிவு செய்ய வேண்டும் .பத்தாங்கரை விவசாய சங்கம் மற்றும் உடன்குடி நிலத்தடி நீரை பாதுகாக்கும் அமைப்பு என இரண்டு  சங்கம் அல்லது  அமைப்பை உருவாக்கம் செய்ய வேண்டும் .அந்த சங்கத்துக்கு தலைவர் ,செயலர் ,உறுப்பினர்களை சேர்த்து அதனை முறையாக பதிவு செய்ய வேண்டும் . இதன் மூலம் அரசிடம் கோரிக்கை வைத்து பத்தாங்கரை மடைகளை அகலமாக்கி அதன் கால்வாயின் அகலத்தை அதிகரிக்க வேண்டும் , அதே போல கால்வாய் உடையாமல் இருக்க அதன் கரைகளை கான்கிரிட் சுவர் கொண்டு கட்ட பட வேண்டும் .  மேலும் தண்ணிர் வரும் சமயம் எந்த விவசாயிக்கும் பாதிப்பு இல்லாமல் நீர் மேலாண்மை செய்வது ,பங்கிடு செய்வது தொடர்பாக விவசாயிகளுக்குள் பேசி தீர்வு காண வேண்டும் .அதே போல நீர் வழி தடம் இல்லாத இடங்களில் அந்த இடத்தின் உரிமையாளர்களிடம் பேசி அவர்களிடம் அனுமதி பெற்று தண்ணிரை குளங்களுக்கு எடுத்து செல்ல வேண்டும் .பத்தாங்கரை விவசாய சங்கம் விவசாயிகளை ஒருங்கிணைப்பதிலும் , உடன்குடி நிலத்தடி நீர் பாதுகாப்பு அமைப்பு உடன்குடி முதல் பரமன்குறிச்சி வரை உள்ள  இந்த பகுதி மக்களுக்கு நிலத்தடி நீரை காக்க விழிப்புணர்வு செய்யவும் ,இது தொடர்பாக  தேவையெனில்  மக்கள் மக்கள் திரள் போராட்டங்களை முன்னெடுக்கவும் செய்ய வேண்டும் . பத்தாங்கரை  பகுதியில் உள்ள நரி குளம் ,இடக் குளம் , மானாச்சி , சிறு குளம் போன்ற நீராதார பகுதிகளை முறையாக தூர் வாரி பராமரிப்பு செய்ய வேண்டும் . இந்த பத்தாங்கரை இனி உடன்குடி வட்டாரத்தின்  பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியாகவும் , நிலத்தடி நீர் ஆதார பகுதியாகவும் ,ஆண்டு தோறும் அங்குள்ள குளங்களுக்கு தண்ணீர் வர வழிவகை செய்ய வேண்டும்.
மனிதர்களாகிய நம் எல்லாருக்கும் சின்ன சின்ன கனவுகள் இருக்கும் .கனவுகள் இல்லாத மனிதர்களே இல்லன்னு கூட சொல்லலாம் ,சில கனவுகள் வெறுமனே கனவுகளாக மட்டும் அல்லாமல் ....சிலரின் வாழ்க்கை லட்சியமாக கூட இருக்கலாம் அதே போல எனது பத்தாங்கரை கனவும் தனிப்பட்ட  எனது கனவாக மட்டுமல்லாமல் நம் பகுதி இளைய தலைமுறையின்  கனவாக மாறி பத்தாங்கரைக்கு தண்ணிர் கொண்டு வந்து  நம் உடன்குடி வட்டார பகுதி நீராதார பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து விவசாயம் வளம் பெற்று  செல்வ செழிப்போடு நம் மக்கள் வாழவேண்டும் என்பதே !
எனது பத்தாங்கரை கனவுகள் மெய்ப்படும் எனும் நம்பிக்கையில் .

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo