Onetamil News Logo

முன்னாள் மேயரை கொன்றது தி.மு.க ;சட்டம்-ஒழுங்கு பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை ;முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

Onetamil News
 

முன்னாள் மேயரை கொன்றது தி.மு.க ;சட்டம்-ஒழுங்கு பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை ;முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு 


வேலூர்,  2019 ஆகஸ்ட் 3 ;நெல்லை முன்னாள் மேயரை கொன்றவர் தி.மு.க.வை சேர்ந்தவர் என்றும், எனவே சட்டம்-ஒழுங்கு பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை என்றும் வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளராக ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் நேற்று நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
எங்கே பார்த்தாலும் ஊழல், ஊழல் என்று மு.க.ஸ்டாலின் சொல்கிறார். ஆனால் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி, தி.மு.க. ஆட்சிதான். தி.மு.க. ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்பொழுது, நீங்கள் ஊழல் செய்யவில்லையென்றால், வேலூரில் எப்படி கட்டுக்கட்டாக ரூ.10 கோடி பணம் வரும்? எப்படி உங்களுக்கு வேண்டியவர் வீட்டிலிருந்து பணம் எடுக்க முடியும்?
எல்லா கட்சியிலும் அந்தந்த கட்சியின் தலைவர்கள், மகன்கள் இருப்பது வாடிக்கை. அவர்கள் கட்சியில் பொறுப்பிற்கு வருவது தவறல்ல, கட்சி தலைவராக வருவதைத் தான் வாரிசு அரசியல் என்று சொல்கிறோம். கருணாநிதி இருந்தார், அவருக்குப் பிறகு மு.க.ஸ்டாலின், அதற்குப் பிறகு உதயநிதி வந்திருக்கின்றார். வாரிசு அரசியல் தான் இருக்கக்கூடாது என்கின்றோமே தவிர அவருடைய மகன் தேர்தலில் நிற்பதையோ மற்றவர்கள் தேர்தலில் நிற்பதையோ நாங்கள் பொருட்படுத்தவில்லை.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டம்-ஒழுங்கைப் பற்றியும், பெண்கள் பாதுகாப்பு பற்றியும் பேசி வருகிறார். நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர், பணிப்பெண் ஆகியோர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அஞ்சலி செலுத்த சென்ற மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என கூறுகிறார்.
ஆனால் உமா மகேஸ்வரி உள்பட 3 பேரை கொலை செய்தவர்கள் தி.மு.க பிரமுகர் சீனியம்மாள் மகன் கார்த்திகேயன் என்பதை இரண்டே நாட்களில் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். எனவே சட்டம்-ஒழுங்கைப் பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை.
தி.மு.க.வை சேர்ந்தவர்கள் பிரியாணி கடைக்குச் சென்று உணவு அருந்திவிட்டு பணம் கேட்டால், அவர்களை அடித்து உதைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள். ஆனால், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அந்த பிரியாணி கடைக்குச் சென்று மு.க.ஸ்டாலின் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார். இவர் கட்சித்தலைவரா அல்லது கட்டப்பஞ்சாயத்து தலைவரா என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த ஆட்சியை கலைக்க தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பல முறை முயன்றும், அவரால் முடியவில்லை. எவ்வளவோ முயற்சிகள் எடுத்தாலும், அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க முடியாது. எங்களது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வளவோ ஆசை வார்த்தைகள் கூறினாலும், மு.க.ஸ்டாலினால் ஒன்றும் செய்ய முடியாது.
எங்கள் கட்சியைச் சேர்ந்த 18 சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரது ஆசை வார்த்தைகளை நம்பி, எங்கள் இயக்கத்தை விட்டு வெளியேறியதன் காரணமாக, இன்றைக்கு ஆதரவற்ற நிலையில் இருக்கிறார்கள். உண்மை தான் வெல்லும். நிஜம் தான் ஜெயிக்கும், நீதி தான் வெல்லும்.
எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்ற கடந்த இரண்டரை ஆண்டுகளில் தி.மு.க.வின் தூண்டுதலின் பேரில் எண்ணற்றப் போராட்டங்கள் பல்வேறு அமைப்புகள் மூலம் நடத்தப்பட்டன. போராட்டம் செய்த அமைப்புகளை அழைத்து சமாதானம் பேசி, போராட்டத்தை கைவிடச் செய்து வெற்றி கண்ட அரசு அம்மாவின் அரசு.
இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு என்றும் பாதுகாப்பு அரணாக இருப்பது அ.தி.மு.க தான். இஸ்லாமிய சமுதாய மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி நிம்மதியாக வாழ உகந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது.
இந்த அணைக்கட்டுத் தொகுதிக்குட்பட்ட மேல் அரசம்பட்டு கிராமத்தில் ஒரு அணை கட்ட வேண்டும் எனவும், வேலூர் மாவட்டம் மிகப்பெரிய மாவட்டமாக இருப்பதால் அதனை பிரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வரப்பேற்றுள்ளது. இந்த கோரிக்கைகள் அரசின் பரிசீலனையில் உள்ளன என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo