ஆபத்து விளைவிக்கும் தனியார் செல்போன் கோபுரம் அமைக்க வலுக்கும் எதிர்ப்பு - கடம்பத்தூரில் பதற்றம்
சிறு குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் முதியவர்கள் கதிர்வீச்சு அபாயத்தால் பெரிதும் பாதிக்கப்படுவர்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ரங்கநாதன் நகரில் “500” குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடியிருப்பைச் சுற்றியே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் தனியார் நடத்தும் பள்ளி ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிகளில் மட்டும் 300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இக்குடியிருப்புகளுக்கு மத்தியில் (ரங்கநாதன் நகர் பழைய சர்வே எண்.8/4, புதிய சர்வே எண்106/1) தனியார் அலைபேசி நிறுவனம் ஒன்று செல்போன் கோபுரம் அமைக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.
உயர் அழுத்த அலைபேசி கோபுரமாக அமைக்கப்பட இருக்கும் இம்முயற்சிக்கு தொடக்கம் முதலே பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இளம் குழந்தைகள் படிக்கின்ற பள்ளிகளுக்கும் தனியார் செல்போன் கோபுரம் அமையவிருக்கும் இடத்திற்கும் உள்ள இடைவெளி வெறும் 60 மீட்டர் மட்டுமே. மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் போன்றவை உயர் அழுத்த செல்போன் கோபுரம் அமைக்கும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பல்வேறு வழக்குகளை ஏற்கனவே சுட்டிக்காட்டி வெளியிட்டுள்ளது.
அதன்படி உயர் அழுத்த செல்போன் கோபுரத்திற்கும் குடியிருப்புகளுக்கும் மத்தியில் 400 மீட்டர் அளவில் இடைவெளி இருக்கவேண்டும் அதே போன்று வீட்டின் மொட்டை மாடியில் உயரழுத்த செல்போன் கோபுரம் அமைக்க அனுமதி இல்லை என பல்வேறு விதிமுறைகளை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆனால் தனியார் அலைபேசி நிறுவனம் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற விதிகள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டு செல்போன் கோபுரம் அமைக்கும் பகீரத முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதனை அனுமதித்தால் சிறு குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் முதியவர்கள் கதிர்வீச்சு அபாயத்தால் பெரிதும் பாதிக்கப்படுவர்.
கடந்த 09.12.2022 அன்று இப்பிரச்சினை தொடர்பாக, துணை வட்டாட்சியர் தலைமையில் கிராம நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்ற இருதரப்பு பேச்சு வார்த்தை முடிவு எதுவும் எட்டப்படாமலேயே தோல்வியில் முடிந்தது. இவ்வேளையில் அலைபேசி கோபுரம் அமைப்பதை நிறுத்த வட்டாட்சியர் அவர்கள் ஆணையிட்டும் (வட்டாட்சியர், திருவள்ளூர் நக.எண் 2258/2023/ஆ3 நாள்:04/2023) தனியார் அலைபேசி நிறுவனம், உத்தரவை அலட்சியம் செய்து விதி மீறலையும் செய்துவருகிறது. கடந்த 26.05.2023 தேதியில் கடம்பத்தூர் ஊராட்சி மன்ற கிராம சபைக் கூட்டத்தில், செல்போன் கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் இயற்றிய போதும், மக்களின் நலனையும் எதிர்ப்பையும் மீறி தனியார் அலைபேசி நிறுவனம் தனது அரசியல் பலம் மற்றும் பண பின்புலத்தைக் கொண்டு மக்கள் எதிர்ப்பையும் மீறி செல்போன் கோபுரம் அமைக்கும் அதீத முயற்சியில் விடாப்பிடியாக உறுதியாக உள்ளது.
பொதுமக்களின் விருப்பமும் வேண்டுகோளும் யாதெனில், “நாங்கள நவீன கால வளர்ச்சிக்கு எதிரானவர்களோ அரசின் திட்டங்களுக்கோ எதிரானவர்கள் இல்லை. ஏற்கனவே எங்களது பகுதியில் குடியிருப்புக்கு மத்தியில் அமைந்துள்ள சுடுகாட்டினால் பிணங்கள் எரிக்கும்போது எழுகின்ற துர்நாற்றத்தாலும், புகையினாலும் நாள்தோறும் மூச்சுத் திணறலுக்கு உள்ளாகி பெரும் அவதிப்பட்டு வருகின்றோம். அதுமட்டுமன்றி இதற்கு முன்பு தாமரை தெரு அருகில் அமைக்கப்பட்ட உயர் அழுத்த அலைபேசி கோபுரத்தால் பிறக்கும் குழந்தைகளில் இதயக் குறைபாடு, செவிக் குறைபாடு, ஊனமாக பிறத்தல் போன்ற பாதிப்புகள் மட்டுமல்லாது “30” க்கும் மேற்பட்டவர்கள் புற்றுநோயினாலும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அறிவியல் மாற்றங்களையும் வளர்ச்சி திட்டப் பணிகளையும் மக்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாத வகையில் நிறைவேற்றிட அரசு எங்களுக்கு உதவிட வேண்டும் என்பதே கடம்பத்தூர் மக்களின் ஏக்கமும் வேண்டுகோளும் ஆகும். குடியிருப்புகளுக்கு மத்தியில் செல்போன் கோபுரம் அமைப்பதையே நாங்கள் எதிர்க்கிறோமே தவிர குடியிருப்பு அல்லாதவிடங்களில் தனியார் அலைபேசி கோபுரம் அமைத்துக்கொள்ள எங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை.
தனியார் நிறுவனம் தனது பணிகளை நிறுத்தி மாற்று இடத்தில் அலைபேசி கோபுரம் அமைக்கும் பணியை மேற்கொள்ளாத வரையில் எங்களின் எதிர்ப்பு தொடரும். சட்டரீதியாகவும் மக்கள் ஆட்சியின் தூண்களாக விளங்குகிற ஊடக சக்தி வாயிலாகவும் எங்களின் அறப்போராட்டம் தொடரும்” என்கின்றனர் கடம்பத்தூர் கிராம பொதுமக்கள்.