விதி எண் 3' திரைப்படம்..! தூத்துக்குடி கிளியோபாட்ரா, உள்பட தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் ரீலிஸ் ஆனது...'
தூத்துக்குடி பகுதியை சேர்ந்த பலர் நடித்துள்ளனர்..! இளம் பெண்களுக்கு விழிப்புணவூட்டும் சிறந்த படம்..!நிலா ஃபிலிம் மேக்கர் தயாரித்திருக்கும் 'விதி எண்-3' என்ற திரைப்படம் தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய திரையரங்குகளில் வெளியானது. வஜ்ராராம் விஷுவல் வெஞ்சர்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தமிழகமெங்கும் ரிலீஸ் செய்துள்ளது.
ஏற்கனவே, 'அரசியல் சதுரங்கம்' என்ற திரைப்படத்தை இயக்கிய பிராட்வே சுந்தர், தனது இயக்கத்தில் 2-வது திரைப்படமான 'விதி எண் 3'ல், பல புதுமுகங்களை அறிமுகப்படுத்தி உள்ளார். போக்சோ சட்டத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு உள்ள இந்த திரைப்படத்தை, கதை, திரைக்கதை, வசனம், ஒலிப்பதிவு, எடிட்டிங் ஆகியவற்றுடன் சிறப்பாக இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படத்தில் தூத்துக்குடி பகுதியை சேர்ந்த பிரபல தொழிலதிபர்கள், பத்திரிக்கையாளர்கள், வழக்கறிஞர் சங்க தலைவர் என பலரும் நடித்துள்ளனர். கோல்டன் தேங்காய் எண்ணெய் மில் அதிபர் ஜெபசிங், பெண்களுக்கு நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக போராடும் வக்கீலாக அசத்தலாக நடித்து, கதாநாயகன் அந்தஸ்தை பெற்றுள்ளார். நீதிபதியாக வழக்கறிஞர் செங்குட்டுவன், காவல்துறை அதிகாரியாக கனி மெடிக்கல் உரிமையாளர் ஆர்.ஜெயம் ஆகியோருடன் பள்ளி மாணவியாக அக்ஷயா, வில்லனாக ஆத்தூர் பாப்பா சங்கர், வில்லியாக சுசீலா, பத்திரிக்கையாளர்கள்
சுமங்கலி சதீஷ், ஜெகதீஸ், ஜெகஜீவன், அலெக்ஸ், முள்ளக்காடு செல்வின் மற்றும் டி.முருகன், ராகவ்ஷங்கர், சுகந்தி கோமஸ், ஆர்யாஸ் சங்கரநாராயணன்,
ஆத்தூர் என்.ராமசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்திற்கு கல்லூரி மாணவர் ஜான் சுரேஷ் பிரமாதமாக இசையமைத்து, ஒரு பாடலையும் பாடியிருக்கிறார். அறிமுகமாகி உள்ள முதல் படத்திலேயே தியேட்டரை அதிர வைத்துள்ளார். கார்த்திக் இணை இயக்குனராகவும், ஜித்து, கார்த்திக் கௌதம் மற்றும் ரஹ்மத் சாஹிப் ஆகியோர் உதவி இயக்குனர்களாகவும் பணிபுரிந்துள்ளனர், டப்பிங் பணிகளை சீலன் ஸ்ருதி செய்திருக்கிறார்.
தூத்துக்குடி கிளியோபாட்ரா தியேட்டரில் இத்திரைப்படத்தை காண்பதற்காக, இப்படத்தின் இயக்குனர் பிராட்வே சுந்தர், இசையமைப்பாளர் ஜான் சுரேஷ் மற்றும் நடிகர், நடிகைகள் குடும்பத்துடன் வந்திருந்தனர். முன்னதாகவே, முதல் வகுப்பு பால்கனியிலுள்ள இருக்கைகள் நிரம்பி விட்டதால், பலர் 2-ம் வகுப்பு இருக்கைகளில் அமர்ந்து திரைப்படத்தை கண்டு கழித்தனர்.
விதி எண் 3- திரைப்படத்தை பார்த்து விட்டு, வெளியே வந்த ரசிகர்களிடம் இத்திரைப்படம் குறித்து கேட்ட போது, சிறந்த குடும்ப படம் என்று பலர் கருத்து தெரிவித்தனர். குறிப்பாக பெண்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் எனவும் கூறினர். மேலும், புதுமுகங்களை வைத்தே திரைப்படத்தை திறம்பட இயக்கியுள்ள இயக்குனரின் அபார திறமையை பலரும் பாராட்டினர். இன்னும் சிலர், கதை திடீரென முடிந்து விட்டதாகவும், கதையின் முடிவில் எதிரிகள் அனைவரும் இறப்பதை தவிர்த்து, திருந்துவது போல காட்சி அமைத்திருக்கலாம் என்றும் கூறினர்.
மொத்தத்தில், பெண் குழந்தைகளின் பெற்றோருக்கும், வாலிப பருவத்தில் திசை மாறும் இளம்பெண்களுக்கும் விழிப்புணர்வூட்டும் வகையில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு இருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. கஞ்சா போதையில் திரியும் ஆசாமிகளிடமும், பண ஆசையில் வலைவீசும் நபர்களிடமும் காதலில் சிக்கி சீரழியும் இளம்பெண்களின் பரிதாப நிலையை, இந்த திரைப்படம் பாடமாக காட்சிப்படுத்தி உள்ளது.
மேலும், இளம் பெண்ணுக்கு வக்கீலான ஜெபசிங் கூறும் சிறந்த அறிவுரைகள் எதார்த்தமாக அமைந்துள்ளது. மேலும், சீனியர் வக்கீலை காப்பாற்றும் நோக்கத்தில், எதிரிகளை தாக்கும் காட்சியில் ஜெபசிங் இயல்பாக நடித்திருப்பது தனிச்சிறப்பு. அதே நேரத்தில் வக்கீலே அரிவாளை தூக்கி செல்லும் காட்சியை தவிர்த்திருக்கலாம்.
இதற்கிடையே, இத்திரைப்படத்தின் விநியோகஸ்தர் வஜ்ராராம் விஷுவல் வெஞ்சர்ஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.