ரூ.410க்கு விற்பனையான சிலிண்டர் விலை இன்று ஏன் ரூ.1,130க்கு விற்பனை செய்யப்படுகிறது? மின்சார வாரியத்தில் ஊழல் நடப்பதாக அண்ணாமலை குற்றம்சாட்டு, தைரியமிருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி ஆவேசம்
மின்சார வாரியத்தில் ஊழல் நடப்பதாக அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்த நிலையில், தைரியமிருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி சவால் விடுத்துள்ளார்.
அண்மையில் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். இதற்கு மின்சாரத் துறையின் கடனும், மத்திய அரசின் அறிவுறுத்தலுமே காரணம் என்றும் அவர் விளக்கமளித்தார். இதனைத்தொடர்ந்து மின்சார கட்டண உயர்வை கண்டித்து அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஊழல் செய்து வருவதாகவும், நிலக்கரி கொள்முதல் என்ற பெயரில் கமிஷன் அடிப்பதாகவும் குற்றம்சாட்டினார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை மிஞ்சும் வகையில், விஞ்ஞான ஊழலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார்.இந்த நிலையில் சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் மரபுசாரா மின்சார உற்பத்தியில் தமிழக மின்சார வாரியம் சாதனை படைத்துள்ளது. அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நிறைவடையும்.
தமிழக மின்சார வாரியம் செய்யக்கூடிய தவறுகளை ஆதாரமிருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம். பத்திரிகைகளில் கிடைக்கும் நேரலைக்கும், விளம்பரங்களுக்காகவும் சொல்லக்கூடிய அரைவேக்காறு குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க விரும்பவில்லை.
தைரியமிருந்தால், ஆம்பிளையாக இருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கட்டும். பாஜக ஆளும் கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களில் 100 யூனிட் மின்சாரம் ரூ.500க்கும் மேல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் ரூ. 12,500 கோடிக்கும் அதிகமான மானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் நேர்மை இருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம். நிச்சயமாக பதில் அளிப்போம் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து நிலக்கரி இறக்குமதி குறித்து பேசிய செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் நிலக்கரி 143 டாலருக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் 203 டாலருக்கு கொள்முதல் செய்யப்பட வேண்டும் மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதோடு, ரூ.410க்கு விற்பனையான சிலிண்டர் விலை இன்று ஏன் ரூ.1,130க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றி ஆர்ப்பாட்டங்கள் நடத்திய அதிமுக, பாஜக கட்சிகள் பதிலளிக்க வேண்டும்.தொடர்ந்து ஒரு நேர்மையான அதிகாரி, ஆட்டுக்குட்டி மேய்த்து அதில் வரக்கூடிய வருமானத்தில் குடும்பம் நடத்தியவர், அரவக்குறிச்சி தேர்தலில் ரூ.1000 வாக்காளர்களுக்கு கொடுத்தார் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டினார்