தூத்துக்குடியில் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா
உலக நுகர்வோர் உரிமைகள் தின விழாவை தமிழக அரசின் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, எம்பவர் இந்தியா நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் ஆகியவை இணைந்து தூத்துக்குடியில் நடத்தியது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். மேலும் உலக உரிமைகள் தின கருப்பொருளான மாசற்ற ஆற்றல்களுக்கு மாறுவதன் வழியாக நுகர்வோருக்கு அதிகாரமளித்தல் என்ற போஸ்டரை வெளியிட்டு “தற்போதைய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019 ன் சிறப்பு அம்சங்கள் மற்றும் உணவுப் பொருள் வீணாவதை தடுத்தல் அல்லது தவிர்த்தல்” என்ற தலைப்பில் நடைபெற்ற தூத்துக்குடி மாவட்ட கல்லூரி அளவிலான பேச்சுப்;போட்டியில் வெற்றி பெற்ற மாணவஃமாணவியர்களுக்கு காசோலையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.
எம்பவர் இந்தியா கௌரவ செயலாளரும், கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினருமான ஆ.சங்கர் பேசும் போது கூறியதாவது : மாசற்ற ஆற்றல் கொண்ட நுகர்வு பொருள்களுக்கு நாம் மாறுவதன் மூலம் 40 முதல் 70 சதவீதம் வரை எதிர்காலத்தில் உருவாக இருக்கும் பசுங்குடில் வாயுக்களை குறைக்க முடியும். இந்த பிண்ணனியில் நம்பகத்தன்மை வாய்ந்த நீடித்த பயனளிக்கும் நவீன ஆற்றலை குறைந்த விலையில் அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டியுள்ளது. இது காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளை கட்டுக்குள் வைக்க உதவும் எனக் கூறினார். மேலும் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் காலியாக உள்ள உறுப்பினர் நியமனங்களை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் மாரியப்பன்; கருத்துரையாற்றினார். மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசிம் முன்னிலை வகித்தார். ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி மாணவி வசந்த குமாரி முதல் பரிசான ரூபாய் 2,500, அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரி மாணவி அனு செல்வ ராதா இரண்டாவது பரிசான ரூபாய் 1,500, ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல்கல்லூரி மாணவர் செல்வம் மூன்றாம் பரிசான ரூபாய் 1,000; காசோலையாக பெற்றுக் கொண்டனர்.
செந்தில் முருகன் கேஸ் ஏஜென்சிஸ் உரிமையாளர் ராஜீவி எரிவாயு சிலிண்டரை பாதுகாப்பாக உபயோகிப்பது எப்படி, என்ன வழிகளில் எல்.பி.ஜியை பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி செயல்முறை விளக்கமளித்தார். குடிமைப் பொருள் வழங்கல் தனி வட்டாட்சியர் ஜஸ்டின் செல்லத்துரை நன்றியுரை கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை சுதா குமாரி மற்றும் எம்பவர் மேலாளர் லலிதாம்பிகை ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சியில் அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரி ஆசிரியர்கள்; மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.