Onetamil News Logo

உலக சுனாமி(ஆழிப்பேரலை) விழிப்புணர்வு தினம் 

Onetamil News
 

உலக சுனாமி(ஆழிப்பேரலை) விழிப்புணர்வு தினம் 


திருச்சி 2020 நவம்பர் 5 ;ஜப்பானில் ஏற்பட்ட சுனாமிக்குப் பிறகு பொதுமக்களிடம் சுனாமி விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உலக அளவில் ஒத்துழைப்பு அவசியம் என ஐ.நா. சபை வலியுறுத்தியது. இதற்காக அனைத்து உலக நாடுகளையும் ஒங்கிணைத்து ஐ.நா. சபை கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு மாநாடு நடத்தியது.
அதில்  இயற்கைப் பேரிடர்கள் குறித்த விழிப்புணர்வு, கல்வியறிவு மக்களுக்கு அளிக்க வேண்டும். இயற்கைப் பேரிடர்களில் இருந்து மக்களைக் காப்பாற்ற விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் அவசியம் என்று வலியுறுத்தினர். மேலும் சுனாமியில் இருந்து உயிர் பிழைத்த செக் குடியரசின் பிரதிநிதி உட்பட சிலர் பேசும்போது சுனாமி தொடர்பான தங்கள் எண்ணங்களை கூட்டத்தில் பகிர்ந்து கொண்டனர்.
இதே போல் 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமியில் தாய்லாந்து கடற்கரையில் இருந்து தப்பித்த செக் குடியரசைச் சேர்ந்த பெட்ராநெம்கோவா என்பவர் பேசும்போது, ‘‘தண்ணீர் அல்ல ஒரு பெரிய கான்கிரீட் கட்டிடம் தன் மீது விழுந்ததைப் போன்று உணர்ந்தேன். நான் தங்கியிருந்த பயணியர் விடுதி சில வினாடிகளில் முழுவதும் இடிந்து தரைமட்டமானது. எல்லா இடங்களிலும் இடிபாடுகளே காணப்பட்டன. எனவே இயற்கைப் பேரிடர் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாடுகள் கையாள்வது அவசியம்’’ என்றார்.
முடிவில் ஆண்டுதோறும் நவம்பர் 5-ம் தேதி உலக சுனாமி விழிப்புணர்வு தினமாகக் கடைப்பிடிக்க ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 5-ம் தேதி சுனாமி விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
சுனாமி பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் அது குறித்த பாதிப்பை பெருமளவில் குறைக்க முடியும் என்பதே இதன் நோக்கம் ஆகும்.
இதனால் உலக சுனாமி விழிப்புணர்வு தினத்தில் மக்களிடம் சுனாமி பாதிப்புகள்,  அவசர காலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் நடத்தப்படுகின்றன.
கடலில் உள்ள தரைப்பகுதிக்கு அடியில் நிலத்தட்டுகள் நகரும்போது அல்லது ஒன்றுடன் ஒன்று மோதும் போது அங்கு திடீர் மாற்றம் ஏற்படும். அப்போது கடல் கொந்தளித்து ராட்சதஅலைகள் உருவாகி அருகில் உள்ள அனைத்து கடலோரப் பகுதிகளில் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தும். இதை சுனாமி என்று அழைக்கிறார்கள்.
கடல் அடியில் பூகம்பம் மட்டுமல்லாமல், நிலச்சரிவு, எரிமலை வெடிப்பு மற்றும் விண்வெளியில் இருந்து விண் கல் விழுதல் ஆகியன வற்றின் காரணமாகவும் ‘சுனாமி’ ஏற்படுகிறது.
சுனாமி அபூர்வமாக நிகழக் கூடியதுதான். எனினும் இயற்கைப் பேரிடர்களில் அதிகபட்ச உயிரிழப்பையும், பலத்த பொருட்சேதத்தையும் ஏற்படுத்துகிறது. 
கடந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள 58 சுனாமிகளால் இதுவரை பல லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இது ஒவ்வொரு முறை ஏற்பட்ட சுனாமியின்போது சராசரியாக 4,600 பேர் உயிரிழந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
ஜப்பானில் கடந்த 2011-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின்போது இடிபாடுகளில் சிக்கி 18,000 பேர் உயிரிழந்தனர்.
ஜப்பானில் சுனாமி, தமிழில் ஆழிப்பேரலை
சுனாமி என்பது ஜப்பான் சொல். சு (tsu) என்றால் துறைமுகம். நாமி (nami) என்றால் அலை. எனவே சுனாமி என்றால் "துறைமுக அலை" என்று பொருள். சுனாமிக்கு வேறு சில மொழிகளில் வேறு வார்த்தைகள் உள்ளன. தமிழில் “ஆழிப்பேரலை " என்று அழைக்கப்படுகிறது.
ஆக்கினஸ் மொழியில் சுனாமியை “பியுனா" அல்லது “அலோன் புலூக்" என்று அழைப்பர். “அலோன்" என்ற வார்த்தைக்குப் பிலிப்பைன்ஸ் மக்களின் மொழியில் “அலை" என்று பெயர். இந்தோனேசியாவின் மேற்கு சுமத்திரா கடற்கரையில் உள்ள சிமிலி தீவில் “சுமாங்" என்றும், சிகுலி மொழியில் “எமாங்" என்றும் அழைக்கப்படுகிறது.
சுனாமி என்பது அடுக்கடுக்கான பல அலைகளால் உருவாகும். இந்த அலைகள், கடற்பரப்பு முழுவதும் பரவி, கரையை நோக்கி, மணிக்கு 1,000 கி.மீ. வேகத்தில் சீறிப் பாய்ந்து செல்லும். இந்த அலைகளின் வேகம், ஜெட் விமானத்தின் வேகத்துக்கு சமமானதாக, சில சமயத்தில் கூடுதலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சுனாமியின் வேகம் ஒவ்வொரு முறையும் வேறுபடுகிறது.
இங்கிலாந்தைச் சேர்ந்த பள்ளி மாணவி டில்லி ஸ்மித் தனது பெற்றோர் மற்றும் ஏழு வயது சகோதரியுடன் கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கழிக்க தாய்லாந்து நாட்டில் உள்ள மைக்காவோ கடற்கரைக்கு வந்திருந்தார்.
டிசம்பர் 26, 2004-ம் ஆண்டு மைக்காவா கடற்கரையில் இருந்த சுற்றுலாப் பயணிகள் கடல் உள்வாங்குவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
கடற்கரையில் தனது சகோதரியுடன் விளையாடிக் கொண்டிருந்த டில்லி ஸ்மித், தனது பெற்றோரிடம், ‘‘நாம் தற்போது ஆபத்தில் இருக்கிறோம். சுனாமி அலைகடற்கரையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. கடற்கரையை விட்டு நாம்தூரத்தில் சென்று விடவேண்டும். சுனாமிகுறித்து எனது பள்ளியில் புவியியல்ஆசிரியர் பாடம் எடுத்தார். சுனாமி வந்தால்எப்படி முன்னெச் சரிக்கையாக செயல்பட வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார்’’ என்றார்.
உடனே டில்லி ஸ்மித்தின் பெற்றோர் கடற்கரையில் நின்று கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளை எச்சரித்தனர். இதனால் கடற்கரையில் நின்று கொண்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேறினர்.
சுனாமியிலிருந்து நூறுக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை காப்பாற்றியதற்காக பிரான்ஸின் குழந்தைகள் பத்திரிகையான மோன் கோடிடியன் 2004-ம் ஆண்டின் மிகச் சிறந்த குழந்தை விருதை வழங்கியது. மேலும் அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனிடம் பாராட்டு பெற்றார்.
இலங்கை நாடு 2004 ஆம் ஆண்டு சுனாமி நினைவார்த்த அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
பெ.விஜயகுமார்
நிறுவனர்
அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை அஞ்சல்தலை மற்றும் நாணயங்கள் சேகரிப்பாளர்*
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo