Onetamil News Logo

கொசுக்கள் மூலம் பரவும் ஜிகா வைரஸ் கேரளத்தை அச்சுறுத்தி வருகிறது 

Onetamil News
 

கொசுக்கள் மூலம் பரவும் ஜிகா வைரஸ் கேரளத்தை அச்சுறுத்தி வருகிறது 


கேரளாவில் பதிவானது ஜிகா வைரஸ் தொற்றுதான் என்பதை புனேவின் தேசிய வைராலஜி நிறுவனம் உறுதி செய்துள்ளது.
டெங்கு மற்றும் சிக்கன்குன்யா நோய்களை பரப்பும் கொசுக்களாலேயே ஜிகா வைரசும் ஏற்படுகிறது. இது ஆபத்தானது அல்ல. இதற்கு மருத்துவமனை சிகிச்சையும் தேவைப்படாது. ஆனால், மூன்று மாதம் கர்ப்பமாக இருக்கும் ஒருவருக்கு இந்த தொற்று ஏற்பட்டால், குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டு, சிறிய தலையுடன் பிறக்கலாம்.முதல் ஜிகா வைரஸ் தொற்று தமிழ்நாடு - கேரள எல்லையில் இருக்கும் பரசல்லா என்ற பகுதியில் பதிவாகி உள்ளது. மீதமுள்ளவை பெரும்பாலும் திருவனந்தபுரத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் பதிவாகி உள்ளன. சுகாதாரப் பணியாளர்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவனந்தபுரத்தில் பிரசவத்துக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த 24 வயது பெண்ணுக்குதான் முதன்முதலில் ஜிகா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது."குழந்தை சாதாரணமாக இருக்கிறது. நோயாளிக்கு வேனிற்கட்டியோடு லேசான காய்ச்சலும் இருக்கிறது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளார். பிற நோயாளிகளுக்கும் சிகிச்சை அளித்தோம். இன்றுதான் அது ஜிகா வைரஸ் என்று புனேவில் இருந்து எங்களுக்கு தெரிய வந்தது," என்கிறார் பிபிசி இந்தி சேவையிடம் பேசிய திருவனந்தபுரத்தின் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையில் தொற்று நோயியல் வல்லுநரான மருத்துவர் ராஜலட்சுமி அர்ஜுன்.
புனேவுக்கு 19 நோயாளிகளின் மாதிரிகள் அனுப்பப்பட்டன. அதில் 14 பேருக்கு ஜிகா வைரஸ் உறுதியாகி உள்ளது.
"நோயாளிகளுக்கு பொதுவாக வேனிற்கட்டிகளோடு, லேசான காய்ச்சலும் இமைப்படல அழற்சியும் இருக்கும். ஆண்கள், பெண்கள் இருவருமே பாதிக்கப்படுகின்றனர்" என்று மருத்துவர் ராஜலட்சுமி தெரிவித்தார்.
முதலில் இந்தியாவில் 2016 - 2017ஆம் ஆண்டில் ஜிகா தொற்று பரவத் தொடங்கியது.
நோயாளிகளுக்கு காய்ச்சல், தலைவலி, உடல் வலி, வேனிற்கட்டிகள் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், ஜிகா வைரசாக இருக்கும் வாய்ப்பு அதிகம் இருக்க, அந்த நோயாளிகளை தீவிரமாக கண்காணிக்குமாறு கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ், அரசு மருத்துவர்களை அறிவுறுத்தியுள்ளார்.
"பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பு" செய்யப்பட்டு, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும், குறிப்பாக கர்ப்பமானவர்கள் மற்றும் தம்பதிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருவதாகவும் பிபிசியிடம் பேசிய கேரள சுகாதாரத்துறை செயலர் ராஜன் கோப்ரகடே தெரிவித்தார்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் தேன்கனிக்கோட்டையில் முதலில் 2017ஆம் ஆண்டு ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது."இதுவரை ஜிகா தொற்று இங்கு பதிவாகவில்லை. ஆனால், நாங்கள் அதிக எச்சரிக்கையாக இருக்கிறோம். ஜிகா வைரஸ் நோயாளிகள் யாரேனும் இருந்தால், அவர்களது மாதிரிகளை சேகரிக்க மருத்துவர்களுக்கு அறிவுறுரை வழங்கியுள்ளோம்" என பிபிசியிடம் பேசிய தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
"இது வெறும் கொசுக்கடி மட்டுமல்ல. இந்த வைரஸ் ரத்தம் மாற்றம் மற்றும் பாலியல் உறவு வைத்துக் கொள்வதன் மூலம் மற்றொருவருக்கு பரவலாம்" என்கிறார் தொற்று நோயியல் வல்லுநர் மருத்துவர் மொகமத் நியாஸ்.
ஏற்கனவே கேரள மாநிலம் கொரோனா தொற்றுக்கு எதிராக போராடி வருகிறது. மற்ற மாநிலங்களைப் போல, கொரோனா பாதிப்பு இங்கு இன்னும் குறையவில்லை. சோதனை பாசிடிவ் விகிதம் 10 சதவீதமாக இருக்கிறது.
தேசிய மன நலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தின் நரம்பியல்-வைராலஜி பேராசிரியர் டாக்டர் வி.ரவி இது குறித்து பிபிசியிடம் பேசும்போது, "கொசுக் கடித்த பிறகு, ஜிகா வைரஸ் அறிகுறிகள் தோன்ற சுமார் ஒருவாரம் ஆகும். சில பெரியவர்களுக்கு நரம்பியல் கோளாறுகள் தோன்றும். இது 'கீலன் பா சின்ட்ரோம்' என்று அழைக்கப்படும் 'தன் தடுப்பாற்று நோய்' ஆகும். இதில், உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு தனது சொந்த நரம்பு மண்டலத்தை தவறாக நினைத்துத் தாக்கத் தொடங்கும். இதனால், பக்கவாதம் ஏற்பட்டு முழங்கால், முழங்கை அசைவில்லாமல் போகும்.
2017ல் குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. பிறகு, ராஜஸ்தானிலும், தமிழ்நாட்டிலும் கண்டறியப்பட்டது.
ஜிகா வைரஸ் தொற்று ஏற்பட்டாலும், அறிகுறிகள் டெங்குவைப் போலவே இருக்கும். குறிப்பாக, உடற்சோர்வு, தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி, தோல் சினைவு, கண்கள் சிவந்து போதல் ஆகிய அறிகுறிகள் ஏற்படும்.
``ஜிகா வைரஸ் தொற்றுக்கு காரணமான கொசுக்கள் பகலில் கடிக்கும். பாத்திரங்களில், பழைய டயர்களில், வீட்டின் மூலைகளில் இந்த கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும். முட்டை இருக்கும்போதே இதன் தொடர்ச்சியை அறுக்கவேண்டும். வடிகால்கள் சுத்தம் செய்யப்படவேண்டும்,'' என்றார் டாக்டர் ரவி.
ஜிகா வைரஸ் இந்தியாவில் 1950களில் இருந்தே இருக்கிறது. ஃப்ரெஞ்ச் போலினீசியாவில் முதல் முதலாக 2013-14ஆம் ஆண்டிலும், தென்னமெரிக்காவில் 2015-16லும் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது.
"ஜிகா வைரசை ஒரு தொகுப்பாக இந்தியாவில் கண்டறிவது இதுவரை முதல் முறை. இதுவரை நோய்த் தொற்று ஒற்றை இலக்கத்திலேயே கண்டறியப்பட்டன. குறிப்பிட்ட புவியியல் பரப்பில் ஐந்துக்கும் மேற்பட்டோருக்கு நோய் வந்தால் அதை நாம் தொகுப்பு என்று தொற்று நோயியலில் வரையறை செய்கிறோம்,'' என்கிறார் டாக்டர் ரவி.
ஜிகா வைரஸ் அறிகுறிகள் என்னென்ன?
இந்த வைரஸ் தொற்றால் உயிரிழப்புகள் ஏற்படுவது அரிது. தொற்று ஏற்பட்டவர்களில் ஐந்தில் ஒருவருக்குதான் அறிகுறிகள் தோன்றுவதாக கருதப்படுகிறது. லேசான காய்ச்சல், கண் சிவத்தல், வீக்கம், தலைவலி, மூட்டு வலி, தோல் சினத்தல், அரியவகை கில்லன் பா சின்ட்ரோம் மூலம் ஏற்படும் தாற்காலிக பக்கவாதம் ஆகியவை இந்நோயின் அறிகுறிகள்.
இதற்கு தடுப்பூசியோ, சிகிச்சையோ இல்லை. எனவே நோயாளிகள் ஓய்வு எடுத்துக் கொண்டு நிறைய திரவமாக அருந்தவேண்டும்.நோய்த் தொற்றியவர் கருவுற்றிருந்தால், வயிற்றில் இருக்கும் குழந்தை மீது ஏற்படும் தாக்கம்தான் கவலைக்குரியது. குறிப்பாக சிசுவுக்கு தலை சூம்பிப்போய் பிறக்கும் நிலை ஏற்படக்கூடும்.
ஜிகா வைரஸ் எங்கிருந்து வந்தது?
1947ம் ஆண்டு உகாண்டா நாட்டில் குரங்குகளில் முதல் முறையாக இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
தயார் நிலையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட 75 கோடி கொசுக்கள் - ஏன்? எதற்காக?
ஜிகா வைரஸ்: '1970களில் செய்த தவறுக்கான தற்போதைய தண்டனை'
பாக்டீரியா தொற்றிய கொசுவைப் பரப்பி வைரசை கட்டுப்படுத்தும் ஆய்வு: 77 சதவீதம் பலன்
1954ம் ஆண்டு நைஜீரியாவில் முதல் முதலாக மனிதர்களிடத்தில் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா, பசிபிக் தீவுகள் ஆகிய பகுதிகளில் தொற்று பரவியது. இதெல்லாம் சிறிய அளவில் பரவியவையே. இதற்கு முன்பு மனித உடல் நலனுக்கு சீரியசான அச்சுறுத்தலாக ஜிகா வைரஸ் கருதப்பட்டதில்லை. ஆனால், 2015ல் பிரேசிலில் பரவியது முதல் இந்த நோய் வேகமாகப் பரவிவருகிறது.
இந்த நோய் எப்படிப் பரவுகிறது?
ஏடீஸ் வகை கொசு மூலம் இது பரவுகிறது. டெங்கு, சிக்குன்குன்யா நோய்களைப் பரப்புவதும் இதே வகை கொசுக்கள்தான். கனடா, சிலி தவிர அமெரிக்க கண்டம் முழுவதிலும், ஆசியா முழுவதிலும் இந்த கொசுக்கள் காணப்படுகின்றன. கனடா, சிலி ஆகிய இரு நாடுகளும், இந்தக் கொசுக்கள் வாழ முடியாத அளவுக்கு குளிர்ச்சியானவை. மலேரியாவை பரப்பும் கொசுக்களைப் போல அல்லாமல் இவை பகல் பொழுதில் செயல்படுகிறவை. இதனால், கொசு வலையால் போதிய பலன் கிடைக்காது.
தொற்று ஏற்பட்ட ஒருவரை இவை கடித்தால், பிறகு கடிக்கிற நபர்களுக்கு இந்த தொற்றை அவை பரப்பும். பாலுறவின் மூலமாகவும் ஜிகா வைரஸ் பரவும் சாத்தியம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
எவ்வளவு நாளைக்கு இந்த தொற்று இருக்கும்?
தொற்று ஏற்பட்டவர்கள் ஒரு வார காலத்துக்கு கொசுக்கள் மூலம் இந்த வைரசை பரப்பும் ஆபத்து உள்ளது என்று காட்டுவதற்கான ஆதாரங்கள் உள்ளன.
இந்தியாவில் கொசு ஒழிப்பு நடவடிக்கையாக ஒரு குடியிருப்புப் பகுதியில் புகை அடிக்கும் உள்ளாட்சி ஊழியர்.
நோய்த் தொற்று ஏற்பட்டவர்கள் 2 வாரங்களுக்கு விந்து மூலமாக இந்த நோயைப் பரப்ப முடியும். பல நாடுகள் பாதுகாப்பான உடலுறவு கொள்ளும்படி அறிவுரை கூறுகின்றன. குறிப்பிட்ட சில நாடுகளுக்குப் போய் வந்தால் ஒரு மாதத்துக்கும், தொற்று அறிகுறி ஏற்பட்டால் அதை விட நீண்ட காலத்துக்கும் ரத்த தானம் செய்வதை சில நாடுகள் தடை செய்துள்ளன.
மக்கள் என்ன செய்யலாம்?
சிகிச்சை ஏதுமில்லை என்பதால், கொசுக்கடியை தவிர்க்க ஆனமட்டும் முயற்சி செய்வதுதான் ஒரே வழி. பூச்சிவிரட்டிகளைப் பயன்படுத்தும்படி அதிகாரிகள் அறிவுரை கூறுகிறார்கள். முழுக்கை சட்டைகளைப் பயன்படுத்தும்படியும், ஜன்னல், கதவுகளை மூடிவைக்கும்படியும் அறிவுறுத்துகிறார்கள்.
நிற்கும் தண்ணீரில் இந்த கொசுக்கள் முட்டையிடுகின்றன. எனவே, வாளி, பூத்தொட்டி போன்றவற்றை காலி செய்யும்படி மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பயணம் செல்லவேண்டாம் என்று அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தியுள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo